தமிழீழ மண்ணும் குர்திஷ்தான் தேசமும்!!

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்தேறிய அவலத்தினை இன்று குர்திஷ் மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அன்று மௌனமாய் வேடிக்கை பார்த்த உலகம் இன்றும் வேடிக்கை பார்க்கிறது.  பதறித்துடிக்கிறது தமிழர்களாகிய எங்கள் மனங்கள். உரிமைகள் கேட்பதற்காய் ஒடுக்கப்படுவதென்பது வல்லரசுகளின் கூடட்டுச்சதிக்குள் நிகழ்ந்தேறும் ஒரு மாபெரும் நிகழ்ச்சிநிரலே. ஈழத்தமிழர்களர்களின் குருதி படிந்த வரலாற்றினைப் போலவே குர்திஷ் மக்களின் வரலாறும் உள்ளது. ஈழத்தமிழர்களின் உரிமைக்குரல் ஒடுக்கப்பட்டுவிட்டது.  குர்திஷ் மக்களின் குரல் வளை இப்போது நசுக்கப்படுகிறது.

 `அமைதி வசந்தம்’ என்ற பெயரில் துருக்கி நடத்தி வரும் போரால் அதிகளவில்   குர்திஷ்  மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அடித்தாலும் ஓயமாட்டோம் என போராடுகிறது குர்திஷ். அமெரிக்க அதிபர்   ட்ரம்ப்,  படைகளை  எடுத்துக்கொண்டதோடு,  நிற்காமல்,  ``அமெரிக்க வெள்ளை மாளிகை ஒன்றும் காவல்காரன் இல்லை,  சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் தாயகம் திரும்பும் நேரம் இது. நம்முடன் சேர்ந்து போரிட்டபோது குர்திஷ்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். ஆனால், தற்போது தனியாகப் போரிடும்போது அவர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. சிரியாவில் துருக்கி ஊடுருவியிருப்பது என் எல்லைக்கு உட்பட்டதல்ல, அதேபோல் குர்திஷ்கள் ஒன்றும் ஏஞ்சல்கள் இல்லை. துருக்கியில் குர்திஷ் தன்னாட்சிக்காகப் போராடி வரும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி, பயங்கரவாத ஐ.எஸ் அமைப்பைவிட மிகவும் மோசமானது” எனக் கூறியுள்ளார்.

இவரின் நடவடிக்கையைக் கண்டித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் அனைவரும் ஒருமனதாக வாக்களித்துள்ளனர் என்பதுடன் பல நாடுகளின் கண்டனத்தையும் கொடுத்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க,

உலகில் நீண்ட கலாச்சாரத்தைக் கொண்டிருந்தாலும் , தமிழினத்தைப்போல நாடற்று வாழ்பவர்கள் குர்து  இனமக்கள். சாதாரண கணிப்பீட்டின்படி,  25 முதல் 35 மில்லியன் குர்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.   பல படைகளில் போர் வீரர்களாக பணியாற்றியுள்ள இவர்கள் அச்சமற்ற போராளிகள் என்று நீண்ட காலமாக பெயரெடுத்தவர்கள்  எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  குர்து  தேசியவாதிகள் தங்களது வரலாறு  2500 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே தொடங்கியதாக சொல்கின்றனர்.  இவர்கள் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் மற்றும் அர்மீனியா ஆகிய ஐந்து வெவ்வேறு நாடுகளில் உள்ள நிலப்பரப்பில் வசித்து வருகின்றனர்.

