இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்.!!

வருடாவருடம் நாமும் இதை நினைவூட்டுவதும் ஆனால் எந்த மாற்றமுமின்றி சாவுகள் தொடர்வதும் வழமையாகி விட்டது.


சலிப்புத்தான் மிச்சம்.

 2009 இற்கு பிறகு மாதம் குறைந்தது பத்துப் பேரையாவது நாம் தற்கொலைச் சாவிற்கு  ஒப்புக் கொடுத்து வருவது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இந்த சாவுகளுக்கும் இன அழிப்பிற்கும் தொடர்பிருக்கிறது என்று நாம் சொல்லி,  இருக்கிற பட்டங்கள் காணாது என்று இலவச இணைப்பாக மேலதிகமாக முட்டாள் பட்டம் சூட்டிக் கொண்டதுதான் மிச்சம்.

ஆனாலும் யாராவது ஒருவராவது விழித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பதிவிடுகிறோம்.

இது கடந்த வருட பதிவு.

உண்மையிலேயே மே 18 இற்கு பிறகு தமிழீழத்தில் பெரும் விழிப்புணர்வுடன் கொண்டாடப்பட வேண்டிய தினம் இதுதான்.

கடந்த ஒன்பது வருடங்களாக  நாம் நீண்ட ஆய்வுகளையடுத்து தொடர்ந்து கவனப்படுத்தி வருகிற விடயம் இது. ஆனால் வழமைபோல் தாயகத்தில் இந்த நாளை யாரும் கண்டுகொள்ளவில்லை. சமுக வலைத்தளங்களில்கூட இது குறித்த உரையாடல் எதையும் காணமுடியவில்லை.

ஏனென்றால் மே 18 இற்கு பிறகு இனஅழிப்பு நோக்குடன் பலவழிகளிலும் நெருக்குதல்களை கொடுத்து தமிழ் மக்களை - போராளிகளை மனச்சிதைவுக்குள்ளாக்கி அவர்களை தற்கொலையை நோக்கி உந்தித் தள்ளுகிறது இனஅழிப்பு அரசு.

நாம் தினமும் பார்க்கும் தற்கொலைச் சாவுகள் இனஅழிப்பு பின்புலத்தை கொண்டவையே..

எனவே தமிழர் தரப்பு விழித்துகொண்டு இந்த மரணங்களை கட்டுப்படுத்துவதனூடாகவே இனஅழிப்பிலிருந்து தப்புவது மட்டுமல்ல ஒரு ஆரோக்கியமான சமூகமாக உருவாக முடியும்.

இந்த நாளில் உளவியல் ஆற்றுப்படுத்துகையின் முக்கியத்துவத்தை உணர்வதுடன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் குறிப்பாக பெண்களுக்கு உளவளத்துணை ஆலோசனைகளை வழங்கி அவர்கள் வாழ்வதற்கான இருப்பை ஏனையவர்கள் உறுதி செய்ய வேண்டும்..

போராளிகளின் /மக்களின்  அனாமதேயமான மரணங்கள் தொடர்பாக நாம் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளோம். விசஊசி விவகாரத்தை அடுத்து இது குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றாலும் அது முழுமையானது என்று கூற முடியாது.

குறிப்பாக இனஅழிப்பு நோக்கில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தபட்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பல போராளிகளும்/ மக்களும் தற்கொலை செய்து தம்மை மாய்த்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நாம் தமிழினியின் மரணத்தை அடுத்து 99,100 என்று கணக்கிடத் தொடங்கியிருக்கிறோம். ஆனால் இந்த தறகொலை சாவுகளையும் கணக்கிட்டால் அது வேறு ஒரு அதிர்ச்சியான புள்ளிவிபரத்தையே நமக்கு தருகிறது.

உலக இனவிகிதாசார அடிப்படையில் பின் முள்ளிவாய்க்கால் சூழலில்  அதிகளவிலான தற்கொலை சாவுகளை தமதாக்கி கொண்டுள்ளது ஈழத்தமிழினம். இது தொடரும் இனஅழிப்பை உறுதி செய்கிறது.

