முன்னாள் போராளிகளுடனான சந்திப்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்!!

இன்று முற்றுமுழுதாகச் சமூகக் கட்டமைப்புக்கள் சிதைவடைந்து போயுள்ள எமது இனத்தின் துயர்நிலையை மாற்றி எழுதக் கூடிய சக்தி வாய்ந்தவர்களாகவே உங்களைப் பார்க்கின்றேன்.
நீங்கள் கோலோச்சிய காலத்தில் யுத்த இடர்நிலைகளுக்குள்ளும் எமது மக்கள் சுதந்திரமாகவும் கலை கலாச்சார பண்பாட்டுக் கட்டுக்கோப்போடும் வலம் வந்ததை அதிசயத்துடன் நினைத்துப் பார்க்கின்றேன். எமது கல்வி நிலை அன்றிலிருந்து சிறுகச் சிறுகச் சறுகிக் கீழ்மட்டத்திற்குத் தற்போது வந்துள்ளது“

இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன்.

இன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்ற முன்னாள் போராளிகளுடனான சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலங்காலமாக ஆட்சிப்பீடமேறிய இலங்கை அரசுகளால் தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் வந்திருக்கின்றனர். அதன் எதிர்க்கோணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்கின்ற வரலாற்று உண்மையை காலம் நன்கு பதிந்து வைத்திருக்கின்றது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்ற சிங்களத் தலைவர்கள் அன்பைப் போதிக்கும் பௌத்தத்தின் வழி தொடர்பவர்களாக, உண்மையான பௌத்தர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுதமேந்த நேரிட்டிருக்காது என்று தம்பி பிரபாகரன் கூறியிருந்தார். அதேபோல் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைவிடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் அதிக கரிசனை காட்டாது அரச ஒத்தோடிகளாக விலைபோனமையே தமிழர்களின் இன்றைய துயர் நிலைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது என்று கூறலாம். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற புறநானூற்றுக் கூற்றுக்கு இலக்கணமாக எம்மவர் ஆகிவிட்டுள்ளமை நெஞ்சுக்கு வலியூட்டுகின்றது.

பிறந்த தாய் நாட்டிற்காகவும் உங்கள் மக்களுக்காகவும் இளமைக் காலங்களைத் துறந்து உங்களுடைய உயிர் உடல் உடமை அனைத்தையும் மக்களுக்காக அர்ப்பணிப்பதாக உறுதிபூண்டு கடந்த காலங்களில் நீங்கள் ஆற்றிய சேவைகள் காலத்தின் கணிப்பில் மக்கள் மனதில் உயர் நிலையில் பதியப்பட்டிருக்கின்றன.

நீங்கள் கோலோச்சிய காலத்தில் யுத்த இடர்நிலைகளுக்குள்ளும் எமது மக்கள் சுதந்திரமாகவும் கலை கலாச்சார பண்பாட்டுக் கட்டுக்கோப்போடும் வலம் வந்ததை அதிசயத்துடன் நினைத்துப் பார்க்கின்றேன். எமது கல்வி நிலை அன்றிலிருந்து சிறுகச் சிறுகச் சறுகிக் கீழ்மட்டத்திற்குத் தற்போது வந்துள்ளது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காக நடாத்தப்பட்ட ஆயுதவழிப் பயணமானது 2009ம் ஆண்டு மே மாதத்துடன் மௌனிக்கப்பட்டது. எனவே இன்று தமிழ் மக்கள் ஜனநாயக அரசியல் வழிப் பாதையையே முழுமையாகச் சார்ந்தும் நம்பியும் பயணிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒரு மாபெரும் இனவழிப்புக்குள்ளாக்கப்பட்ட எம் இனம் அந்த இன அழிப்பினை சர்வதேசத்தின் மனச்சாட்சிகளின் முன் முன்னிறுத்தி இனவழிப்பிற்கான நீதியைப் பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியப்பாடுகள் அமைந்திருந்தன. இனவழிப்பாளர்களை சர்வதேச நீதிமன்றின் முன் முன்னிறுத்தி சர்வதேச வழிமுறையினூடான தீர்வினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் அமைந்திருந்தன. எமது மக்களால் பெரிதும் நம்பப்பட்ட அரசியல் தலைமைகள் பொறுப்புணர்ந்து செயற்படாமையின் விளைவுகளை இனவழிப்பின் பத்தாண்டுகள் கடந்தும் அனுபவித்து வருகின்ற துயர்நிலையைக் கொண்டவர்களாக நாம் இன்று வாழ்ந்து வருகின்றோம்.

இன்று முற்றுமுழுதாகச் சமூகக் கட்டமைப்புக்கள் சிதைவடைந்து போயுள்ள எமது இனத்தின் துயர்நிலையை மாற்றி எழுதக் கூடிய சக்தி வாய்ந்தவர்களுள் ஒரு குழுமமாகவே நான் உங்களைப் பார்க்கின்றேன். இன்று ஒரு இக்கட்டான அரசியல் சூழ்ச்சிக்குள் சிக்கி உள்ள எமது இனத்தின் மீட்சிக்காக, ஜனநாயக அரசியல் வழி நின்று பயணப்பட உங்களின் சேவையை நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன். இது எனது அவா மட்டுமல்ல. ஒட்டுமொத்த இனத்தினதும் எதிர்பார்ப்பாகவே அமைந்திருக்கின்றது என்பது எனது கருத்து.

நாம் இன்று எமக்கான ஒரு கொள்கைப் பற்றுறுதியுடைய அரசியல் கட்டமைப்பொன்றை ஒருமித்துக் கட்டியெழுப்ப வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தேவையற்ற விமர்சனங்களையும் உள்ளார்ந்த முரண்பாடுகளையும் களைந்து ஒன்றாகப் பயணிக்க வேண்டிய நம்பிக்கை மிகுந்த சந்திப்பாகவே இச்சந்திப்பைக் கருதுகின்றேன். அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் விடிவுக்காகப் பயணிக்கின்றபோது தலைமையோடு சேர்ந்து கூடப்பயணிப்பவர்களும் அதே கொள்கைப்பற்றுறுதியோடு பயணிக்கும்போதுதான் அடைய வேண்டிய இலக்குகளை நாம் அடைந்துவிட முடியும்.

எனவேதான் தமிழ் மக்களுக்கான விடுதலைப் பயணத்தில் பங்குபற்றியிருந்த உங்கள் அனைவரினதும் பங்களிப்பினையும் ஆலோசனைகளையும் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் எமது கட்சிக்கு வழங்குமாறு உங்கள் அனைவரிடமும் விநயமுடன் கேட்டுக் கொள்கின்றேன். எச் சந்தர்ப்பத்திலும் மக்களின் அபிலாசைகளைப் புறந்தள்ளாத கொள்கைத் தெளிவுடன் பயணித்த உங்களின் வருகை எமது கட்சிக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த எமது இனத்தின் மீட்சிக்கும் வழிகோலும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இந்த வரலாற்று அழைப்பினை உதாசீனம் செய்துவிடமாட்டீர்கள் என நான் நம்புகின்றேன். வெறுமனே விமர்சனங்கள் மட்டும் எமக்கான விடுதலையை ஒருபோதும் பெற்றுத் தரப்போவதில்லை. அரைச்ச மாவைப் போல் மீண்டும் மீண்டும் “தாயக தேசம்” என்ற சொற்களை மட்டும் உச்சரிப்பதால் எமக்கு விடிவு கிடைக்கப் போவதில்லை. உளமார்ந்து செயலாற்றும் திறன்மிக்க செயல்களே வரலாற்றைப் படைக்கும் தீர்வாக அமைந்துவிட முடியும்.

சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நீங்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். உங்கள் வாழ்வாதாரத்துக்காக தொழில்களைப் பெற்றுக்கொள்வதில் நீங்கள் எதிர்நோக்கும் சவால்களை நான் நன்கு அறிவேன். முன்னாள் பெண் போராளிகள் பலர் என்னை சந்தித்து சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துக்கூறி இருக்கின்றார்கள். மக்களின் உரிமைகளையும் நல்வாழ்வையும் உயிர் மூச்சாக கொண்டு நீங்கள் பணியாற்றிய காலம் முடிவுக்கு வந்த பின்னர் யதார்த்த நிலைகளை ஏற்றுக்கொண்டு நற்பிரஜைகளாகவும் முன்மாதிரியாகவும் நீங்கள் வாழ்ந்துவருவது கண்கூடு. எந்தவிதமான இன்னல்களை எதிர்நோக்கினாலும் ஒருபோதும் உங்கள் நம்பிக்கையை தளரவிடாதீர்கள். உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகள் நிச்சயம் பிறக்கும். நான் முதலமைச்சராக இருந்தபோது முதலமைச்சர் நிதியத்தை அமைத்து உங்களுக்கான சில செயற்திட்டங்களை மேற்கொள்ள முயற்சித்தேன். ஆனால், அந்த முயற்சிகள் கைகூடவில்லை. தொண்டு நிறுவனங்களுக்கு ஊடாக உங்கள் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்று ஆராய்ந்து சில நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறேன். அத்துடன் நேற்றைய தினந்தான் “தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு” பதிவு செய்யப்பட்டு ஆவணம் கைக்குக் கிடைத்தது. உங்கள் சார்பான செயற்றிட்டங்களைத் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அவற்றை நடைமுறைப்படுத்த “தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு” ஆவன செய்யும் என்று கூறி வைக்கின்றேன்.

