சசிகலா விடுதலை: சலித்துக்கொண்ட தினகரன்!!
சசிகலா விடுதலை குறித்த கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவைச் சட்ட ரீதியாக வெளியே கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தினகரன் உள்ளிட்டோர் தெரிவித்துவருகின்றனர். சசிகலா சிறையிலிருந்து வந்தால் அதிமுகவில் இணைவாரா அல்லது அமமுகவில் சேருவாரா என்ற விவாதங்களும் நடைபெறுகின்றன. இதற்கிடையே சசிகலா, தினகரன் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவார்களாக என்ற கேள்விக்குப் பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், “பொதுக் குழு அதைத் தீர்மானிக்கும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் மன்னார்குடியில் நேற்று (அக்டோபர் 24) செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் தினகரனிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரோ, “அமமுகவில் உள்ள அனைவரும் அதிமுகவில் சேர மனு அளித்துள்ளது போல அவர்கள் பேசுகிறார்கள். இடைத் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டோம் என்பதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். இதில் ஆளுங்கட்சி பணபலத்தில் வெற்றிபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். துரோகிகளுடன் அமமுக இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன்” என்று காட்டமாகப் பதிலளித்தார்.
சசிகலா விடுதலையில் சிக்கல் உள்ளதாகச் சொல்கிறார்களே என்னும் கேள்வியால், சலிப்படைந்த தினகரன், “சசிகலா உரிய நேரத்தில் வெளியே வருவார். இன்று வருவார், நாளை வருவார், தீபாவளிக்கு வருகிறார் என்ற உங்களின் யூகங்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.
வதந்திகளை மட்டும் வைத்துக்கொண்டு பரபரப்பான செய்தி வேண்டும் என்பதற்காகக் கேள்வி கேட்காதீர்கள். சசிகலாவை வெளியே கொண்டுவருவதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.
கருத்துகள் இல்லை