பராமரிப்பில்லாத ஆழ்துளை கிணறுகளை இப்படியும் பயன்படுத்தலாம்.!
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை கடந்த 26ம் தேதி மாலை 5.40 மணி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. வீட்டின் அருகிலே விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழகம் தாண்டி இந்திய அளவிலும், உலக அளவிலும் பலரும் சுஜித் பாதுகாப்புடன் மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நாள் முதலே இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் வெளியாகி வருகின்றன. மாவட்ட ஆட்சியர்கள் பலர் ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டனர். பலரும் தங்கள் பகுதியில் உள்ள பராமரிப்பில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதிய தலைமுறை விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நீரியல் வல்லுநர் ஜனகராஜ், பராமரிப்பு இல்லாத போர்களை மூடாமல், நீர் சேமிப்புக்காக பயன்படுத்தலாம் என கூறியுள்ளார். அவர் பேசிய போது, “பராமரிப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளில் இரண்டு வகைகள் உள்ளது. முதலாவது, தொடக்கத்தில் தண்ணீர் கொடுத்து கொண்டு வந்து, ஒரு கட்டத்தில் நீர் வற்றிப் போனதால் பயன்பாடு இல்லாத ஆழ்துளைக் கிணறு. மற்றொன்று, எவ்வளவு தோண்டியும் தண்ணீரே கிடைக்காமல் பின்னர் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறு.
இதில், தண்ணீர் கொடுத்து வந்த ஆழ்துளை கிணறுகளை, செயற்கை நீர் சேமிப்பு கேந்திரங்களாக (artificial recharge) பயன்படுத்தலாம். ஏனெனில், தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளைப் போல் பயன்பாட்டில் இல்லாத கிணறுகளும் லட்சக்கணக்கில் உள்ளன. இந்த பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை நீர் சேமிப்பு பகுதியாக மாற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பராமரிப்பில்லாத கிணறுகள் கிராம விஏஓக்கள் மூலம் கணக்கெடுக்கப்பட வேண்டும். ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல், அதன் மேல்பகுதிகளில் செயற்கை நீர் தளத்திற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.
தண்ணீரே கிடைக்காத ஆழ்துளை கிணறுகளை நீர் சேமிப்பு தளங்களாக பயன்படுத்துவதில் விஷ வாயு தொடர்பான சிக்கல்கள் இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை