சகாயசீலி எம் மாலதி.!!

சகாயசீலி ..!
இன்று அவள் இருந்திருந்தால்;
இப்போது வயது ஐம்பத்து இரண்டு.


ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ
மணம் முடித்திருப்பாள்.
நான்கைந்து பிள்ளைகளுக்குத் தாயாகி,
விடுமுறைக்கொருமுறை
வீட்டுக்குப் போய் வந்திருப்பாள்.

மூத்த பிள்ளைக்குத் திருமணம் முடித்து
பேரப்பிள்ளைக்காய்க் தவமிருந்திருப்பாள்.

கேரளச் சிகிச்சைக்கும்
கிரிவல தரிசனத்திற்கும்
தவறாமல் சென்றிருப்பாள்.

எப்படியோ இன்னும் பத்துவருடங்களில்
இறக்கும்போது,
எங்காவது ஒரு இணையத்தின்
இடதுபக்க மூலையில்
மரண அறிவித்தல் அறிவிக்கப்பட்டு
மறுநாளே மறைந்திருக்கும்.

ஆனால் ;
அவள் மாலதியானதால்,
பக்கத்து வீட்டையே
பயந்து பயந்து பார்க்கும் பெண்களுக்கிடையில்
பாரதத்தை எதிர்த்து நின்றாள்.

இருபது வயதின் உணர்வுகளை மறந்து
வாழ்ந்தாள் ,
இவள் அரிதெனப் போற்றும்படி
உருகி வீழ்ந்தாள்.

சரித்திரத்தை மாற்றுவதற்காய்
இவளணிந்த குப்பி,
தமிழீழப் பெண்களின்
தரித்திரத்தைப் போக்கிற்று.

வரலாறு எழுதப்படும் வகையில்;

சாதாரண சகாயசீலி எனின்
சத்தமின்றி இறந்திருக்கவேண்டியவள்
மாலதி என்பதால்
வாழ்ந்துகொண்டே இருக்கிறாள்,
மக்களின் மனங்களில் .......

சகாயசீலி எம் மாலதி

- தேவன் -

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.