தந்தைமை......! சிறுகதை!

காலைச்சூரியன் தன் கதிர்களைப் பரப்பி உலகைக் கைப்பற்றிக் கொண்டிருந்தான். பனித்துளிகள் பட்டு புல்வெளி வெண்மேகம் போல காட்சியளித்தது. மெல்லிய குளிர் உடலை வருட சாய்வு நாற்காலியில் அமர்ந்து பத்திரிகை ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார் அருணாசலம். 


அருணாசலம் - காவேரி தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள். வசதி வாய்ப்பிற்கு குறைவில்லை. பிள்ளைகள் இருவரும் ஆங்கிலப் பாடசாலையில் படித்து பட்டம் பெற்றவர்கள். மூத்த மகன் அனாதியன் பொறியியலாளனாகவும் மகள் ஆதர்சா வைத்தியராகவும் கடமையாற்றிக் கொண்டிருந்தனர். பிள்ளைகளினால் பெற்றவர்கள் பெறும் பெருமையை அனுபவித்து மகிழ்வாக வாழ்ந்தனர் இருவரும். அப்போதுதான் மகன் அனாதியனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தனர்.

பணமும் அந்தஸ்த்தும் உயர் பதவியும் கொண்டிருந்த அவனுக்கு அதே போன்ற பல பெண்களை வரனாகப் பார்த்தும் ஏனோ ஒன்றுமே சரியாக அமையவில்லை. ஏதாவது குறை இருந்தது. அப்படியே வந்த வரன்கள் எல்லாம் தட்டிப்போக சாதாரண குடும்பத்துவரன் என தரகர் வேறு யாருக்கோ பார்ப்பதற்காக கொண்டுவந்திருந்த வரன் தற்செயலாக அருணாசலத்தாரின் பார்வையில் பட்டது. “சாதாரண குடும்பம்னு தரகர் சொல்றார், அதை எதுக்கு பாக்கச் சொல்றீங்க”, மனைவி தடுத்தபோதும் “பரவாயில்லை, சும்மா பாக்கிறது தானே,” என்றார்.


பெண்ணுடைய பெயர் பூவிழி. அனாதியனுக்கும் பூவிழிக்கும் பத்துப் பொருத்தமும் அமோகமாய் பொருந்தியிருந்தது, ஆனால் வீட்டில் அருணாசலத்தாரைத் தவிர யாருக்கும் பிடிக்கவில்லை. அனாதியன் ரொம்பவும் கோபப்பட்டான்.  “அப்பா, எனக்கு இப்பிடி ஒரு பெண் மனைவியா? என்னால முடியாது” என்றவனிடம் அதிகம் பேசாமல் “நான் உன் அப்பாடா, உனக்கு நல்லது தான் செய்வன்,” என்றார்.


மகள், ஆதர்சாவும் “என்னப்பா நீங்கள், அண்ணாவுக்கு இப்பிடி படிப்பு குறைஞ்ச வசதி இல்லாத பெண்ணைப் பாத்து இருக்கீங்க,” என்றாள்.
“அப்பா இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது கெடுதல் செய்திருக்கிறனா? இல்லைத்தானே, பிறகு ஏன் இந்த விசயத்தில எல்லோரும் அப்படி நினைக்கிறீங்க, என்னவோ தெரியல, உன் அண்ணாவுக்கு அவ தான் ஏற்ற பெண் என்று என் மனசு சொல்லிச்சு, அதுதான்,” என்றார்.


அப்பாவைத் தவிர வேறு யாருக்கும் விருப்பமில்லை என்ற போதும் வேறுவழியின்றி பூவிழிக்கும் அனாதியனுக்குமான திருமணம் நிச்சயமாகியது. மாமியாரும் மைத்துனியும் ஏன் கணவனாகப்போகிற அனாதியனும் கூட அவ்வளவாக பேசாதது பூவிழியின் மனதிற்குள் சின்ன உறுத்தலாகவே இருந்தது. ஆனாலும் "பூவிழியம்மா..... பூவிழியம்மா" என அன்பு பெருக அழைக்கும் மாமனாரைப் பார்க்கும் போது மற்ற எல்லாமே மறைந்துபோனது அவளுக்கு. ஒரு நல்ல நாளில் அனாதியன் - பூவிழி திருமணம் இனிதே நடந்தேறியது. ஒரு மருமகளாக அந்த வீட்டில் கால் பதித்தாள் பூவிழி.
“அம்மா பூவிழி கொஞ்சம் தண்ணி கொண்டுவாம்மா” என்ற மாமனாரிடம் “இதோ கொண்டுவர்றன் அப்பா” என்றாள். அவளது அப்பா என்ற வார்த்தையில் ஒரு கணம் சிலிர்த்துப் போன அருணாசலத்தார்,

“என்னம்மா சொன்னே?” என்றார். “தண்ணி கொண்டு வர்றேன்னு சொன்னேன், ஏன் அப்பா?” என்றாள். “ஒண்ணுமில்லை” என்றார். 
அந்த நொடி,  தான் புதிதாய் பிறந்தது போல உணர்ந்தார். 