முன்னாள் போராளிகளிடேயே இயங்கும் ஒரு தன்னர்வ தொண்டு நிறுவனம் முன்னாள் போராளிகள் பெரும் கடன் சுமையுடன் இருப்பதாகவும் அதனால் பெரும் மனச்சிதைவுக்குள்ளாவதாகவும் விளைவாக பலர் தற்கொலையை நோக்கி தள்ளப்படுவதாகவும் அண்மையில் எச்சரித்திருந்திருந்தது.

இது இனஅழிப்பு அரசின் ஒரு தந்திரம் என்பதை நாம் முன்பு கண்டறிந்து பலரை எச்சரித்தும் எந்த பலனுமில்லை.

குறிப்பாக பெண்களின் தற்கொலை விகிதம் அதிகரித்திருப்பது அச்சமூட்டுகிறது. ஒரு இனத்தின் ஆதாரமும் அடிப்படையும் பெண்கள்தான். அதுதான் பெண்களை குறிவைத்து தனது காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது இனஅழிப்பு அரசு.

விதவைகள் மற்றும் அரை விதவைகள் என்ற ஒரு நிலையை இனஅழிப்பு அரசு நுட்பமாக தொடர்ந்து பேணுவதால் சமூக புறக்கணிப்பு , உடல் நோய் மற்றும் உளவியற் சிக்கல்களுடன் நிலம் பறிக்கப்பட்டு வாழ்வாதராம் சுரண்டப்பட்டு பொருண்மிய சிக்கல்களையும் சந்திக்கும் எமது பெண்களின் நிலை வார்த்தை வெளிகளுக்கு அப்பாற்பட்டது.

மே 18 ற்கு பிறகான பல பொருளாதார வாழ்வியற் சிக்கல்களுடன் பல உளவியற் சிக்கல்களும் பாலியல் முரண்பாடுகளுமாக எமது இனத்து பெண்களின் வாழ்வு சூறையாடப்படுகிறது. இது பல சமூக சீரழிவுகளுக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கும் வழிவகுக்கிறது.

விளைவாக ஒரு கட்டத்தில் தற்கொலையை நோக்கி அவர்கள் உந்தித் தள்ளப்படுகிறார்கள்.

இதை விரிவாக ஆய்வு செய்து எமது பெண்களுக்கான சமூக அந்தஸ்து, சுய பாதுகாப்பு பொறிமுறை என்பவற்றை உருவாக்க கடுமையாக போராடி வரும் எம் போன்றவர்களே இந்த மாதிரியான பெண்களின் வாழ்வியலுக்குள் ஊடுருவி  ஆலோசனைகளை வழங்க எத்தனிக்கும்போது அவர்களின் ஊனப்பட்ட உளவியலின் உக்கிரம் தாங்காமல் தள்ளாட வேண்டியிருக்கிறது.

அந்தளவிற்கு மக்களினதும் போராளிகளினதும் உளவியல் இனஅழிப்பு நோக்கில் ஊனப்படுத்தப்பட்டிருக்கிறது - தொடர்ந்து ஊனப்படுத்தப்படுகிறது.

விளைவாக தற்கொலை என்ற பெயரிலும் நாம் அழிந்துகொண்டிருக்கிறோம்.

இனியாவது விழித்துக்கொள்வோம்.

இனஅழிப்புக்கு அனைத்துலக விசாரணையை கோரும் அதே சமயம் அனைத்துலக மருத்துவ குழு ஒன்றின் கீழ் இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்த மக்களையும் போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துவது மட்டுமல்ல அவர்களுக்கு உளவளத் துணை ஆலோசனைகளும் சீராக வழங்கப்பட வேண்டும் வேண்டும் என்ற கோரிக்கைக்கு தொடர்ந்து வலுச்சேர்ப்போம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.