தொடரும் மருத்துவர்கள் போராட்டம்!

மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காலமுறை ஊதியம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் கடந்த 25ஆம் தேதியிலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். மருத்துவர்களுடன் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவர்கள் போராட்டம் நான்காவது நாளாக நீடித்து வருகிறது.
நாமக்கல்லில் மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. ஒருசில மருத்துவர்கள் மட்டுமே அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மருத்துவமனைப் பிரிவு, காய்ச்சல் பிரிவுகளில் பணியாற்றினர். இதனால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதுபோலவே பல மாவட்டங்களில் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் மருத்துவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னையை பொறுத்தவரை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 10 பேர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (அக்டோபர் 28) ராஜீவ் காந்தி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன், “மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் போராட்டத்தால் அப்பாவி ஏழை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளில் நியாயங்கள் இருப்பதை மறுக்க முடியாது. அவை நிறைவேற்றப்பட வேண்டியவையே” என்று குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்கள் போராட்டம் நீடித்தால் இனிவரும் நாட்களில் நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும். பல இடங்களில் சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவர்களுக்கும் நோயாளிகளின் உறவினர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இது சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாகவும் மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் அரசு பேசி சுமூகத் தீர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவே இவை சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழக அரசாக இருந்தாலும், அரசு மருத்துவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கடமை மக்கள் நலனைப் பாதுகாப்பது ஆகும். அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த சில நாட்களாக நடுக்காட்டுப்பட்டியில், சிறுவனை மீட்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் நிலையில், அவர் தலைநகரம் திரும்பும் வரை காத்திருக்காமல் அடுத்த நிலையில் உள்ளவர்கள் அரசு மருத்துவர்களுடன் பேசி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.