நம்பிக்கை இல்லாமல் தேசம் இல்லை.புலிகளும் நம்பிக்கையும்.!!

புலிகள் இயக்கம் என்பது ஒரு சிக்கலான அமைப்பு. புலிகளால் எவ்வாறு உலகம் வியக்கும் பல வெற்றிகளைப் பெறமுடிந்தது என்பதற்கு ஒரே ஒரு காரணத்தை மட்டும் கூற முடியாது.   சிக்கலான அமைப்புகளின் தன்மை அப்படி.   புலிப்பண்பாடு, உத்திகள்,  பரிணாமம், தலைமை [2,3,4,5]  என பல்வேறு காரணிகளின் கூட்டு செயல்பாட்டின்  விளைவாகவே புலிகள் வெற்றிகரமான இயக்கமாக உருவானார்கள். அவ்வாறான காரணிகளில் நம்பிக்கை என்பது  இன்னொரு முக்கிய காரணி.


இவ்வுலகின் ஒரு  தன்மை என்னவென்றால் அது  எவ்வாறு பரிணமிக்கும் என்பது முன்கூட்டியே தீர்மானிக்க முடியாதபடி சிக்கலானது, எண்ணற்ற காரணிகளை உள்ளடக்கியது. நாம் விரும்பும் எதிர்காலத்தை உறுதியாக 100% அடையும் திட்டம் என்பது யாரிடமும் இல்லை, யாராலும் உருவாக்கவும் முடியாது. அவ்வாறு இருக்கும் பொழுது நாம் விரும்பும் எதிர்காலத்தை அடைய துணிவுடன் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அணுகமுடியும்.

“Faith in evolution is a vital necessity. If we knew for certain what the future hold, faith would be superfluous. It is precisely because the unknowns are so great and dangerous that we require some manner of faith to choose our path and to give us courage. If we cannot believe that our existence is part of a meaningful, unfolding design, it will be difficult to maintain the resolve needed to make it come true.” [5]

இவ்வுலகம் நம்பிக்கை கொண்டோர்களுக்கு மட்டுமே. எவ்வாறு எதிர்காலத்தில்  நம்பிக்கை  இல்லாத மனிதர்கள் தற்கொலை செய்து அழிந்துபோகிறார்களோ, அதுபோல நம்பிக்கை இல்லாத நாடுகளும் இயக்கங்களும் காலப்போக்கில் அழிந்து போகின்றன:

“The person or the nation that has a date with destiny goes somewhere, though not usually to the address in the label. The individual or nation that has no sense of direction in time, no sense of clear future ahead is likely to be vacillating, uncertain in behavior, and to have a poor chance of surviving.” [6]

புலிகளின் அசுரபலத்திற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.  உதாரணமாக இந்தியா  படைகளைக் கொண்டு மிரட்டிய பொழுது, இலங்கை அடிபணிந்தது, மற்ற தமிழ் போராட்டக் குழுக்களும் அடிபணித்தன. ஆனால்  புலிகள் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி கண்டார்கள். களத்தில் போராளிகள் விழ விழ, அடுத்து வந்த போராளிகள் போராட்டத்தை  தொடர்ந்தார்கள். உலகிலே வேறு எந்த இயக்கமோ அல்லது எந்த மதமோ புலிகளைப் போல விடாப்பிடியான நம்பிக்கையை, மன  உறுதியை  கொண்டிருப்பார்களா என்பதை ஐயமே. அவர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் ஒரு வாசகம் உண்டென்றால் அது கவிஞர் காசி ஆனந்தனின் வரிகள்தான்:

“நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்”

இறுதிப் போரில் உலகமே ஒன்று திரண்டு எதிர்த்த பொழுதும், புலிகள் இறுதிவரை மிகத் தெளிவாக நம்பிக்கையுடனே எதிர்கொண்டார்கள். அவர்களுக்கு இறுதிப்போரின்  முடிவில் இரு தெரிவுகள் மட்டுமே இருந்தன. ஒன்று சரணடைவது அல்லது இறுதிவரைப் போராடி வீரமரணம் அடைவது. புலிகளின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு புலிகள் எதைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது வியப்பானது இல்லை. எந்த முடிவு எதிர்கால மக்களிடம் விடுதலைக்கான கனவினை நம்பிக்கையை விதைக்குமோ, அதுவே சிறந்த தெரிவு. அதைத்தான் செய்தார்கள். இன்று எதிரிகள் கொக்கரிக்கலாம், ஆனால் இது தாற்காலிகமே.  வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. உதாரணமாக தெர்மாப்பிளைப் போரையும், மசாதாவையும் [3,7] எடுத்துக் கொள்ளலாம். இரண்டாயிர வருடங்கள் முன்பாக நடந்த இந்நிகழ்வுகள், இன்றும் மக்களின் நினைவுகளில் இருந்து இயக்குகிறது என்றால்,  புலிகளின் முள்ளிவாய்க்காலும்  நந்திக்கடலும்  அதுபோன்ற தாக்கத்தையே தமிழ்ச்சமூகத்தில் ஏற்படுத்தும்.  புலிகளின் நம்பிக்கை ஒரு நாள் வென்றே தீரும்.

