மிகுந்த அச்சம் கலந்த மனவேதனையுடன் புதைகுழியில் அடக்கம் செய்தோம்!!

மிக நீண்டகாலமாக எமது ஆதரவாளர் எம்மால் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களில் முன்னோடியாகத் திகழ்கின்றவர் பெயர் கனகன் என்று செல்கிறது அந்த அறிமுகம் .....

மிடுக்கான தோற்றம் கிராமத்துப் பாணியிலான ஒருமையில் அமைந்த பேச்சு ..அவரும் எம்முடைய வாகனத்தில் ஏறிக்கொண்டு பயணித்தார் பல இடங்களைக் காண்பித்து பின்னர் பாட்டாளிபுரத்தில் இறுதியான இடத்தையும் அவரே காண்பித்து அந்த செயற்பாடு நிறைவடைய தன் சமூகம் சார்ந்த பங்களிப்பினையும் வழங்கினார். போராளிகளிடத்தில் அலாதியான பிரியத்துடன் உரிமையுடனும் எந்தப் பெரிய ஆளையும் வாடா போடா என சகஜமாகப் பேசுவதும் ஒழிவு மறைவின்றி எதையும் வெளிப்படையாகப் பேசுதிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.....
சுனாமி தாக்கிய சில நிமிடங்களிலேயே எமது மருத்துவர் குழு கடற்கரையில் இருந்த மலைமுந்தல் கிராமத்துக்கு செல்ல வேண்டியேற்பட்டது. கிராமத்தையே காணவில்லை. தென்னை மரங்கள் மட்டும் சாய்ந்து நிமிர்ந்த படியே இருந்தது. எமக்கு எதிர்முனையிலிருந்து இருவர் எமது அம்புலன்ஸ் இனை நோக்கி காயமுற்ற நிலையில் ஒரு பெண்ணைத்தூக்கிக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தனர் ....இவர்கள் இருவரும் எப்படித்தப்பினார்கள் என்ற கேள்வி ...என்னையறியாமலே என் வாயால் வந்து விட்டது ....அருகில் சென்று பார்த்த போது ஒருவர் கனகன் மற்றயவர் கிராம சேவையாளர் பரஞ்சோதி ஐயா.. வியப்பாக இருந்தது G.s பட்டித்திடலில் இருப்பவர் கனகன் வீரமாநகரில் இருப்பவர் எப்படி இங்கே எமக்கு முதல் வந்தார்கள் ........? எனக்கு சுனாமி தாக்கிய போது ஏற்பட்ட பாரிய சத்தம் கேட்ட போது வைத்திய சாலைக்கு அருகில் இருந்த கனகன் அவர்களிடம் தான் என்ன சத்தம் என்று கேட்டு விட்டுப் போனேன் அதற்கிடையில் இவர் எப்படி அங்கே வந்தார் என்ற கேள்விக்கு விடை கேட்க அன்று நேரமும் கிடைக்கவில்லை ....இன்று வரை அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் அவர் சந்தர்ப்பம் தரவில்லை.அந்தளவுக்கு அவரது சமூக ஈடுபாடும் சேவையும் இருந்தது.
தனது சமூகத்தை ஏனைய சமூகங்களைப் போல் மாற்றிவிட வேண்டும் கிராமத்தின் தோற்றத்தில் வளர்ச்சி வேண்டும் என அவர் காட்டிய அக்கறையே கிராமத்தின் இன்றைய தோற்றம் எனலாம் ......ஒரு காலத்தில் எந்தச் சங்கத்தின் தலைவரைச் சந்திக்க வேண்டும் என்று தேடிச் சென்றாலும் இறுதியில் கனகன் அவர்களுடைய வீட்டிலேயே போய் நிற்க வேண்டியிருக்கும் அனைத்துச் சங்கங்களிலும் அவரே செயற்பாட்டளராக இருப்பார்.
விவசாயத்தில் பாரியளவில் நாட்டம் கொண்டிருந்த இவர் விவசாய சம்மேளனத்தின் தலைவராக இருந்து விவசாய செயற்பாட்டினை வளர்த்து விட்டதில் சிறப்பான பணியினை ஆற்றியவர். கடுமையாக நோய்வாய்ப்பட்டதன் பின்னரும் தன்னால் முடிந்த பங்களிப்புக்களை நல்கிவந்தவர் திடீரென என எம்மை விட்டு பிரிந்து விட்டமை எமது பிரதேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.ஒரு பிரதேசத்தில் உள்ள அனைவரும் இவரது உறவுக்கள் ....கிராமத்தின் அத்தனை பேரையும் சொந்தக்காரர்களாகக் கொண்ட ஒரு விருட்சம் தான் கனகன்.
எவ்வளவோ வளங்களை உருவாக்கிய போதிலும் இறந்தவர்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வதற்கான சேமக்காலை இல்லாமை இவரையும் வாட்டியது. இறப்பின் பின்னர் தனது உடல் நிம்மதியாக குழியில் இருக்க வேண்டும் என அடிக்கடி அவரை நான் பார்க்கச் சென்ற போதெல்லாம் தனது ஆதங்கத்தைச் சொல்லுவார். இதுவரை சீர் திருத்த முடியவில்லையே என்கின்ற ஏக்கம் கடைசி வரை அவருக்கு இருந்தது."என்னுடைய தலையினையும் திருகி எடுத்து வந்துவிடுவார்கள் " என்று நகைச்சுவையாகச் சொல்லுவார்.எமது கிராமங்களில் புரையோடிப் போயுள்ள மூட நம்பிக்கைகளின் விளைவு இறந்தவர்களை மனநிறைவுடன் அடக்கம் செய்ய முடியவில்லை இவரது தலையும் எடுக்கப்படலாம் என்ற அச்சத்துடனேயே அடக்கம்செய்து விட்டு வரவேண்டியதாகி விட்டது ...
கருத்துகள் இல்லை