காலத்தின் அவசியம் - கருத்தொருமிப்பு!!

நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பலத்தை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் கட்சிகளை இணைக்கும் முயற்சி முதலாவது கட்ட வெற்றியை எட்டியிருக்கிறது.


காலத்தின் தேவையணர்ந்து தங்களின் சமூக கடமையை புரிந்து இந்த முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் – கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாடு பாராட்டப்பட வேண்டியது.

ஐந்து கட்சிகளின் கையொப்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் ஆவணம், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட்டு அதுதொடர்பான அவர்களின் நிலைப்பாடு அறியப்படவுள்ளது. அதன் அடிப்படையிலேயே குறித்த ஐந்து கட்சிகளும் தமது ஆதரவு யாருக்கு என்பதை தீர்மானிக்கவுள்ளன.

கையெழுத்திடப்பட்டுள்ள ஆவணத்தில் தமிழர்களின் அடிப்படை அபிலாசைகளான இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் காணி விடுவிப்பு – அரசியல் கைதிகளின் விடுதலை – காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – பௌத்த ஊடுவல் – தொல்பொருள் திணைக்களத்தின் எதேச்சாதிகார செயற்பாடு – அரச நியமனங்களில் காணப்படும் குளறுபடிகள் எனப் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை பொறுத்தவரையில் தமிழர் தரப்படன் எந்தவிதமான எழுத்து மூலமான ஒப்பந்தங்களுக்கும் தயார் இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்து விட்டனர்.

அவர்கள் விரும்பினாலும்கூட ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதுநிலைகள் தென்னிலங்கையில் இல்லை. அதற்காக, தமிழ் மக்களின் கோரிக்கைகளை தடாலடியாக பிரதான வேட்பாளர்களினால் புறந்தள்ளி விடவும் முடியாது. அது தமக்கான வெற்றியை அவர்களாகவே புறந்தள்ளி விடுஙகின்ற கைங்கரியமாகவே இருக்கும்.

இந்த தர்ம சங்கடமான நிலையை பிரதான வேட்பாளர்களும் அவர்களை சார்ந்தவர்களும் நன்கே உணர்ந்திருக்கிறார்கள். இந்த சூழலில்தான் தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை தம்மிடையே பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படு்ம் தரப்புககள் இணைந்துள்ளன.

இந்த இணைவு, “எந்த ஒப்பந்தங்களையும் செய்து கொள்ள மாட்டேன். ஆனாலும் தமிழ் மக்கள் எனக்கே வாக்களிபார்கள்” என்று எகத்தாளமிட்ட தரப்புக்களையும் நிச்சயம் கொஞ்சம் யோசிக்க வைக்கும். எனவே, இந்த சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு தொடர்ந்தும் புத்திசாதுரியமாக கையாள வேண்டும்.

“தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை எழுத்து மூல ஒப்பந்தத்துக்கு தயாராக இல்லை என்று யாரும் தயாராக இல்லை” என்று சாத்தியமே இல்லாத சாராம்சத்திற்காக யாரும் தாழியை உடைத்து நாசம் பண்ணி விடக்கூடாது.

ஓப்பீட்டளவில் அதிகபட்ச கோரிக்கையை சாதகமாக பரசீலிக்கும் தரப்பு எது? – எந்தத் தரப்பு கணிசமான – அதேவேளை காத்திரமான கோரிக்கைகளை தமது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க உடன்படுகின்றன போன்றவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, அதிகபட்ச கோரிக்கையை ஏற்றுக் கொள்பவர்களுடன் அவற்றிற்கான கால எல்லைகளை வரையறுத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, முடியுமானவற்றை அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக செயற்படுத்த வலியுறுத்த வேண்டும்.

குறித்த செயற்றிறன் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகள் அமையும் என்பதை சம்மந்தப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மறுபுறத்தில் சிவாஜிலிங்கம் களம் இறங்கியிருக்கிறார். யார் சொல் பேச்சுக் கேட்டு இறங்கினாரோ தெரியவில்லை. இருப்பினும் ஏற்கனவே ஒரு தடவை ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் அவர்.

“பிரதான வேட்பாளர்கள் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை சாதகமாக பரசீலித்தால் தேர்தலில் இருந்து விலகுவது தொடர்பாக பரிசீலிக்கலாம்” என்று ஏற்கனவே தெரிவித்து விட்டார்.

அதேவேளை, ஜே வி பி.யும் தனித்து நிற்பதால் சில ஆயிரம் வாக்குகள்கூட முடிவை மாற்றிவிடும் என்ற நிலையில் களநிலவரம் காணப்படுகின்றது.

எனவே, “நீங்கள் எமது மக்களை மகிழ்ச்சிப்படுத்தினால் சிவாஜியை களத்தில் இருந்து அப்பறப்படுத்துவோம்” என்ற செய்தியை பக்கபலமாக தெரிவிக்கலாம்.

இவ்வாறு முடிந்தவரை தமிழ் மக்கள் பயனடையும் வகையிலும் அடிப்படை அபிலாசைகளை முன்னகர்த்தும் வகையிலும், இந்த சந்தர்ப்பம் பயன்படுத்தப்பட வேண்டும் – இன்றைய இணைவு முன்னகர வேண்டும்.

இந்த இணைவு இடைவழியில் இடற விடாமல், சூழ்ச்சிகள் சூழவிடாமல் முன்னகர்த்த வேண்டிய பாரிய பொறுப்பை மாணவர்கள் தொடர்ந்தும் சுமக்க வேண்டும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.