ராஜபக்ச கும்பலிடமா மீண்டும் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்கள்?

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வாழ்க்கை நடத்திய ராஜபக்ச கும்பலிடமா மீண்டும் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.


“நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சஜித் பிரேமதாஸ என்னிடம் ஒப்படைத்திருக்கின்றார். அவருடைய நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் விதமாக எவ்வித இன, மத, பிரதேச பேதங்களுமின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்” எனவும் அவர் உறுதியளித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி வாரியபொல நகரில் ஏற்பாடு செய்திருந்த பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது “மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவாகுவதற்கு முன்னர் அவருக்கு மிகச்சொற்ப நண்பர்களே இருந்தனர். அப்போது நானும் அவருடைய சிறந்த நண்பர்.

ஒருநாள் அவர், “தற்போது என்னுடைய சட்டைப்பையில் இருக்கின்ற இரண்டு ரூபா பல மாதங்களின் பின்னரும் அப்படியே இருக்கும்” என்று கூறினார். இதிலிருந்து அவர் அரசியல் ஊடாக மக்களின் பணத்திலேயே வாழ்க்கை நடத்தியிருக்கின்றார் என்பது தெளிவாகின்றது. இத்தகைய நபர்களிடமா மீண்டும் நாட்டைக் கையளிக்கப் போகின்றீர்கள்?

அடுத்ததாக தேசிய பாதுகாப்பைப் பற்றிப் பேசுகின்ற கோட்டாபய ராஜபக்ச 15 வருடங்கள் அமெரிக்காவில் வசித்தார். ஒருவர் 20 வருடங்கள் இராணுவத்தில் சேவையாற்றினால் அவர் ஓய்வூதியத்தைப் பெற்று ஓய்வுபெற முடியும். ஆனால், கோட்டாபய ராஜபக்ச இந்த விதிமுறையைப் பின்பற்றவில்லை. அவர் இன்றும் வெட்கமில்லாமல் எமது அரசு வழங்கும் இராணுவத்துக்கான ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்கின்றார்.

மஹிந்த குடும்பத்தினர் இந்த நாட்டிலிருந்து கொள்ளையடிப்பதை சுனாமியின் போதிலிருந்து ஆரம்பித்தனர். தமது பெற்றோருக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்காகக் கொள்ளை அடித்தவர்கள் மஹிந்த குடும்பத்தைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? இத்தகையவர்களிடம் இருந்து மக்கள் எதனை எதிர்பார்க்க முடியும்?

அதேபோன்று கடந்த ஆட்சியில் கொழும்பைச் சுத்தப்படுத்துவதற்கு அபான்ஸ் ஊழியர்கள் 3000 பேர் பணிபுரிகின்றனர் எனவும், அவர்களுக்கு 35,000 ரூபா வீதம் செலுத்தப்படுகின்றது எனவும் கோட்டாபய ராஜபக்ச காண்பித்தார். ஆனால், உண்மையில் 1,500 ஊழியர்களே பணியாற்றியுள்ளனர். எனவே, எஞ்சிய 1,500 பேருக்காக வழங்கப்பட்ட மாதாந்த ஊதியம் தலா 35,000 ரூபா கோட்டாபயவினால் மோசடி செய்யப்பட்டிருக்கின்றது” – என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.