காராமணி வடைஎப்படிச் செய்வது?

நவராத்திரியின் ஒன்பது நாட்கள் வைபவத்தின்போதும் சுண்டல் நைவேத்தியம் செய்வது வழக்கம். அதேபோல் பலகார வகைகளும் செய்யப்படும். தினமும் ஒவ்வொரு விதமான சுண்டலோ, பலகாரமோ படையலிடுவதற்குக் காரணம் உண்டு.
அதாவது தேவர்களுக்கு சிவன் அமிர்தம் தந்து காத்தருளினார். அதேபோல், பூமியும் பூமியில் உள்ள மக்களும் உயிர் வாழ்வதற்கு மழை எனும் அமிர்தத்தைத் தந்தருளினார்கள் சிவனும் மகா விஷ்ணுவும். இந்த மழையால் பூமி செழித்துக் கொழிக்க, தானியங்கள் விளைந்தன.

தானியங்கள் என்பவை சக்தியைக் குறிப்பன. எனவே சக்தி எனும் பெண்ணுக்குத் தானியங்களைக் கொண்ட சுண்டல், பலகாரங்கள் முதலானவை நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு, உணவாக வழங்கப்படுகின்றன.

என்ன தேவை?
காராமணி – ஒரு கப்

இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கிராம்பு – ஒன்று

கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?
காராமணியை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய காராமணியுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் இஞ்சித் துருவல், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், இடித்த கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு
பண்டிகை இல்லாத நாட்களில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துச் செய்யலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.