விக்ரம் லேண்டர் கிடக்கும் இடத்தை கடக்கவுள்ளது நாசாவின் ஓபிற்றர்!!

சந்திரனை ஆராய சென்ற சந்திரயான்-2 திட்டத்தின் விக்ரம் லேண்டர் வீழ்ந்து கிடக்கும் இடத்துக்கு மேலே நாசாவின் ஓபிற்றர் இன்று (செவ்வாய்கிழமை) கடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


‘இதன் மூலம் கிடைக்கும் முக்கிய செய்மதிப் படங்கள், தகவல்களை இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்வோம்’ என்று நாசா தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் சந்திரனை சுற்றிவரும் ஓபிற்றர், விக்ரம் லேண்டர், அதற்குள் பிரக்யான் எனப்படும் சந்திரனில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் கருவி ஆகியன அனுப்பப்பட்டன.

திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து ஓபிற்றர் பிரிந்து சந்திரனை சுற்றிவரத் தொடங்கியது. அதேபோல் லேண்டர் பிரிந்து சந்திரனின் தென் துருவத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

சந்திரனின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட முதல் லேண்டர் இதுவாகும். கடந்த 7 ஆம் திகதி விக்ரம் லேண்டர் தரையிறங்கியது.

ஆனால், சந்திரனின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 2.1 கி.மீ. உயரத்தில் லேண்டர் வரும் போது திடீரென சமிக்ஞை துண்டிக்கப்பட்டது.

நிலவில் ‘சொஃப்ட் லேண்டிங்’ எனப்படும் மெதுவாகத் தரையிறங்குவதற்குப் பதில், வேகமாக தரையிறங்கி (ஹார்ட் லேண்டிங்) வீழந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன், சந்திரனின் தரையைத் தொடுவதற்கு 335 மீட்டர் உயரத்தில் தான் சமிஞ்ஞை துண்டிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்பின், சந்திரயான்-2 ஓபிற்றர் மூலமாக லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்தை இஸ்ரோ கண்டுபிடித்தது. சந்திர நாளில் ரோவர் ஒரு நாள் ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்திரனில் ஒரு நாள் என்பது பூமியில் 14 நாட்களுக்கு ஈடானதாகும். எனவே, 14 நாட்களுக்குள் லேண்டருடன் சமிக்ஞையை ஏற்படுத்த இஸ்ரோ தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமும், இஸ்ரோவுக்கு உதவ முன்வந்துள்ளது. நாசாவின் சார்பில் ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ள ‘சந்திர புலனாய்வு ஓபிற்றர்’ (எல்.ஆர்.ஓ), சந்திரனை சுற்றி ஆய்வு செய்து வருகின்றது.

இந்தநிலையில், நாசாவின் Lunar Reconnaissance Orbiter நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் வீழ்ந்து கிடப்பதாக கருதப்படும் பகுதிக்கு மேலே இன்று கடந்து செல்லவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.