 அதிகமான மக்கள் தொகை,  நீண்ட நெடிய வரலாறு, இனத்திற்கான தனி அடையாளம் போன்றவைகள்  இருந்தாலும் , குர்து  மக்கள் தங்களுக்கென ஒரு தாய்நாடு இல்லாமல் வாழ்கின்றனர்., துருக்கி   நேச நாடுகளுடனான  லொசேன் ஒப்பந்தத்தால் ஏலவே பரிந்துரைக்கப்பட்டிருந்த குர்திஸ்தான் என்பது  கனவாய் போனது  குர்து மக்களுக்கு. தமக்கான தாயக பூமிக்காக இவர்கள் அனுபவிக்கும் இன்னல்களின் அடுத்தொரு அவலமே, இன்றைய துருக்கியின் தாக்குதல்.  தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் காவலர்களாய் இருந்ததுபோல இன்றுவரை ஒய்.பி.ஜி என அழைக்கப்படும் குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படையே  குர்திஷ் மக்களை பாதுகாக்கிறது.

கடந்த காலங்களில், குர்திஷ்தான் என்ற  தனி நாட்டிற்காக செய்த முயற்சிகளினால் குர்து மக்கள் பல அடக்கு முறைக்கு உள்ளானார்கள் . குர்து மக்களின் மொழி, பெயர்கள், பாடல்கள், உடைகள் போன்றவை முற்றிலுமாக  துருக்கியில் தடை செய்யப்பட்டுவிட்டன.  அவர்களின் தனித்துவ அடையாளங்களை அழித்ததன் மூலம் அவர்களை அடக்கிவிட எத்தனித்தது துருக்கி.       தன் திட்டத்தின்படி, காய் நகர்த்திய துருக்கிக்கு, ரம்ப்பின் படைநகர்த்தல் செயற்பாடு, இன்னும் இலகுவாக பாதை அமைத்திருக்கிறது. அதாவது குர்திஷ் மக்கள் தனிநாடு கேட்டு போராடியதை துருக்கியின் அதிபரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, அவர்களின் இயலுமையை அழிப்பதற்காக தருணம் பார்த்த துருக்கிக்கு அமெரிக்க அதிரின் அறிவிப்பு "பழம் நழுவி பாலில் விழுந்தது"  போலாயிற்று.

துருக்கியின் ராணுவ அடக்குமுறையை எதிர்நோக்கியுள்ளனர்  குர்து இனத்தவர்கள் . கடந்த புதன்கிழமை இரவில்  துருக்கி ராணுவம் வான் வழித்தாக்குதலைத் தொடங்கியது. டல் அப்யத் உள்பட 2  நகரங்களில் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.  துருக்கியின் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி அங்கு வசிக்கும் 2 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். குழந்தைகளும் பெண்களுமாக கொன்று குவிக்கப்படும் அவலக் காட்சியானது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் நடந்தவைகளை நினைவூட்டுகின்றன.

நாங்கள் என்ன கேட்டுவிட்டோம், "எங்களுக்கென ஒருநாடு, எங்களுக்கென ஒரு தனித்துவம், நாங்கள் நாங்களாக வாழ வேண்டும்"
.இதற்காகவா இப்படி அடித்து, நொறுக்கப்பட்டு, அவலத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். நாடற்றவர்களாய், நாதியற்றவர்களாய் வாழ்வது எம் போன்றவர்களுக்கான சாபமா?

இலங்கையில்,    கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டுகள்  வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்து  சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய  இனவழிப்பை போல குர்திஷ் மக்களும் இன்று அதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  பொறுத்த நேரத்தில் கைவிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர். அமெரிக்காவின் சம்மதத்துடன்   துருக்கிய அரசாங்கம்  சிரியாவில் குர்திஷ் படைகளுக்கு எதிராக ஒரு குருதி வெள்ளத்திளை ஓடவிட எத்தனித்திருக்கிறது.

 உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே அஞ்சும் போராளிகளாகக் குர்தியப் பெண் போராளிகள் உள்ளமை  வியக்கவைக்கும் உண்மையே. அவர்களின் ஓயாத வீரமும் சாயாத தன்னம்பிக்கையும் இன்றுவரை களத்தில் கணைகளாகிப் பாய்ந்துகொண்டிருக்கிறது. தனித்துவம் பறிக்கப்பட்ட ஒரு இனம் காலஓட்டத்தில் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டுவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.