ஆதரவு இல்லை அனுதாபம்!!

முதலாம் போர்: 1983 ஜுலை 23இல் தொடங்கி 1987 ஜுலை 29 வரை;
இரண்டாம் போர்: 1990 தொடங்கி 1995 வரை;
மூன்றாம் போர்: 1995 தொடங்கி 2002 வரை;
நான்காம் போர்: 2006 ஜுலை 26இல் தொடங்கி 2009 மே 18 வரை;
200,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள். முதியவர்களும், பெரியவர்களும், இளைஞர்களும், சிறுவர்களும், பால் மனம் மாறா பச்சை சிசுக்களும், தொட்டில் விட்டில் பூச்சிகளும், ஆயிரக் கணக்கில் அநியாயமாகச் சாகடிக்கப் பட்டார்கள்.
பல இலட்சம் இலங்கைத் தமிழர்கள் காணாமல் போனார்கள். ஒரே வார்த்தையில் சொன்னால்... மனிதக் கட்டமைப்பு கொல்லப் பட்டது. மனித வரலாற்றில் ஓர் இருண்ட வரலாறு.
அந்த இழப்புகளினால் உலகத்தின் இதயம் வலிக்கிறது. மனிதங்களின் மனம் வலிக்கிறது. சாமானிய மனிதம் வெடித்துச் சிதறுகின்றது. வலிகளின் உக்கிரம் உச்சத்திற்கும் போகின்றது.
நடந்து முடிந்த அநியாயங்களை மீள்பார்வை செய்து பார்க்கும் போது வேதனை... வேதனை. இருக்கிற கொஞ்ச நஞ்சக் கண்ணீரும் காய்ந்தும் போகிறது. அதுதாங்க இலங்கை உள்நாட்டுப் போர்.

மறுபடியும் சொல்கிறேன். அது அங்கே நடந்த ஓர் உள்நாட்டுப் போர். அது அடுத்த நாட்டு உள் விவகாரம். அதில் நாம் தலையிட வேண்டாம். அவசியமும் இல்லை.
ஆனாலும் கரைந்து போன அந்த அப்பாவி மக்களுக்காக அனுதாபப் படலாம். தப்பு இல்லையே. அதே சமயத்தில் அந்த அனுதாபத்திற்குத் தடை விதித்தால் நியாயம் இருப்பதாகவும் தெரியவில்லை.
மற்றபடி அவர்களின் உள்நாட்டுப் போரையும் நான் ஆதரிக்கவில்லை. தமிழீழ விடுதலை இயக்கத்தையும் நான் ஆதரிக்கவில்லை. அனுதாபப் படுகிறேன்.
இருந்தாலும் இன்னொரு பக்கம் பார்த்தால்... அந்த உள்நாட்டுப் போர் நமக்குத் தேவை இல்லாத விஷயம் என்று சொல்லி விலகவும் முடியவில்லை. ஏன் என்றால் சாகடிக்கப் பட்டது மனித உயிர்கள். ஓர் உயிர் அல்ல. இரண்டு உயிர் அல்ல. பல பல ஆயிரம் உயிர்கள்.
அந்த உயிர்களுக்காக அனுதாபப் படுகிறோம். நாமும் மனிதர்கள். அவர்களும் மனிதர்கள். மனிதர்களுக்காக மனிதர்கள் அனுதாபப் படுவதில் தப்பு இல்லைங்க.
மறைந்து போனவர்களின் வலிகள் ஒவ்வொரு நாளும் அழ வைக்கின்றன. ஆழ்மனத்தில் அதீத வேதனைகளை ஆர்ப்பரிக்கவும் வைக்கின்றன.
போர் நடந்து முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 2012-ஆம் ஆண்டில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் ஒரு மில்லியன் (US$1mil - RM3.13mil) அமெரிக்க டாலர் பணத்தை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கி இருக்கிறார்.
2012-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 31 இலட்சத்து 13 ஆயிரம்.
2019-ஆம் ஆண்டு கணக்குப்படி 41 இலட்சத்து 19 ஆயிரம்.
ஏழு வருசத்தில் நம்ப மலேசிய காசு 10 இலட்சத்திற்கும் குறைந்து இருக்கிறது. அதையும் கவனியுங்கள். தொட்டாலும் லஞ்சம்... விட்டாலும் லஞ்சம்... என்று சொல்லி ஒரு வழி பண்ணி விட்டார்கள். இதில் சோஸ்மாவுக்கு ரோசாப்பூ அபிஷேகங்கள். வேதனை.
அந்த உதவி நிதிக்கு ஏற்பாடு செய்தது Tamil Forum Malaysia (TFM) என்று அழைக்கப்படும் மலேசியத் தமிழ் வாரியம். 2009-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வாரியம்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதற்காக மலேசியாவில் உருவாக்கப்பட்ட வாரியம். அதன் தலைவராக டாக்டர் ஐங்கரன் இருந்தார். சரி.
அந்த நிதி முழுமையாகப் போய்ச் சேர்ந்ததா... தெரியவில்லை. அதே சமயத்தில் ’களிறு வாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா’ என்கிற பழமொழிக்கு விளக்கம் சொல்லவும் எனக்குத் தெரியவில்லை. மன்னிக்கவும்.

