பிகில் சிறப்புக் காட்சி: தமிழக அரசு அனுமதி!
தீபாவளியை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியாகும் பிகில் திரைப்படத்துக்கு இன்று ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிகில் ஆடியோ விழாவில் பேசிய விஜய்யின் வார்த்தைகள் தமிழக முதல்வர் எடப்பாடியைக் குறிவைத்தே பேசப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இதற்கு அதிமுக அமைச்சர்கள் தரப்பில் கண்டனங்களும் எழுந்தன. இந்தப் பின்னணியில் பிகில் வெளியீட்டில் சிக்கல் இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், சிறப்புக் காட்சிகளுக்கு அரசு தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது. இது குறித்த முழுமையான பின்னணியை நமது மின்னம்பலத்தில் எடப்பாடி - விஜய்: நடப்பது என்ன? என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், பிகில் திரைப்படத்துக்கு முதல் நாள் மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று (அக்டோபர் 24) இரவு அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சந்திப்புக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவிக்கையில், “விடுமுறை தினங்களில் ஏற்கனவே சிறப்புக் காட்சிக்கு அனுமதி உள்ளது. இதனால் பிகில் திரைப்படத்துக்கு நாளை (இன்று) ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதித்த கட்டணத்தையே வாங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சிக்கான நிபந்தனைகளைப் பின்பற்றுவதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்ததால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தந்த முதல்வர், தமிழக அரசுக்கு நன்றி என ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
A big thank you to our honourable CM and the Government of TamilNadu for allowing special shows for this Diwali Weekend
கருத்துகள் இல்லை