எமது இன்றைய சந்திப்பு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகச் சமகாலத்தில் சிலர் என் மீது சேறு பூச முனைந்து வருகின்றார்கள். நான் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட ஆரம்பகாலங்களில் எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை பூரணமாக அறிந்திராதவனாக இருந்திருந்தேன் என்பதை நான் பல தடவை ஒப்புக்கொண்டிருக்கின்றேன். மக்களோடு மக்களாக நான் யாழ்ப்பாணம் வந்து வாழத் தொடங்கியதன் பின்னரே எம்மக்கள் மீது இழைக்கப்படும் அநீதிகளையும் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தின் நீதியையும் நன்கு உணரத் தொடங்கினேன். எனது மக்கள் பணிக்கு இடையூறாக எனது கடந்தகாலப் பேச்சுக்களை வைத்து சிலர் களங்கம் ஏற்படுத்த முனைகின்றார்கள். பின்னணியில் இருந்து வாக்கியங்களாக பிரித்தெடுத்து வசைபாட எத்தனித்துள்ளார்கள். கடந்த காலங்கள் நிகழ்காலப் பயணங்களிற்கு விலங்கிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும். என்மீது களங்கம் ஏற்படுத்த முயலும் குறிப்பிட்ட தரப்பினர் கடந்த காலங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் என்னோடு சேர்ந்து பயணித்திருக்கின்றார்கள் என்பதனை அனைவரும் அறிவீர்கள். ஆயினும் தற்போது என்மீது குற்றஞ்சாட்டப்படும் விடயங்களை அந்தந்தக் காலத்தில் சுட்டிக்காட்டாமல் நாம் ஒரு தனித்த கட்சியாக மக்கள் பணியாற்ற விழைகின்றபோது சுட்டிக்காட்டப்படுவதன் அரசியல் உள்நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகின்றேன்.

கடந்த காலங்களில் நான் வடமாகாண முதலமைச்சராக இருந்தபோது என்னை அரசியலுக்கு கொண்டுவந்தவர்களாலேயே எனது மக்களுக்கான பணியை ஆற்ற முடியாதவனாக்கப்பட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தின் பின்னர், நான் சார்ந்திருந்த கட்சியினராலேயே நிர்வாகக் கட்டமைப்புக்குள் விரிசல்கள் ஏற்படுத்தப்பட்டு என்னை ஒரு நிர்வாகக் குறைபாடுள்ளவனாகக் காட்ட மேற்கொண்ட முயற்சிகளையும் நீங்கள் அறிவீர்கள்.

வரையறுக்கப்பட்ட மிகச் சொற்ப அதிகாரங்களை மட்டுமே உடைய வடமாகாண சபையின் முதல்வராக மத்தியைக் கண்டு பயப்படாமல், பல்லிளிக்காமல் என்னால் இயன்றளவு பணிகளை ஆற்றியிருக்கின்றேன். குறிப்பாக முதலமைச்சர் நிதியம் ஒன்றினை உருவாக்கி எமது முன்னாள் போராளிகளினதும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களதும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் எனது சிந்தனையை அரச தரப்பும் அன்று நான் வகிபாகம் வகித்திருந்த கட்சியினரும் சேர்ந்து அது உருவாவதைத் தடுத்தமை நான் வகித்திருந்த முதலமைச்சர் பதவியின் அதிகாரங்களை உங்களுக்கு விளக்கும் என நான் நம்புகின்றேன்.

புனர்வாழ்வளிக்கப்பட்டதாக அரசாங்கத்தினரால் அறிவிக்கப்பட்ட எமது போராளிகளாகிய நீங்கள் ஜனநாயக அரசியல் வழி நின்று மக்கள் பணியாற்றுவதில் எந்தச் சட்ட ரீதியான தடங்கல்களும் இல்லை என்பதை உங்களுக்குத் தெளிவுறுத்துகின்றேன். வேண்டுமென்றே சில சக்திகளினால் உங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படின் அதற்கான சட்டரீதியான பாதுகாப்பை வழங்குவதற்கு நானும் எமது கட்சியும் முன்னிற்போம் என்பதையும் நான் தெரியப்படுத்துகின்றேன்’ என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.