ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தரப்பினருக்கே எங்கள் ஆதரவு! டக்ளஸ் தேவானந்தா!!

பணப்பெட்டி அரசியல்வாதிகளுக்கும் சவப்பெட்டி அரசியல்வாதிகளுக்கும் பிரச்சினையை தீர்க்கும் நோக்கமோ, விருப்பமோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
பேராசிரியர் கண்ணமுத்து சிதம்பரநாதனின் ஏற்பாட்டில், நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் மகா சபையின் தலைவர் விக்னேஸ்வரன், கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் தலைவர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் உட்பட நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாப்பட்டது.
இந்த கூட்டத்தில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
“இன்று இரண்டு கட்சிகள் தங்களது ஜனாதிபதி வேட்பாளர்களை வெளிப்படுத்தியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியினால் இன்னும் முடியவில்லை. விரைவில் தங்களது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
தற்போதுள்ள நிலைமையினை கருத்தில்கொள்ளும்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் பிரதிநிதியாக வரவுள்ள வேட்பாளருக்கு ஆதரவளிக்கின்ற நிலைப்பாட்டினையே நாங்கள் எடுத்துள்ளோம்.
இதற்காண காரணங்களை நாங்கள் முன்வைத்துள்ளோம். எமது மக்கள் எதிர்கொண்டுள்ள அரசியல் ரீதியான பிரச்சினை. அரசியல் ரீதியான பிரச்சினை அவர்களில் தங்கியிருக்கவில்லை.
உரியில் வெண்ணையை வைத்துக்கொண்டு ஊர் எல்லாம் நெய்க்கு அலைந்ததுபோன்று தமிழ் தலைமைகளின் அலைச்சல்தான் தமிழ் மக்கள் தங்களது அரசியல் உரிமையினைபெறமுடியாத, அதனை அனுபவிக்கமுடியாத நிலைமை காணப்படுகின்றது.
நாங்கள் நீண்டகாலமாக கூறிவருகின்ற 13வது திருத்த சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதினை வலியுறுத்திவருகின்றோம். அதுவே இன்றைய நிலையில் சாத்தியமாகவும் இருக்கும்.
அடுத்தகட்டமாக மாகாணசபைகளுக்கு ஒரு மேல்சபை அமைப்பது அவசியம். அது நாடாளுமன்றம்போல் பெரும்பான்மையினத்தை பிரகடனப்படுத்தாமல் ஐம்பதுக்கு ஐம்பது கொண்டதாக அந்த மேல்சபை அமைந்திருக்கவேண்டும்.
வடகிழக்கு மக்களுக்கு விசேட பிரச்சினைகள் இருப்பதன் காரணமாக விசேட அதிகாரங்கள் அவசியம் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
தண்ணிக்குள் இறங்கினால்தான் நீந்த கற்றுக்கொள்ளமுடியும் என்பதற்கு அமைய நாங்கள் நீந்துவதற்கு கற்றுக்கொள்ளவேண்டும். அந்த ஆரம்பமாக இருப்பது 13வது திருத்த சட்டம்.
13வது திருத்த சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையில்லை, சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. அது எங்களின் அரசியல்யாப்பில் இருக்கின்றது.
தென்னிலங்கை மக்கள் அதனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அதனை அவர்கள் எதிர்க்கப்போவதில்லை. அதனைவிட இந்தியாவின் பக்கபலமும் இருக்கின்றது. அதில் ஆரம்பிப்பதுதான் சரியான தீர்மானமாக இருக்கும்.
மக்கள் எங்களுக்கான ஆணையினை தரவேண்டும். எங்களுடன் அணி திரளுங்கள். ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் யாரை நோக்கி கைநீட்டுகின்றோமோ அவருக்கு வாக்களித்து அவரின் வெற்றியை மக்களின் வெற்றியாக கொள்ளவேண்டும்.
தொடர்ந்துவரும் மாகாணசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் எங்களுக்கு கணிசமான வாக்குகளையும் ஆசனங்களையும் வழங்கினால் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு ஒரு ஆரோக்கியமான தீர்வினை காணலாம்.
