தமிழ், முஸ்லிம் மக்கள் சஜித்திற்கு வாக்களிக்க வேண்டும் - விஜயகலா!

யுத்தம் முடிவடைந்த பின்னரும் அரசாங்கத்திடம் மண்டியிட வேண்டிய நிலையிலிருந்த தமிழ், முஸ்லிம் சமூகம் நலமுடனும் கௌரவத்துடனும் வாழத்தகுந்த சூழலை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்தது.


 இந்நிலையில் இம்முறை தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் அனைத்தும் சஜித் பிரேமதாஸவிற்கே வழங்கப்படும் என்பதுடன், எமது வெற்றியும் உறுதியாகியிருக்கின்றது. எனவே வடக்கு, கிழக்கு மற்றம் மலையக தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி காலை 8 மணிக்கு முன்னரே வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தமது வாக்கை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்க வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி, ஆட்சியமைத்தோம். அந்த அரசாங்கத்தின் மூலமே வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் நாங்கள் இழந்தவைகள் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், பெருமளவான அபிவிருத்தி செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் வடக்கு ,  கிழக்கு அரசியல் பிரச்சினைக்கு பாராளுமன்றத்தின் ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியினால் தீர்வு வழங்கப்படலாம் என்ற அச்சத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதியினால் அரசியல் நெருக்கடி நிலையொன்று உருவாக்கப்பட்டது. எனினும் தொடர்ச்சியாகப் போராடி நீதித்துறையின் வாயிலாக நாங்கள் அதில் வெற்றிகண்டோம்.

இந்நிலையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ களமிறக்கப்பட்டிருக்கிறார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக சமுர்த்திக் கொடுப்பனவு இருமடங்காக அதிகரிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு, பலருக்கும் அந்தந்த மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கிராமங்களுக்கும் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு, அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 'ரன் மாவத' திட்டத்தின் ஊடாக வீதி உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே நாங்கள் அனைத்தையும் செய்துகாட்டிய பின்னர் தான் இங்கிருந்து பேசிக்கொண்டிருக்கிறோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.