எடப்பாடி-ஸ்டாலின்: ஒரே தொகுதியில் போட்டியா?

தன்னுடன் ஒரே தொகுதியில் முதல்வர் போட்டியிடத் தயாரா என்று திமுக தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

அதிமுகவின் 48ஆவது ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 17) கொண்டாடப்பட்டது. அதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
https://www.tamilarul.net/
ஸ்டாலின் சவாலை ஏற்கத் தயார்
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது, முதல்வர் தன்னுடன் ஒரே தொகுதியில் போட்டியிடத் தயாரா என்று ஸ்டாலின் சவால் விடுத்துள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், “எந்தவித சவாலையும் நாங்கள் எதிர்கொள்ளத் தயார். திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது குழப்பத்தின் உச்சியில் இருக்கிறார். அதனால், அவர் என்ன பேசுகிறார், என்ன செய்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. அந்த அளவுக்குதான் அவருடைய நடவடிக்கை உள்ளது. ராஜினாமா செய்யத் தயாரா? போட்டியிடத் தயாரா? நீங்கள் பொறுப்பேற்கத் தயாரா என்றுதான் அவர் கேட்டுவருகிறார். 2021ஆம் ஆண்டுதான் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அப்போது தெரிந்துவிடும் அல்லவா?” என்று பதிலளித்தார்.
மேலும், “சிறந்த நீதிபதி மக்கள்தான். எனவே மக்கள் தீர்மானிக்கும் விஷயத்துக்கு இவர் ஏன் அவசரப்பட வேண்டும். 2021 வரை கூட பொறுக்க முடியாமல், தூங்க முடியாமல் பதவி வெறி ஸ்டாலினை பாடாய் படுத்துகிறது” என்றும் சாடினார்.
https://www.tamilarul.net/
ஸ்டாலின் பேச்சு
முன்னதாக நாங்குநேரி பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், “எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை. சசிகலாவின் கால்களில் விழுந்ததால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். எடப்பாடி பழனிசாமி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரு தொகுதியில் போட்டியிடட்டும், நானும் எனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு அதே தொகுதியில் போட்டியிடுகிறேன். என்னுடன் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தயாரா?. அப்போது தெரியும் மக்களின் முதல்வர் யார் என்று” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் ஒரே தொகுதியில் போட்டியிடும் சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.