துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்!

சிரியா மீதான துருக்கியின் போர் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக துருக்கி மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்திஸ் போராளிகள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குர்திஸ் போராளிகள் அதிக எண்ணிக்கையில் பலியாகிதுடன், ஒரு சில அப்பாவி பொதுமக்களும் பலியாகினர்.


துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில், துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என 4 தினங்களுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், துருக்கி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். 


ஆனால், இந்த எச்சரிக்கையை துருக்கி அரசு கண்டுகொள்ளவில்லை. ‘அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி எங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம். குர்திஸ் போராளிகள் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை’ என துருக்கி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மெவுல்ட் காவ்சக்லோ தெரிவித்தார். அதன் பின்னரும் துருக்கி தனது போர் நடவடிக்கைகளை தொடர்ந்தது.


இந்நிலையில், துருக்கி மீதான பொருளாதாரத் தடைகளை விதிக்க தனது நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். துருக்கி அரசு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகவும், துருக்கியுடனான 100 பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசிக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில் துருக்கி பிரச்சினையை ‘தேசிய அவசர நிலை’யாக அறிவித்துள்ளார்.


அமெரிக்காவின் கருவூலத் துறை, ஏற்கனவே துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர், உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாத்தி டான்மேஸ் ஆகியோரை அதன் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் வைத்துள்ளது.

இந்தத் தடைகள் மிகவும் கடுமையானவை எனவும் துருக்கியின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவன் நுச்சின் தெரிவித்துள்ளார்.
உடனடி போர்நிறுத்தம் கொண்டுவரப்படாவிட்டால் அல்லது கொண்டுவரப்படும் வரை, இந்தத் தடைகள் தொடரும் என அல்லது மேலும் அதிகரிக்கப்படும் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் எச்சரித்துள்ளார்.

அத்துடன், உடனடியாக போரை நிறுத்துமாறு துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தயீப் எர்டோகனிடம் தொலைபேசி வாயிலாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போர் இடம்பெறும் சிரியாவின் வடக்குப் பகுதிக்கு இயலுமானளவு விரைவாகச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், ‘துருக்கி தலைவர்கள் இந்த ஆபத்தான மற்றும் அழிவுகரமான போர் நடவடிக்கைகளை தொடர்ந்தால் துருக்கியின் பொருளாதாரத்தை விரைவில் முழுமையாக அழிக்க நான் தயாராக இருக்கிறேன்.
இந்த பொருளாதார தடை உத்தரவானது, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகள், வடகிழக்கு சிரியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை மேலும் மோசமடைய வழிவகுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துருக்கிய அரசாங்கத்தின் தனி நபர்கள், நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை பரிசீலித்து விதிக்க மாநில மற்றும் கருவூலத் துறைகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
துருக்கி மீதான பொருளாதாரத் தடைகள், நிதித்துறைகள் மீதான தடை, சொத்துக்களைத் தடுப்பது, அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுப்பது உள்ளிட்ட பரந்த அளவிலான நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும். 100 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக ஒப்பந்தத்தில் துருக்கியுடனான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா உடனடியாக நிறுத்திவிடும்’ என கூறினார்.
முன்னதாக சிரியாவின் வட கிழக்கு எல்லைப் பிராந்தியத்திற்குள் சிரிய இராணுவம் நுழைந்ததைத் தொடர்ந்து, துருக்கி தலைமையிலான படைகளுடன் மோதல்கள் வலுப்பெற்றன.
குர்திஸ் தலைமையிலான படைகளுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து சிரிய இராணுவம் குறித்த பகுதிக்கு நேற்றைய தினம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.