பூவிழி-----பூவிழி ------பூவிழி என அந்த வீட்டில் ஓயாது அவளது பெயர் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். முதலில் மாமியாரும் மைத்துனியும் அவளிடம் பாராமுகம் காட்டியதென்னவோ உண்மைதான், ஆனால் இரண்டு நாட்களிலேயே பூவிழியின் அன்பும் பரிவான பேச்சும் அவர்களைச் சரியாக்கிருந்தது. திருமணமான மறுநாளே அவசரமான மருத்துவ கலந்துரையாடல் எனக்கூறி வெளிநாடு சென்றுவிட்ட கணவனைத் தவிர மற்ற அனைவரும் அவளை வேற்றாளாக நினைக்கவில்லை. அவளது அமைதியான ஆளுமையும் அடக்கமான பண்பும் அந்த வீட்டில் இருந்தவர்களை மட்டுமன்றி அவர்களின் உறவுகளையும் அவளின் பால் ஈர்த்திருந்தது.


“நானோ அண்ணாவோ கூட உங்களை அப்பான்னு சொல்றதில்லை, டாட் ன்னு தான் கூப்பிடுவோம். இந்த பூவிழி மட்டும் உங்களை அப்பா அப்பான்னு வாய் ஓயாம கூப்பிடுறா, நீங்களும் ரொம்பத்தான் உருகுறீங்களே டாட்” மகளின் கேள்வியில்  புன்னகை செய்த அருணாசலத்தார், “அவளோட அப்பா என்ற அழைப்பில ஏதாவது கள்ளத்தனம் இருக்கிறதா உனக்குத் தெரியுதா” என்றார்.

“இல்லப்பா----நான் அப்பிடி சொல்லல, அப்பான்னு அவ சொன்னதும் நீங்க அப்பிடியே உருகிப்போய்டுறீங்க, எங்க இடத்தை அவ பிடிச்சிடுவாளோ என்று பயமா இருக்கு,” என்ற மகளை அன்பாய் பார்த்தவர் “அப்பா என்ற வார்த்தை எவ்வளவு அர்த்தம் உள்ளது தெரியுமா, அந்த வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் நான் புதுசா பிறக்கிறமாதிரி இருக்கும். அது அனுபவிக்கும் போது மட்டுமே உணரக்கூடிய ஒரு உணர்வு,  அத இப்ப உன்னால புரிஞ்சுகொள்ள முடியாதும்மா, தாய்மை எவ்வளவு உன்னதமோ தந்தைமையும் அந்தளவு உன்னதமானதே அதுமட்டுமில்லடா,  மகன் பிறக்கும் போதும் அப்பா என அழைக்கும் போதும் இருக்கும் ஆனந்தத்தைக் காட்டிலும் மருமகள் வந்து வீட்டில் நடமாடும் போதும் மாமனார் மாமியாரை அப்பா, அம்மா என அழைக்கும் போதும் ஏற்படும் பேரானந்தத்திற்கு அளவேயில்லை” என்றார்.

‘அப்பா' என்ற உச்சரிப்பின் மகத்துவம் தந்தை சொல்லக்கேட்ட ஆதர்சா தானும் அவரை அப்பா என்று அழைத்திருக்கலாமோ’ என நினைத்தாள்.  

 பத்து நாட்களின் பின் வீடு திரும்பிக்கொண்டிருந்த அனாதியனின் கார் விபத்திற்குள்ளானதில் பெரும் காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டான். உடைந்து போய்விட்ட மாமனார் மாமியாரைத் தேற்றி மைத்துனிக்கு ஆறுதல் சொல்லி அந்த துயரமான நேரத்தில் எல்லோரையும் பார்த்துக்கொண்டவள் பூவிழிதான். ‘இவமட்டும் எப்பிடி இப்படி கல்லு மாதிரி இருக்கிறாளோ’ எனவும் ‘இவ வந்த நேரம் இப்பிடியெல்லாம் ஆகிட்டுது’ என்றும் விதண்டாவாதம் பேசிக்கொண்டவர்களும் உண்டு. அவளது காது கேட்கும்படியாகவே சிலர் பேசியபோதும் எதையும் பொருட்படுத்தாது மௌனமாகவே கடந்துவிட்டாள். மாமியாருக்கு கூட மருமகள் பூவிழி மீது கோபம் இருக்கத்தான் செய்தது. அவள் வந்தநேரம் தான் மகனுக்கு இப்படி ஆகிவிட்டது என எண்ணியவர் அந்த வெறுப்பையும் கோபத்தையும் அவள்மீது காட்டவே செய்தார்.