நம்பிக்கையைப் பற்றி ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் நம்பிக்கை மட்டும் என்றால் அது குருட்டு நம்பிக்கை. அதுபோன்ற நம்பிக்கைகள் சமூகத்தில் அநீதியை உருவாக்கி மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தும். மத நம்பிக்கைகள் அதுபோன்ற குருட்டு நம்பிக்கைகளே. நம்பிக்கையுடன்  பகுத்தறிந்த  செயல்பாடுகளும் இணையும் பொழுதே சமூகத்தில் நீதி நிலவும் என்கிறார் தத்துவமேதை பிளேட்டோ. நம்பிக்கை மட்டுமோ அல்லது பகுத்தறிவு மட்டுமோ இருந்தால், அது தனிமனிதனுக்கும் சரி, சமூகத்திற்கும் சரி அநீதியை உருவாக்கும்.

“First great political theorist Plato was an ardent admirer of reason, yet he recognized that passion and reason has its proper place in mind and state. When one of the two takes complete control in an individual, the result is injustice of the soul. The same imbalance between reason and passion can lead to injustice in the state.” [8]

இன்றைய திராவிட கட்சிகள்  தங்களது  உண்மையான குறிக்கோள்களின் மீது  நம்பிக்கையை இழந்ததால்தான் இன்று அது திசை தடுமாறி சமூகத்தில் பல அநீதிகளை உருவாக்கி இருக்கிறது, சமூகத்தில் தனிமனித சுயநலம் தலைவிரித்தாடுகிறது.  புலிகள் பகுத்தறிவையும் நம்பிக்கையையும் இணைத்து செயல்பட்டதால்தான் அவர்களால் ஒரே குறிக்கோளுடன் திசைமாறாமல் பல வெற்றிகளைப் பெற முடிந்தது.  வெறும் நம்பிக்கையை மட்டும் கொண்டு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. அவர்கள்  உத்திகளிலும் திட்டமிட்ட செயல்பாடுகளிலும் முன்னோடிகளாக இருந்தார்கள் என்று முந்தைய கட்டுரைகளில் ஏற்கனவே பார்த்தோம்[2,3,4]. அவர்கள் அமைத்த ஈழநாடு செல்வத்தில் குறைந்திருந்தாலும் பிளேட்டோ கூறியபடி நீதியில் நிறைந்திருந்தது. பெரியார் எதுபோன்ற நாடு அமையவேண்டும் என்று நினைத்தாரோ, அதை புலிகள் நிறைவேற்றிக் காட்டினர்  என்பதை உண்மையான பகுத்தறிவு இயக்கப் பற்றாளர்களும் ஒப்புக்கொள்வார்கள்.

2009-க்குப் பின்னரான ஈழ விடுதலை சார்ந்த செயல்பாடுகள் குறிப்பிடப்படும்படியாக இல்லை. கடந்த பத்தாண்டு செயல்பாடுகள் விரல்விட்டு என்னும் நிலையிலேயே இருக்கிறது [9]. இதற்கு ஒரு காரணமாக சிலர்  கருதுவது என்னவென்றால் நம்மிடம் ஒரு தோல்வி/விரக்தி மனநிலை குடிகொண்டுள்ளது. இது எவ்வளவுதூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் புலிகள் இருந்த பொழுது எவ்வளவு நம்பிக்கை இருந்ததோ, அந்த நம்பிக்கை இப்பொழுது இல்லை என்று உறுதியாகக் கூறலாம். அதுபோன்ற மனநிலை இயற்கையானது என்று நியாப்படுத்தினாலும், அதிலிருந்து விடுபடாமல் நாம் ஈழம் சார்ந்த அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுப்பது  என்பது கடினமான காரியமே.

புலிகள் இல்லாத இன்றைய காலத்தில், நமது செயல்பாடுகளை முடுக்க அதிக ஊக்கமும் நம்பிக்கையும் தேவை. அதுபோன்ற நம்பிக்கையை எப்படி உருவாக்குவது? இது முடியாத காரியமல்ல. வரலாற்றில் மற்ற இனங்கள் எவ்வாறு பெரிய பின்னடைவுகளில் இருந்து உளவியல் ரீதியாக மீண்டு வெற்றிகொண்டனர் என்பதனை அறிவதன் மூலம், நாம் நமக்கான ஒரு பாதையை உருவாக்க முடியும். இதற்கு வரலாற்றில் ஒரு சிறந்த உதாரணம் என்றால் யூதர்கள்தான்.

யூதர்களின் உத்தி:

கி.மு. 598 -இல் பாபிலோனியப் பேரரசு இசுரேல் நாட்டைத் தாக்கி, யூதர்களின் கோவிலை தரைமட்டமாக்கி, யூதர்களை பாபிலோனுக்கு நாடு கடத்தினர். அன்றைய காலகட்டத்தில்  அனைவரும் பல்வேறு தெய்வங்களை வணங்கி வந்தனர். ஒரு நாடு இன்னொரு நாட்டிடம் தோற்றால், அதற்கு காரணம் அந்த நாட்டின் இறைவன் தங்கள் நாட்டு இறைவனைவிட பலசாலி என்றே பார்க்கப்பட்டது. தோற்றுப்போன மக்கள் முடிவில் பலசாலியான கடவுளை வணங்கி ஆக்கிரமித்த நாட்டில் கரைந்து போனார்கள். அன்று தோற்றுப்போன யூதர்களும் பெரிய உளவியல் சிக்கலில் மாட்டி  அதுபோன்ற அழிவை  எதிர் நோக்கினர் [10].

அவர்களின் கடவுள் தொற்றுப் போய்விட்டார் என்று கருதினால் அவர்களின் அடையாளம் அழிந்து போகும்.  இதுதான் அன்றைய யூத அறிவுசீவிகள்  எதிர்நோக்கிய முக்கிய சிக்கல்   இதிலிருந்து அவர்கள் தப்பிக்க வகுத்த உத்திதான்  “உலகை ஆளும் ஒற்றைக் கடவுள்” என்ற தத்துவம். பாபிலோனியர்களிடம்  இசுரேல்  தோற்றதற்குக் காரணம், இசுரேலியர்களின்  கடவுள் வகுத்த ஆணைகளை மக்கள் பின்பற்றாததனால் தான். அதனால்   கடவுளின் கோபத்திற்கு உள்ளாகி, கடவுள் எதிரிகளை அனுப்பி  பழிவாங்குகிறார். நமது கடவுள் இசுரேலுக்கான கடவுள் மட்டுமல்ல, உலகத்தையே ஆளும் ஒற்றைக் கடவுள். அவரின் கட்டுப்பாட்டில்தான் அனைத்து நாடுகளும், உலகமும் இயங்குகிறது . நாம் கடவுளின் ஆணையைப் பின்பற்றினால், நாம் இழந்தது அனைத்தும் கிடைக்கும் என்று யூத அறிவுசீவிகள் விளக்கமளித்தனர் [10].

இந்த ஒரு விளக்கத்தின் மூலம்  ஒரே  கல்லில் பல காய்களை வீழ்த்தினார்கள்.

இந்த  இறை கோட்பாட்டை  அன்றைய யூதர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட தொகையினர் மட்டுமே ஏற்றுக்கொண்டனர். மற்றவர்கள் இவர்களை தூற்றினார்கள். இதுபோன்ற நம்பிக்கைகள்தான் நமது  இவ்வளவு துன்பத்திற்கும் காரணம் என்றனர். முடிவில் நம்பிக்கை கொண்ட யூதர்கள் மட்டுமே மிஞ்சினர், மற்றவர்கள் கரைந்து காணாமல் போயினர்.

