இர்பான் - ஹர்பஜன் தமிழ் சினிமாவில் யாருக்கு செஞ்சுரி?

சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் வெவ்வேறு திரைப்படங்கள் மூலமாகத் தமிழ் சினிமாவில் களமிறங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார். விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படம் ‘சீயான் விக்ரம் 58’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் இர்பான் பதான் தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்க உள்ளார் என்ற செய்தியைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் வெற்றிப் படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து, பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்களை உருவாக்கிய பெருமையைப் பெற்றவர். அவரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இந்தக் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இர்பான் பதான் இவர்களுடன் இணைந்திருக்கும் தகவல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
அதே போன்று கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘டிக்கிலோனா’ திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஹர்பஜன் சிங் கடந்த சில ஆண்டுகளாகத் தமிழில் ட்வீட் செய்து அதன் மூலம் தமிழக இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தார். தற்போது அவர் தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ள செய்தி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஹர்பஜன் சிங், ‘என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் டிக்கிலோனா குழுவினருக்கு நன்றி. தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்குக் காரணம் சரவணன் பாண்டியன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தாங்கள் மிகவும் ரசிக்கும் கிரிக்கெட் வீரர்கள் திரையில் தோன்றுவதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.