‘கனவுகள் நிஜமாகும்’: நெகிழ்ச்சியில் சாந்தனு!

தளபதி 64 திரைப்படத்தின் அப்டேட் குறித்து, நடிகர் சாந்தனு‘கனவுகள் நிஜமாகும்’என்று மிகவும் நெகிழ்ச்சியாக டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
விஜய் ரசிகர் என்று தங்களைக் கூறுவதை விடவும் ‘விஜய் எங்கள் அண்ணன்’ என்று உரிமையுடன் சொல்லத் தான் அவரது ரசிகர்கள் பலரும் விரும்புகின்றனர். இளைஞர்கள், குடும்பங்கள் என்று பரவலான ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்திருக்கும் விஜய்க்கு திரைத்துறையிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல முன்னணி நடிகர்கள் கூட அவரது தீவிர ரசிகர்களாக மாறியுள்ளனர்.

ஒரு காட்சியிலாவது விஜய்யுடன் திரையில் தோன்றிவிட வேண்டும் என்று காத்துக்கிடக்கும் ரசிகர்கள் கூட திரைத்துறையில் உள்ளனர். அவர்களுள் ஒருவர் தான் தீவிர விஜய் ரசிகரும், பாக்யராஜின் மகனுமான நடிகர் சாந்தனு. விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதை தனது மிகப்பெரிய ஆசையாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சாந்தனுவின் நீண்ட நாள் ஆசை, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 திரைப்படம் மூலம் நிறைவேறியுள்ளது.
பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ திரைப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்புகளை செப்டம்பர் 30ஆம் தேதி முதல் இன்று(அக்டோபர் 2) வரை தொடர்ந்து தினமும் 5 மணிக்கு வெளியிட இருப்பதாகப் படக்குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாலை 3 மணிக்கும், 6 மணிக்கும் இரண்டு அப்டேட்களை வெளியிடுவதாக படக்குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதன் படி 3 மணிக்கு வெளியிட்டுள்ள அப்டேட்டில் நடிகர் சாந்தனு ‘தளபதி 64’ இல் இணைந்துள்ளார் என்று படக்குழுவின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் “கனவுகள் நிஜமாகும். விஜய் அண்ணாவுடன் திரையைப் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்ததற்கு நன்றி”என்றும் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் 64 வது படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே ‘தளபதி 64’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இளம் மலையாள நடிகர் அங்கமாலி டைரீஸ் புகழ் ஆண்டனி வர்கீஸ் இணைந்துள்ளனர்.

ஆர்வமும் முயற்சியும் துணை நிற்க தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் ஒரு நாள் ‘கனவுகள் நிஜமாகும்’

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.