அவர்களைவிட பலம் வாய்ந்து விளங்கிய பண்டைய பாபிலோனியர்களோ,  எகிப்தியர்களோ, ரோமர்களோ, அறிவிற்சிறந்த கிரேக்கர்களோ இன்றில்லை. ஆனால்  யூதர்கள் இன்றும் இருக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் என்னவென்றால் வலிமை என்பது நீடித்து இருப்பதல்ல. எந்த ஒரு நாடோ பண்பாடோ காலப்போக்கில் வலுவிழக்கும். அவ்வாறான வலுவற்ற நிலையில் அவர்கள் அழியாமல் தாக்குப்பிடிக்கிறார்களா என்பதே அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. யூதர்களின் விடாப்பிடியான நம்பிக்கையே அவர்களை காத்து வந்திருக்கிறது. எப்பொழுதெல்லாம் அவர்கள் பாரிய பின்னடைவு அல்லது தோல்வி ஏற்படுகிறதோ, அப்பொழுதுதான் அவர்களின் நம்பிக்கையேக் கூடும். ஆனால் மற்றவர்களுக்கு தோல்வி என்பது நம்பிக்கையை குறைக்கும். இதுதான் யூதர்களின் வெற்றிக்குள் இருக்கும் ஒரு இரகசியம். இரண்டாயிரம் ஆண்டுகளாக நாடில்லாமல் திரிந்தாலும் நம்பிக்கையினால் நாட்டை மீண்டும் அடைந்தனர்.

யூதர்கள் கையாண்ட உத்திகள் பார்ப்பதற்கு சிரிப்பாகத் தோன்றினாலும், நாம் உணரவேண்டிய ஒன்று என்னவென்றால் மனிதனின் உளவியல் அன்றிலிருந்து இன்றுவரை மாறவில்லை. மனிதன் அதே மனநிலையில்தான் உள்ளான். அதனால் உலக தேசியங்களும் இதே மனநிலையிலேயே செயல்படுகின்றன. யூதர்கள் என்ன உத்திகளை பயன்படுத்தினார்களோ, அதே உத்திகளை தேசியங்கள் அவர்களின் சூழலுக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்துகின்றன.

உலகிலுள்ள ஒவ்வோரு தேசியமும் தங்களது வரலாற்றை உன்னதமாகவே எண்ணுகிறது. உலகில் எந்த ஒரு நாட்டின் வரலாறும் தோல்வி மனப்பான்மையுடன் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கவே  முடியாது. இது ஒவ்வொரு  தேசியத்தின் அடிப்படை உளவியல் தேவை.  இது ஏனென்றால் தேசியம் என்பது ஒருவனின் அடையாளமான “நான்”  என்பதில்  ஐக்கியமாகிவிடுகிறது [11]. அதனால் ஒருவன்  தனது தேசியத்தை  தாழ்வாக நினைப்பது, அவன் தன்னையே தாழ்வாக நினைப்பது போன்றதாகும். அது நடக்கமுடியாத காரியம். எப்படி தன்னை தாழ்வாக நினைக்கும் மனிதர்கள்  உளவியலால் பாதிக்கப்பட்டு தற்கொலை  செய்துகொள்கிறார்களோ. அதுபோல தனது வரலாற்றை தாழ்வாகக் கருதும் தேசியமும் அழிந்துபோகும்.

இதனால்தான் எந்த ஒரு  நாட்டின் பள்ளி  வரலாற்றுப் புத்தகங்களும் தங்களது வரலாற்றை உன்னதப்படுத்தி மேன்மையாகவேக் கூறும்.  வரலாற்றுப் புத்தகங்கள் மாணவர்களிடம்  தேசிய  அடையாளத்தை உருவாக்கி  தேசிய சிந்தனையை வளர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை;  தேசிய வரலாற்றில் உண்மை என்பது இரண்டாவது பட்சம்தான் என்பதை வரலாற்று ஆசிரியர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

“In his study History – Remembered, Recovered, Invented” Bernard Lewis doubted whether nationalist history ever had any value to the historian, but he did recognize the great contribution of nationalist history to the national movement itself.”[12]

இந்த உளவியல் சிந்தனையைப்  .போர்களிலும் காணலாம். ஒவ்வொரு நாடும் தனது இழப்புக்களைக் குறைத்தும், எதிரிகளின் இழப்பைக் கூட்டியும் காண்பிக்கும். போரில் எதிரிகளால் தோற்கடிக்கப் பட்டோம், நாங்கள் எதிரிகளைவிட தாழ்ந்தவர்கள்  என்று எந்த  தேசியமும் ஒப்புக்கொள்ளாது. அவ்வாறு தோல்வி ஏற்பட்டாலும் அதைத் திட்டமிட்ட  பின்னகர்வு என்றே கூறும். இதுவும் வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்ளும் உண்மை[13].

ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு பொற்காலம் வைத்திருக்கும், அதைப் போற்றிப் புகழும். அது பெரும்பாலும் கட்டியமைக்கப்பட்ட பொய்யாகவே  இருக்கும். உதாரணமாக இந்துத்வா தேசியர்கள், புராணக் கதைகளை எடுத்துக்கொண்டு அன்று “விமானங்கள்” இருந்தன, “ஏவுகணைகள்” இருந்தன,. உலகிலேயே நாம்தான் அனைவரையும் விட முன்னேறிய நாடாக இருந்தோம் என்று பொற்காலக் கதைகளைக் கூறுவார்கள். இதுபோன்ற பொற்காலக் கட்டுக்கதைகளை அனைத்து தேசிய சிந்தனைகளிலும் காணலாம். இவ்வாறு ஒரு தேசியம் கூறுவதற்கானக் காரணம் என்பது உளவியல் ரீதியாக மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி, அவர்களைத் தூண்டி எதிர்காலத்தில் ஒரு “பொற்காலம்” காண்பதே. உதாரணமாக அமெரிக்க அதிபர் தேர்தலில் “அமெரிக்காவை மீண்டும் உன்னதமாக்குவோம்”  என்று பரப்புரை செய்துதான் திரம்பு வெற்றிகொண்டார். அவ்வாறே பில் கிளிண்டனும்  பரப்புரை செய்தார்.

வரலாற்று ஆசிரியர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்வது என்னவென்றால்:  தேசத்தின் வரலாறு என்பது ஏதோ பழையது, எந்தவொரு விளைவும் இல்லாதது அன்று. ஒரு தேசிய இயக்கம் தேசத்தின் எதிர்காலத்தை இறந்தகால வரலாற்றின் சாயலில் உருவாக்க முயல்கிறது.   ஒரு தேசத்திற்கு எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல இறந்தகால வரலாறும் முக்கியம்; தேசத்தின் பொன்னான இலக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல தேசத்தின் பழைய பொற்காலமும் முக்கியம் [14]. நாம் ஒருவகையில் வரலாற்றின் பிடியில் சிக்கியுள்ள கைதிகள். நாம் எதுமாதிரியான வரலாற்றை எடுத்துக் கொள்கிறோமோ, அது  நமது உளவியலைத் தூண்டி நமது எதிர்கால செயல்பாடுகளைத் தீர்மானிக்கும்.

இதனால்தான் ஒவ்வொரு தேசமும் தனது வரலாற்றை உன்னதமாக எழுதி, ஒவ்வொரு பின்னடைவையும்  தனது வரலாற்றில் வெற்றியாக பதிவு செய்து முன்னேறுகிறது. அவ்வாறு செய்யும் தேசங்களை வாழ்கின்றன. தோல்வி மனப்பான்மையில் இருக்கும் தேசங்கள் விரைவில் அழிந்துபோகின்றன. அவ்வாறுதான் மனிதர்களின் உளவியல் பரிணாமத்தால் கட்டியமைக்கப்பட்டுள்ளது.

அடுத்து என்ன?

வரலாறு கூறும் பாடம் என்னவென்றால் நம்பிக்கையில்லாமல் நம்மால் வெற்றிகரமாக அடுத்த கட்டத்திற்கு நகர முடியாது. அவ்வாறான நம்பிக்கையை எப்படிப் பெறுவது?