எங்களை நம்பி தமிழ் மக்கள் எங்களுடன் அணிதிரண்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துதருவோம். கடந்தகாலத்தில் வன்முறைக்கூடாக வந்த தலைமைகளாக இருக்கலாம், ஜனநாயக வழிக்கூடாகவந்த தலைமைகளாக இருக்கலாம்.
அவர்கள் தங்களது தேவைகளுக்காக சர்வதேசத்துடன் பேசுவார்கள், இந்தியாவுடன் பேசுவார்கள், மாறிமாறிவரும் இலங்கை அரசுடன் பேசுவார்கள். இறுதியாக தங்களது தேவைகள் முடிந்த பின்னர் அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறுவார்கள்.
இந்த நாட்டில் யுதத்தினை நடாத்திய சகல அரசியல் தலைவர்களின் காலத்திலும் தமிழ் மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். ஆனால் அவர்களால் யுதத்தினை முடிவுக்கு கொண்டுவரமுடியவில்லை.
ஆனால் மகிந்தராஜபக்ச சரிபிழைகளுக்கு அப்பால் யுத்ததினை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். நீண்டகால தேவையற்ற அழிவு யுத்தம் தமிழ் மக்களையே பாதித்திருந்தது.
நாங்கள் இலங்கை - இந்திய ஒப்பந்ததின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்த்திருக்கமுடியும். அளவுக்கு மீறினால் அமிர்தம் நஞ்சு என்பது போன்று தமிழ் தரப்பு அதனை சரியாக கையாளவில்லை. இரண்டாம் உலக யுத்ததின்போது ஜப்பான் மீதும் ஜேர்மனி மீதும் அமெரிக்கா குண்டுபோட்டு தகர்த்தது.
மாறிவந்த ஜப்பானிய ஜேர்மனிய அரசுகள் பழிவாங்கும் உணர்வுகள் இல்லாமல் அமெரிக்காவுடன் சிநேகிதரீதியாக கைகுலுக்கிய காரணத்தினால் இன்று ஜப்பானும் ஜேர்மனியும் அமெரிக்காவுக்கு மேலாக வளர்ந்து நிற்கின்றது.
ஆகையால் வரவிருக்கின்ற சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வோம். சுயநலவாத அரசியல் தலைமைகளின் பின்னால் செல்ல வேண்டாம், அவர்களின் பின்னால் சென்றீர்களானால் மீண்டும் துயரங்களையே சந்திக்க வேண்டி ஏற்படும் என்பதையே மக்களிடம் கூறவிரும்புகின்றேன்.
பணப்பெட்டி அரசியல்வாதிகளுக்கும் சவப்பெட்டி அரசியல்வாதிகளுக்கும் பிரச்சினையை தீர்க்கும் நோக்கமோ விருப்பமோ இல்லை. இது வரலாற்றுப் பதிவாக எங்களுடைய அனுபவமாக இருக்கின்றது.
தேர்தலை நாங்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென நான் கூறிய விடயம் வடக்கு மக்களுக்கு மாத்திரமல்ல கிழக்கு, மலையக மக்களுக்கும் சேர்த்தே ஆகும்.
மக்கள் எந்தளவிற்கு எங்களுக்கு ஆணை வழங்குகின்றார்களோ அதற்கேற்ற வகையில் நாங்கள் அவர்களை பாதுகாத்தோம். இருப்பவற்றை பாதுகாத்துக்கொண்டே நாங்கள் முன்னோக்கி செல்லவேண்டும் என்பது நான் நீண்டகாலமாக சொல்லிவருகின்ற விடயமாகும்.
நடந்து முடிந்த வன்முறை தலைமைகளுடைய வழிநடத்தல்களாக இருக்கலாம் அல்லது ஜனநாயக வழியில் வந்த தலைமைகளுடைய வழிநடத்தல்களாக இருக்கலாம் எதுவுமே இருப்பவற்றை பாதுகாத்துக்கொண்டே நாங்கள் முன்னோக்கி செல்லவில்லை.
இருப்பவற்றை பாதுகாத்துக்கொண்டே நாங்கள் முன்னோக்கி செல்லவேண்டும், அது எங்களால் முடியும் என்ற நம்பிக்கையை நான் தொடர்ந்தும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றேன்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை