தாய்..!!

எல்லோருக்கும் முன்னெழுவாள்
எல்லாவற்றையும் செய்து வைப்பாள்
காலையுணவு கட்டியுந்தந்து
கணவனை வேலைக்கு அனுப்பி வைப்பாள்


பிள்ளைகளைத் தானே எழுப்பி
பள்ளிக்கவர்களை அனுப்பும் வரைக்கும்
எண்ணிலடங்கா வேலைகள் செய்வாள்
என்றுமே சோம்பலா யிருக்க மாட்டாள்

வீடுவாசல் சுத்தம் செய்வாள்
விழுந்து விழுந்து உபசரிப்பாள்
விருந்தும்  மருந்தும் அவளே தருவாள்
விபரீதமாய் எதுவும் செய்யாள்..

அனைவரின் தேவைகள் அறிந்து செய்வாள்
அழுக்குத் துணிகள் அனைத்தையும் துவைப்பாள்
பள்ளிவிட்டு வந்தவர்களைப்
பாசத்தோடு அரவணைப்பாள்

மாலைநேரச் சிற்றுண்டியோடு
மணக்க மணக்கத் தேநீர் தருவாள்
மாலை நேரமானல் பள்ளிப்
பாடம்  செய்ய உதவிபுரிவாள்..

இரவுநேர உணவொடு வேலை
இடைவிடாது செய்துமுடிப்பாள்
இடைக்கிடையே தொலைக்காட்சியும் பார்த்து
அடிக்கடி அவளே அழவும் செய்வாள்

எத்தனையோ வேலைகள் செய்வாள்
என்றைக்குமே சலிக்கமாட்டாள்
அத்தனைக்கும் பலன் எதிர்பாராள்
அவளுக்கென்று எதையும் செய்யாள்..

என்ன வேலை செய்கிறாயென்
றெவரேனும் கேட்டுவிட்டால்
சும்மாதான் இருக்கிறேன் என்பாள்
சுமைதாங்கி அவளே ஆவாள்.

தம்பலகமம் கவிதா.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.