முதலில் 2009-ஐ நமது வரலாற்றில் சரியாக நம்பிக்கையுடன் பதிவு செய்யவேண்டும். 2009-ஐ தோல்வி என்று எடுத்துக்கொண்டால் நம்மை யாரும் காப்பாற்ற முடியாது. எதிரியும் அதைத்தான் விரும்புவான். பரணி கிருஷ்ணரஜனி அவர்களின் பார்வை இவ்விடத்தில் சரியானது: 2009 நிகழ்வுகளை முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் என்று இரண்டாகப் பிரிக்கவேண்டும். முள்ளிவாய்க்கால் என்பது சிங்களமும் உலக நாடுகளும் இணைந்து நடத்திய இனப்படுகொலையைக் குறிப்பது. இதைக்கொண்டு    அவர்களைக் குற்றாவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். நந்திக்கடல் என்பது போராளிகளும் மக்களும் விடுதலைக்காக இறுதிவரை களமாடியதைக் குறிப்பது. இதை எக்காரணம் கொண்டு தோல்வி என்று ஏற்கமுடியாது. கிரேக்கர்களின் தெர்மாப்பிளையோ அல்லது யூதர்களின் மாசாதவோ தோல்வி என்று பதியப்படவில்லை. அவை மகத்தான வெற்றிகளாகவே பதியப்பட்டுள்ளன [7,3]. இதுபோன்ற நிகழ்வுகள் காலம் முழுதும் எதிரொலித்து ஒரு இனத்தை காத்து இயக்கும் வல்லமை கொண்டது. அதனால் நந்திக்கடலின் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு அதை ஒரு மகத்தான வெற்றியாகவே பதியப்படவேண்டும். அதையேத்தான் இறந்த மாவீரர்களும் விரும்புவார்கள். இந்த வெற்றி மனநிலையே நம்மை அடுத்த கட்டத்திற்கு  நம்பிக்கையுடன் நகர்த்தும் உந்து சக்தியாக இருக்கும். எவ்வாறு கிரேக்கர்களும் யூதர்களும் மீண்டார்களோ, அதுபோன்ற மீட்சிக்கு வழிவகுக்கும்.
எந்த ஒரு குழு நம்பிக்கையையும் ஒரு  சமூகமாக இணைந்துதான் தக்கவைக்க முடியும்.  புலிகளும் யூதர்களும் ஒரு தனிப்பட்ட சமூகமாக இருந்ததனால்தான் அவர்களது  நம்பிக்கையை தக்கவைக்க முடிந்தது. இன்றைய நமது சமூகம் பல மூடநம்பிக்கைகள் கொண்டு, உள்ளுக்குள் பல முரண்களைக் கொண்டு, ஒருவரை ஒருவர் நண்டு போல பின்னுக்கு இழுத்து,  தேவையில்லாத இடங்களில் தனது ஆற்றலை வீணடிக்கும் சமூகம்.  இதுபோன்ற பண்பாட்டைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்துதான் புலிகள்  புலிப்பண்பாட்டை உருவாக்கினர்.
ஒரு சமூகம் ஒரு பேரிடரை/ பேரிழப்பை  சந்தித்தபின், தன்னை பலப்படுத்திக்கொள்ள மறுசீரமைக்கும். இதை  ஏற்கனவே பகுதி-1 -இல் விரிவாகப் பார்த்தோம். யூதர்கள் தங்களின் பின்னடைவிற்கு எதிரிகளையோ அல்லது விபத்துக்களையோ குற்றம் சாட்டவில்லை, மாறாக பிழை தங்களின்மீதே உள்ளது என்று எடுத்துக்கொண்டார்கள். அதனால் புதிய சூழலுக்கு ஏற்றபடி  அவர்களின் சமூகத்தை மறுசீரமைத்து முன்னேறினார்கள். பரிணாமத்தில் எந்த  உயிர் அல்லது அமைப்பு தனது சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்கிறதோ, அதுவே வெற்றிபெறுகிறது. அந்த வகையில் யூதர்கள் தங்களின் மீது  பழியை எடுத்துக்கொண்டு மறு  சீரமைத்ததே  சிறந்து உத்தி. இதுவும் அவர்களின் வெற்றிக்கான ஒரு காரணம்.  .

2009-இல் இனவழிப்பிற்கு காரணமாக நாம் “திமுக முதல் ஐ.நா வரை திட்டி தீர்த்துவிட்டோம்”. ஆனால் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையான காரணம் என்பது நாமாகிய மக்கள்தான். தமிழ்நாட்டில் 6 கோடி மக்களாக இருந்தும் இறுதி  ஈழப்போரில் எந்த உதவியும் செய்யாமல் மானாட மயிலாட பார்த்துக்கொண்டிருந்தோம். நமக்கில்லாத அக்கறை ஏன் ஐ.நாவுக்கு இருக்கவேண்டும்? அடிப்படையில் ஒரு கடைந்தெடுத்த கேவலமான சமூகம் நாம் என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, நாம் மாறிய சூழலுக்கு ஏற்ப எது மாதிரியான சமூக மறுசீரமைப்புகளக் கொண்டு வரவேண்டும் என்று சிந்திக்கவேண்டும். அவ்வாறு சீரமைக்கவில்லை என்றால் இன்னொரு இனவழிப்பு நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

https://sethusubbar.wordpress.com/2019/04/28/eelamlesson6/

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.