அன்று நாங்கள்..!இன்று நீங்கள்...!!

வல்லாதிக்க அரசுகளின் கூட்டுச்சதிகளுக்கு இரையாகி வீடிழந்து வாழ்விழந்து வீதியில் கால்நடைகள் போல் ஊர்வலம் போகும் எங்கள் கண்ணீரை இந்த உலகம் உணரப் போவதில்லை.. தோழர்களே!


எம் தோள்கள் பலம் கொள்ள வேண்டும்!
எம் உள்ளங்கள் திண்மமாக வேண்டும்!
எம் கண்ணீரை கட்டியாக்க வேண்டும்!
எம் கைகள் வரலாறு படைக்க வேண்டும்!

நாம் பலவீனர்களாக இருக்கும் வரை இந்த உலகம் எம்மை திருப்பிப் பார்க்கப் போவதில்லை. எம்மைக் காப்பாற்றப் போவதும் இல்லை.

எம் வீரத்தில் நாம் எழுந்து நின்ற பொழுதே இந்த உலகம் எம்மை திரும்பிப் பார்த்தது.

எம் எழுகையில் தான் எமது விடியல்!

அழிக்கத் துடிக்கின்றவர்களுக்கு இருக்கும் துணிவை மிஞ்சும் வீரம் அழிக்கப்படும் மக்களாகிய எமக்குள் வந்தால் போதும் வீர வரலாறு எம் பின்னால் வரும்!

தாய் மண்ணிற்காக போராடும் எந்த நாட்டின் உலக மக்களுக்கும் தாய் மண்ணிற்காக போராடும் அனைத்து உலக மக்களும் குரல் கொடுக்க வேண்டும்!

அமெரிக்காவால் குர்து மக்கள் சூழ்ச்சியாக அனாதரவாக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஐ. எஸ். தீவிரவாதிகளை அழிக்க தேவைப்பட்ட சிரிய ஆக்கிரமிப்பில் இருந்து அமேரிக்கா இன்று குர்து மக்கள் துருக்கியின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிய நிலையில் அதை தடுத்து நிறுத்தி அவர்களைக் காக்காமல் சூழ்ச்சியாக பின் வாங்கியுள்ளது.

குர்து இனத்தையே கருவறுக்க வேண்டும் என்பது துருக்கியின் கனவு. குர்துக்களை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்பதில் துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் உடும்புப்பிடி பிடித்து வருகிறார்.

அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, சிரியாவில் குர்து மக்கள் பிடியில் உள்ள பகுதிகளில் துருக்கியின் ராணுவம் நுழைந்தது. போரும் தொடங்கி விட்டது.

இது குர்து மக்களுக்கு பேரிடியாக அமைந்தது. அவர்களின் நிலை பரிதவிப்பாக இருக்கிறது. ஒரு லட்சம் குர்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிர்க்கதியாக நிற்பதாக ஐ.நா. சொல்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட குர்து மக்கள் பலியாகி உள்ளனர்.

உதவிக்கரம் நீட்ட வேண்டிய நேரத்தில், சிரியாவின் வட கிழக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்பப்பெற்ற டிரம்பின் செயல், குர்து மக்களை முதுகில் குத்தியதாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. அது மட்டுமல்ல, சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு துருக்கிக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது போலவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஆனால் "மனிதத்தன்மையற்ற ஒன்றை துருக்கி செய்தால், எல்லை தாண்டி சிரியாவுக்குள் நுழைந்தால் அதன் பொருளாதாரம் அழிக்கப்படும்!" என்று ஊடகங்களின் கேள்விக்கு சமாளிக்கிறார் டிரம்ப்.

டிரம்பின் முடிவு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசு கட்சியின் தலைவர்களே இந்த முடிவை ஏற்கவில்லை.

ஆனால் டிரம்ப் தனது ராணுவ மந்திரி மார்க் எஸ்பரைக்கொண்டு தனது செயலை நியாயப்படுத்துகிறார். “ இரண்டு எதிரி படைகள் ஒன்றுக்கொன்று தீவிரமாக மோதிக்கொள்கிறபோது, இதன் இடையே அமெரிக்க படைகள் சிக்கிக்கொள்கிற நிலை உருவானது. இது ஏற்றுக்கொள்ள முடியாத நிலை அல்லவா?” என்கிறார் மார்க் எஸ்பர்.

இதற்கிடையே சிரியாவில் துருக்கி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு மனிதாபிமான ரீதியில் பலரும் கவலை தெரிவித்தாலும்கூட, "தாக்குதலை நிறுத்தப்போவது இல்லை" என்று துருக்கியின் அதிபர் எர்டோகன் திட்டவட்டமாக கூறி விட்டார்.

அதே நேரத்தில், சிரியாவில் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை காப்பதற்கு எங்களால் இனி முக்கியத்துவம் தர முடியாது. எங்கள் மண்ணையும், மக்களையும் காப்பதுதான் எங்கள் முதல் பணி என குர்து படை அறிவித்து விட்டது.

இந்த நிலையில்தான் சிரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 950 ஐ.எஸ். பயங்கரவாதிகள், சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு, தப்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அங்கிருந்து படைகளை வாபஸ் பெற்ற அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் போலாகி இருக்கிறது.

துருக்கியின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு சிரியா அரசுடன் குர்துக்கள் அதிரடியாக சமரசம் செய்து கொண்டுள்ளனர். ரஷியாவின் உதவியையும் குர்துக்கள் நாடுகின்றனர். ஆனால் துருக்கி படைகளுக்கும், குர்து படையினருக்கும் இடையேயான போர் உக்கிரமாகத்தொடங்கி இருக்கிறது.

சிரிய எல்லை நோக்கி கூடுதலான துருக்கி படைகள் விரைந்து கொண்டிருக்கின்றன என்றொரு தகவல் வந்திருக்கிறது. வட கிழக்கு பகுதியை நோக்கி சிரியாவின் ராணுவமும் விரைந்துள்ளது.

என்ன நடக்குமோ என்ற தவிப்பில் குர்து மக்கள் மட்டுமல்ல, சிரியா மக்களும் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

சிரியாவில் துருக்கி படைகளின் தாக்குதல் உக்கிரமாகி வருகிற நிலையில் அப்பாவி குர்து மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகி இருக்கிறது. உயிர் பிழைத்தால் போதும் என்கிற எண்ணத்தில் அவர்களில் பலர் அங்கிருந்து இடம் பெயர்ந்து போகத்தொடங்கி விட்டனர்.

அந்த நாட்டின் வடக்கு மாகாணங்களான ராக்கா, ஹசாகா மாகாணங்களில் இருந்து 2¾ லட்சம் குர்துமக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களில் 70 ஆயிரம் பேர் குழந்தைகள் ஆவர். வீடுகளை விட்டு இடம் பெயர்ந்த பலரும் வீதிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் படுத்து உறங்குகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் அடிப்படை மனித நேய உதவிகள் செய்வதற்கு கூட நாதியில்லை என்ற நிலையே நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. தாக்குதல் நடைபெற்று வருகிற இடங்களில் வைத்தியசாலைகள் செயல்படவில்லை. இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட கொடிய அவலங்களை இன்று எதிர்கொள்ளும் குருதிஸ்தான் மக்களுக்கு வெறுமனே குரல் கொடுப்பது மட்டும் போதாது.

தொடர்கின்ற வல்லாதிக்க சூழ்ச்சிகளில் தமிழீழம் குர்திஸ்தான் போல் இனியொரு நாடு நசிந்து அழிய கூடாது என்றால் உலகின் மனசாட்சிகள் தட்டி எழுப்பப்பட்டு அநீதிகளை உடனுக்கு உடன் தடுத்து நிறுத்த உலக நாடுகளுக்கு மக்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.