தமிழுக்கு வருகிறேன்: பிரபாஸ் வாக்குறுதி!

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் சுமார் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். அருண் விஜய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தைத் தமிழில் விளம்பரப்படுத்தும் முயற்சியில் படக்குழு சென்னையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரபாஸ், “சாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை. அது படமாகப் பார்க்கும்போது இன்னும் புரியும் என நினைக்கிறேன். 'சாஹோ' படத்துக்காக இரண்டு வருடங்கள் கொடுக்க வேண்டும் என நினைக்கவில்லை. பாகுபலி படத்துக்குப் பிறகு நல்ல படங்கள் பண்ண வேண்டும் என நினைத்தேன். சுஜித் சொன்ன கதை அப்படியிருந்தது. தயாரிப்பாளரும் நிறைய முதலீடு பண்ணிவிட்டார்கள். ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சிக்கும் நிறைய முன் தயாரிப்பு இருந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹாலிவுட் எனப் பல இடங்களைச் சேர்ந்த சண்டைக் காட்சி இயக்குநர்கள் இதில் பணிபுரிந்துள்ளனர். அதற்காக நேரம் கொடுக்க வேண்டும்.

அபுதாபி, இத்தாலி, இந்தியா மற்றும் பல்வேறு ஐரோப்பா நாடுகளிலும் படப்பிடிப்பு செய்துள்ளோம். இங்கு தான் பிறந்தேன். ஆகையால் நேரடி தமிழ்ப் படம் பண்ண வேண்டும் என்ற ஆசையுள்ளது. கூடிய சீக்கிரம் நடக்கும்” என்று கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகிலிருந்து அருண் விஜய்யைப் படக்குழுவில் இணைத்தனர். அவர் படத்தில் இணைந்து நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். “இந்தப் படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷம். பெருமைப்படக்கூடிய படைப்பில் நானும் இருக்கிறேன். சுஜித் சார் என்னிடம் கதை சொல்லும்போதே 'இந்தக் கேரக்டர் நீங்க பண்ணீங்கன்னா நல்லாயிருக்கும் என்று பிரபாஸ் அண்ணா சொன்னார்' எனக் கூறினார். அப்போதே இந்தப் படத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என முடிவு பண்ணினேன்.

'என்னை அறிந்தால்' படத்துக்குப் பிறகு நிறைய தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். முதன்முறையாக இந்தியில் பேசி நடித்துள்ளேன். சுஜித் சார் பார்க்க ரொம்ப சிம்பிளாக இருப்பார். ஆனால், நிறைய நடிகர்கள், படப்பிடிப்பு தளங்களைக் கையாளக்கூடிய விதம் சிறப்பாக இருக்கும். அதற்கு நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு, சுஜித் மீது பெரிய நம்பிக்கை வைத்து பிரபாஸ் சார் இந்தப் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி. பாகுபலிக்குப் பிறகு நிறைய பெரிய இயக்குநர்களுடன் படம் பண்ணியிருக்கலாம். அடுத்தக் கட்டம் எப்படி என்பதில் ரொம்ப தெளிவாக இருந்திருக்கிறார். பிரபாஸ் உடன் பணிபுரிந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. ரொம்ப எளிமையான மனிதர்.

இந்தப் படத்தின் லுக்கை வைத்துக்கொண்டே 'செக்கச் சிவந்த வானம்' மற்றும் 'தடம்' படங்களில் நடித்தேன். ஏனென்றால் இதில் ஒப்பந்தமாகிவிட்டதால் என்னால் லுக்கை மாற்ற இயலவில்லை. அனைவருமே பெருமைப்படக் கூடிய படமாக இருக்கும்” என்று அருண்விஜய் பேசினார்.

பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர், “இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம். நான் இதற்கு முன் ஓகே கண்மணி ரீமேக்கில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் அருவி என்ற படம் பார்த்தேன். எப்போதும் ஷூட்டிங்கிலேயே இருப்பதால் நிறைய படங்களைப் பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. இந்தப் படத்துக்காக இயக்குநர் என்னைத் தேர்வு செய்தது என்னுடைய அதிர்ஷ்டம். கதையைக் கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதிலும் பிரபாஸ் நடிக்கிறார் என்றும் இதுவொரு மும்மொழி திரைப்படம் என்று கூறியதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதால் நிறைய ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. முதன்முதலாக துப்பாக்கி பிடித்து நடித்தது கடினமாக இருந்தது. என் கைகள் சிறியதாக இருப்பதால் துப்பாக்கியைப் பிடிக்கும்போது அவை மிகவும் நடுங்கும். படத்தில் தான் நம்மால் கெட்டவர்களை அடிக்க முடியும். அதை நான் சிறப்பாகச் செய்துள்ளேன்” என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.