அந்த விபத்து நடந்து பத்து நாட்கள் ஓடிவிட்டன. அன்று தான் அனாதியனை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. வைத்தியசாலையில் இருக்கும் வரை அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஆனாதியன். எல்லோரும் சொல்வது போல தன்னுடைய பலன் தான் கணவனுக்கு இப்படி ஒரு நிலையைத் தந்திருக்கிறதோ, அதனால்தான் கணவன் பேசவில்லையோ என எண்ணியவள், அவர்களுடன் வீட்டிற்குச் செல்ல விரும்பவில்லை.
வைத்தியசாலையில் அவள் இல்லையென்ற போதும் யாரும் பெரிதாக எண்ணவில்லை, வீட்டிற்குப் போய்விட்டாள் என எண்ணி மற்ற அனைவரும் புறப்பட்டனர். வீட்டிற்கு வந்து பார்த்தால் அங்கே அவள் இல்லை. அந்த நேரத்தில் யாரும் பெரிதாக எண்ணவில்லை. எதற்கும் பூவிழியைக் கூப்பிட்டுப் பழகிவிட்ட அருணாசலத்தார் “பூவிழியம்மா -----  பூவிழியம்மா” என பல தடவைகள் அழைத்தும் பதில் இல்லை. இலேசாக பயம் கௌவ்வியது அவரை. மகளை அழைத்துக் கேட்டார்,

“தெரியவில்லையே டாட்” என்றாள் பெண். மனைவியிடம் கேட்டார்.  தெரியாது என்பதே பதிலாக வந்தது. அருணாசலத்தார் கோபத்தின் எல்லையில் இருந்தார். “உன்னுடைய வார்த்தைகள் தான் அவளைக் காயப்படுத்தி விட்டன, உன் மீது தான் எனக்கு கோபமாக இருக்கிறது,” என மனைவியிடம் கூறியவர், “எல்லோரும் ஒரு விசயத்தைக் கேட்டுக் கொள்ளுங்கள், இந்த வீட்டில் என் மருமகள் வாழக்கூடாது என்பது உங்களில் யாருக்காவது எண்ணமாக இருந்தால் சொல்லிவிடுங்கள், பரவாயில்லை, அவள் வெளியே போகட்டும், ஆனால் அவளுக்கு அப்பாவாக நானும் அவளுடன் போய்விடுவேன்,” என்றார். கேட்டுக்கொண்டிருந்த மூவருக்கும் அதிர்ச்சி,

மனைவியைக் காணவில்லை என்பதே அனாதியனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது, ஆரம்பத்தில் அவள் மீது வெறுப்பு இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் இப்போது, அவளது ஒவ்வொரு செயலும் அவனை மாற்றிவிட்டதே,  வீட்டிற்கு வந்து முற்றாக குணமாகிய பின்னர் கணவனாகத்தான் அவளோடு பேசவேண்டும் என எண்ணித்தான் அவளிடம் பேசாமல் விட்டது, ஆனால் அவனோடு வாழ அவள்?

“அப்பா” அவனது புதிய அழைப்பில் திடுக்கிட்டுத் திரும்பினார் அருணாசலத்தார். “உங்கள மாதிரியே நல்ல அப்பாவா நான் வாழணும், என் மருமகள் அப்பா என்று கூப்பிடும் போது நான் பூரிச்சுப் போகணும், என் பூவிழி எனக்கு வேணும்பா அந்த விபத்துக்கு என்னோட கவனயீனம் தான் காரணம், அவளால இல்லப்பா” என்றான். 

மகனின் தலையைத் தடவிவிட்டு நிமிர்ந்தவர் வாசலில் தந்தையுடன் நின்ற மருமகளைக் கண்டதும் பேருவகை அடைந்தார். 
“இந்த வீட்டில சுமையா இருக்கவேணாமே எண்டு நினைச்சுத்தான் எங்கட வீட்டுக்குப் போய்ட்டன், என்னை மன்னிச்சிடுங்கோ அப்பா” என்றாள் அருணாசலத்தாரின் கரங்களைப் பற்றியபடி. 

இந்த வீட்டில உனக்கு என்ன அசௌகரியம் ஏற்பட்டாலும் இந்த அப்பாவிடம் சொல்லுமா, உன் புருசனானாலும் சரி” என்றார் மகனைப் பார்த்தபடி.
வெட்கத்தில் சிவந்துபோன பூவிழி மாமியாரின் அருகில் சென்று அவரது கரங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். அவளை இறுக்கமாய் அணைத்த காவேரி “எங்களைவிட அவர் மனசில் உனக்குத்தான் ரொம்ப இடம் இருக்கு, அதனால இந்த வீட்டோட மகாராணி  நீதான்” என்றார்.
அவசரமாய் கணவனை நிமிர்ந்து பார்த்தாள், பெற்றவர்கள் மனதில் இடம்பிடித்துவிட்ட மனைவியை எந்த கணவனுக்குத்தான் பிடிக்காது, கண்களைச் சிமிட்டி வாழ்த்துக்களைக் கூறிய கணவனை நன்றியோடு பார்த்தாள் பூவிழி.

அன்றிலிருந்து பிள்ளைகளும் அருணாசலத்தாரை அப்பா என அழைக்கத் தொடங்கினர். “அப்பா----அப்பா-----அப்பா” அந்த வார்த்தை வீடு முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. 

கோபிகை
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.