மீண்டும் சல்மான் கானுடன் இணைந்த பிரபுதேவா
தபாங் 3 படத்தைத் தொடர்ந்து, சல்மான் கான் நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ராதே’ என பெயரிடப்பட்டுள்ளது.
சல்மான் கானின் வெற்றிகரமான படங்களில் ஒன்றாக கருதப்படும் தபாங் படத்தின் மூன்றாவது பாகத்தை பிரபு தேவா இயக்கிவருகிறார். இப்படத்தில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட பணிகளில் மும்முரமாக இருக்கிறது படக்குழு.
2007ஆம் ஆண்டு வெளியான ‘வாண்டட்’(‘போக்கிரி’ இந்தி ரீமேக்), தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் தபாங் 3, ஆகிய படங்களைத் தொடர்ந்து, பிரபு தேவா மூன்றாவது முறையாக சல்மான் கானை நாயகனாக வைத்து இயக்கவுள்ள படத்திற்கு ‘ராதே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நேற்று(அக்.18) வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் குறித்து பிரபு தேவா செய்தியாளர்களிடம் கூறும் போது, “சல்மான் கான் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இல்லையெனில், ரசிகர்கள் ஒரே மாதிரியான படத்தை நாங்கள் மீண்டும் மீண்டும் எடுக்கிறோம் என சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். அடுத்த ஆண்டு பக்ரீத் அன்று இப்படம் வெளியாகும். விரைவாக பணிகள் நடைபெற்று வருகின்றன” எனக் கூறியுள்ளார்.
இந்தப் புதிய படம் முழுக்க ஆக்ஷன் கலந்த த்ரில்லராக உருவாகவுள்ளது. சல்மான் கான் இப்படத்தில் காவல் துறை அதிகாரியாக மீண்டும் நடிக்கவிருக்கிறார். படத்தின் பெரும்பகுதி மும்பையில் படமாக்கப்படுகிறது. சல்மானின் சகோதரர் சோஹைல் கான், ரீல் லைஃப் தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.
கருத்துகள் இல்லை