ஒரு முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக அண்மையில் 12 பேர் கைது செய்யப் பட்டார்கள்.
சோஸ்மா குற்றச் செயல் பாதுகாப்புச் சட்டம் (Security Offences Special Measures Act 2012: Sosma) எனும் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை. சரி.
மலேசியக் காவல் துறையினர் அவர்களின் கடமையைச் செய்து உள்ளார்கள். அவர்களின் கடமை உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறோம். மரியாதை செய்கிறோம்.
கைது செய்யப் பட்டவர்களில் ஒரு சிலர், இலங்கையின் தமிழீழ இயக்கத்தினருடன் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருக்கலாம் எனும் குற்றச்சாட்டு. சரி.
எவ்வளவு பணம் என்கிற விசயத்தைச் சொல்ல வேண்டியது காவல் துறையின் கடப்பாடு. அதற்கான சான்றுகளை அவர்கள் முன் வைப்பார்கள் என்று எதிர்பார்ப்பது நம்முடைய நிலைப்பாடு.
இவர்களைப் போல முன்னாள் பிரதமர் நஜீப் அவர்களும் பண உதவி செய்து இருக்கிறார். இல்லீங்களா.
ஒரு மில்லியன் என்பது பெரிய காசு. இல்லீங்களா. ஒரு காசு என்றாலும் குற்றம் தான். இல்லீங்களா.
அந்த வகையில் முன்னாள் பிரதமரும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவரும் தமிழ்ப் புலிகளுக்கு உதவி செய்து இருக்கிறார் என்று முடிவு எடுக்கலாமா? எடுக்க முடியுமா?
வேண்டாங்க.
மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்ட உதவிகள் மனிதத் தன்மையில் செய்யப் பட்டவையாக இருக்கட்டும். என்றைக்கும் அவை அனுதாபத்தின் அலைகளாக இருக்கட்டும்.
அலைகள் ஓய்வதில்லை. அனுதாப அலைகளும் ஓய்வது இல்லை.
பிரதமர் நஜீப் அவர்களைப் போல அந்த 12 பேரும் அனுதாபம் காட்டி இருக்கலாம் அல்லவா. அதற்காக அவர்களைச் சோஸ்மாவின் கீழ் கைது செய்யலாமா? குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் கைது செய்து இருக்கலாமே?
காவல் துறையினர் நல்ல ஒரு முடிவை எடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். பினல் கோட் குற்றவியல் சட்டங்கள் வழியாகக் குற்றப் பதிவுகள் செய்ய வேண்டும். நிரூபிக்கப்பட வேண்டும். அல்லது உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
நீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதுவே என் தாழ்மையான வேண்டுகோள்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
20.10.2019
கருத்துகள் இல்லை