சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று கூறமுடியுமா? அவர்கள் எங்கே?மீராவின் கேள்வியால் ஆடிப்போன கோத்தபாய!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் எழுப்பிய கேள்விகளினால் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச பதிலளிக்க திணறிய நிலையில் பதிலளித்துள்ளார்.


நேற்று (15) மதியம் சங்ஹரிலா ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கேள்வியும் பதில்களும்,

   ஊடகவியலாளர் மீரா ஶ்ரீனிவாசன்: இராணுவத்திடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்களுடைய உறவுகள் கேட்கிறார்கள். அந்நேரம் இராணுவத்தை முன்னின்று நடத்தியவர் என்ற வகையில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று கூறமுடியுமா? அவர்கள் எங்கே?

கோட்டபாய ராஜபக்‌ஷ: நீங்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன். நான் இராணுவத்திற்கு தலைமை தாங்கவில்லை.

ஊடகவியலாளர் மீரா ஶ்ரீனிவாசன்: உங்கள் சகோதரர்?
கோட்டபாய ராஜபக்‌ஷ: இல்லை... இல்லை... இராணுவத்திற்குத் தலைமை தாங்கியது இராணுவத் தளபதி.

ஊடகவியலாளர் மீரா ஶ்ரீனிவாசன்: அப்போது நீங்கள் பாதுகாப்புச் செயலாளராக இருந்தீர்கள். நிச்சயம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த மக்களின் கேள்விக்கு என்ன பதில் கூறுவீர்கள்?

கோட்டபாய ராஜபக்‌ஷ: என்ன கேள்வி?

ஊடகவியலாளர் மீரா ஶ்ரீனிவாசன்: சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது?

கோட்டபாய ராஜபக்‌ஷ: 13,784 பேர் என்று நினைக்கிறேன், அவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு சிவில் பாதுகாப்புப் பிரிவில் வேலை வழங்கப்பட்டது. அத்துடன், இன்னும் சிலர் பாதுகாப்புப் படைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்கள்.

விடுதலைப்புலிகள் காணப்பட்ட தொடர்புகளின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் 6 மாதங்கள், ஒரு வருடம் அல்லது 2 வருடம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஊடகவியலாளர் மீரா ஶ்ரீனிவாசன்: அப்படியென்றால், காணாமல்போனவர்கள் இல்லை என்றா அர்த்தம்?

கோட்டபாய ராஜபக்‌ஷ: சரணடைதல் என்பது வேறு, காணாமல் போகின்றமை என்பது வேறு.

போர் இடம்பெற்ற போது ராணுவத்தில் கடமையாற்றிய உயர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் என சுமார் 4000இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

போர் காலத்தில் பலர் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைவடைந்து உயிரிழந்தார்கள். நானும் அவ்வாறான சம்பவங்களை நேரில் பார்த்திருக்கிறேன். அவ்வாறு உயிரிழந்தவர்களை உறவினர்கள் அடையாளம் காணாமையினால் அவர்கள் காணாமல்போனவர்களாக கருதப்படுகிறார்கள்.

ஊடகவியலாளர் மீரா ஶ்ரீனிவாசன்: தாங்கள் இராணுவத்திடம் கையளித்த உறவுகள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பதிமூவாயிரம் பேரில் உள்ளடங்கவில்லை. அவர்கள் இன்னும் வீடுதிரும்பவுமிமல்லை என்று வடக்கிலுள்ள சில குடும்பங்கள் கூறுகின்றன. அப்படியானால், அவர்கள் பொய் கூறுகின்றார்களா?

கோட்டபாய ராஜபக்‌ஷ: “சிலர் அவ்வாறு கூறலாம். அது குற்றச்சாட்டு மட்டுமே. இந்த விடயம் தொடர்பில் நாம் விசாரணைகளை நடத்தினோம். ஆணைக்குழுக்களை நியமித்தோம். ஆனால் குறிப்பிட்ட நபர்கள், குறிப்பிட்ட திகதிகளில், குறிப்பிட்ட இடத்தில் காணாமல் போயுள்ளதாக யாரும் கூறவில்லை."

ஊடகவியலாளர் மீரா ஶ்ரீனிவாசன்: ஆனால், சரணடைந்தவர்கள், சரணடைந்த திகதி போன்ற தகவல்களை பரணகம ஆணைக்குழு வெளியிட்டதே?

கோட்டபாய ராஜபக்‌ஷ: இல்லை. நான் அவ்வாறு நினைக்கவில்லை.

ஊடகவியலாளர் மீரா ஶ்ரீனிவாசன்: ஆம் சேர். அது பரணகம ஆணைக்குழு. எனவே. ஓகே.

இதன்போது இறுதியில் மற்றுமொரு ஊடகவியலாளரும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கேள்வியை தொடுத்ததால் கடந்த காலம் பற்றி கேட்க வேண்டாம். எதிர்காலம் பற்றி கேளுங்கள் நான் இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி என்று கோத்தாபய மேலும் கேள்வி கேட்க விடாமல் நழுவிக் கொண்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.