தாகிக்கும் வேர்களின் மெளன விசும்பல்!

புத்தகங்களுக்குள்
மூழ்கும் விழிகளில்
யுகங்களின் துயரம்...

அலுவலக
மேலதிகரியாயினும்
தலையில் முள் கிரீடம்...

அடுக்களையில்
வெந்து வெந்து
கருகிய வாடை
இதயத்தில்...

தொண்டைக்குள்
சிக்கிய மீன் முள்ளாய்
வார்த்தைகளில்
இரத்தக்கசிவு..

பொங்கிப்பிரவகிக்கும்
அறிவு சமுத்திரமாயினும்
சமூகத்தின் முள்வேலிகளில்
கிழியாமல் பார்த்துக் கொண்டே
பிரசவமாகிறது அவளது
சிந்தனை அலைகள்...

அவள் வேரால்
உறிஞ்சிக் கொண்டே
துளிர்விடும் கிளைகள்...
மொட்டுக்கள்... பூக்கள்...
ஆனாலும்
அவள் எப்போதும்
மண்ணுக்குள்
தாகத்தோடு தான்...

வேருக்குதான்
பூக்களும்
கிளைகளும் சொந்தம்..
ஆனால் முகவரி கூட
வேர்களுக்கு கிடைப்பதில்லை...
காற்றோடு கைகோர்க்கும்
கிளைகளுக்கும்
பூக்களுக்கும்
வேர்களின் கேள்விகளுக்கு
பதிலளிக்க நேரமேது?
இந்த முடிவிலிப் பயணத்தில்..

அவளின் கனவுகள்
சில இலட்சியங்கள் மட்டும்
நினைவுகளின் அரியணையில்
மிடுக்காய் அட்டனக்கால் போட்டு
அமர்ந்திருக்கும்...

முகத்திற்கு பின்னால்
முள்வேலிகளுக்குள் தான்
அவள் வாழ்வு...

-சங்கரி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.