மனித உரிமைகள் அமைப்பு - பிரேமன் நடாத்திய கலாசார நிகழ்வு!📷

மாலை 17.00 மணியளவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சர்வதேசத் தீர்ப்பாய நீதிபதியும் கொலம்பியப் பங்குத்தந்தையும் தமிழீழ உணர்வாளருமான அருட்திரு. ஜிரால்டோ பொதுச்சுடரேற்றி நிகழ்வை ஆரம்பித்துவைக்க, பிரேமன்- 1 தமிழாலய நிர்வாகி தேசியக்கொடியினை ஏற்றிவைத்தார். பங்குத்தந்தை ஜிரால்டோ அவர்கள் தனது உரையில் தமிழீழத்தில் மேற்கொண்ட அவதானிப்புச் சுற்றுப்பயணம் பற்றியும், அங்கே உள்ள மக்களின் திறந்த வெளிச்சிறை வாழ்வு பற்றியும், முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நிகழ்வில் கலந்துகொண்டது பற்றியும் விவரித்தார்.
´´தமிழீழம் வாழ்கிறது (Vive Tamileelam )´´ அதற்கு அழிவு என்பது கிடையாது என்பதைத் தாம் எப்போதோ உணர்ந்துவிட்டதாகவும் தமிழ்மக்கள் தொடர்ச்சியாக ஒருமித்து இயங்கவேண்டும் என்பதையும் எடுத்துக்கூறினார்.
தமிழீழத் தேசிய விடுதலைச் செயற்பாட்டாளர் திரு. கனகேஸ்வரன் ( வரதன்) அவர்கள் நந்திக்கடல் பேசுகிறது நூலின் பிரதியை அருட்தந்தை ஜிரால்டோ அவர்களிடம் அடையாளச் சின்னமாக வழங்க, அதை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட அருட்தந்தை ஜிரால்டோ அவர்கள் , இவ்வாறான ஆவணப்பதிவு காலத்தின் அவசியத் தேவை என்பதையும், அதை இசுப்பானிய மொழியில் மாற்றி, தென்னமெரிக்க நாடுகளில் வெளியிட ஆவண செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
குர்திஸ்தான் மண்ணில் துருக்கிய இன அழிப்புப் படைகளின் பிரசன்னத்தை தடுத்துநிறுத்தக்கோரி, குர்திஸ்தான் இளையவர்கள் அடையாள உரையும் நடனமும் இடம்பெற்றன. தமிழீழத்தில் நடைபெற்ற இனஅழிப்பின் கொடுமை பற்றி ஏற்கனவே தாம் அறிந்திருப்பதாகவும், என்றென்றும் தாம் தமிழ்மக்களின் பக்கம் நின்று போராடத் துணையிருப்பதாகவும், இன்று இந்த மேடையில் தமது இனம் அழிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் திரண்டிருப்பதைப் பார்த்து தாம் உளமார நன்றி தெரிவிப்பதாகவும்
குர்திஸ்தான் சகோதரி ஒருவர் உரையாற்றினார். தொடர்ச்சியாக அனைத்து உறவுகளும் மேடையில் திரண்டு, ´´குர்திஸ்தான் மீதான துருக்கியின் இன அழிப்பு நிறுத்தப்படவேண்டும்´´என்ற வாசகம் அடங்கிய அட்டையினை மேடையில் தாங்கி நின்றிருந்தார்கள்.
´´Rote Pfeffer´´ என்ற யேர்மனிய அமைப்பும் தமிழின அழிப்புக்கெதிராகவும், குர்திஸ்தான் இன அழிப்புக்கெதிராகவும் உரையாற்றியதோடு மட்டுமன்றி, இசைநிகழ்வு ஒன்றையும் வழங்கி இருந்தார்கள். அதனைத்தொடர்ந்து தாளம் இசைக்குழுவின் இசைநிகழ்வு, நடனங்கள், Bremehafen தமிழாலயத்தின் குறியீட்டு நாடகம் , Bremen - 2 தமிழாலயத்தின் நடனங்கள், ஆகியனவும் சிறப்பாக நடைபெற்றன.
தொடர்ச்சியாக ´´நந்திக்கடல் பேசுகிறது´´ நூலின் வெளியீட்டுரையை தமிழீழத் தேசியக் செயற்பாட்டாளர் திரு.வலன்ரைன் அவர்கள் நிகழ்த்த , மேடையில் மக்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார்கள். இரவு 21.50 மணியளவில் தேசியக்கொடி இறக்கப்பட்டு நிகழ்வுகள் இனிதே நிறைவடைந்தன.
கருத்துகள் இல்லை