கூட்டமைப்பு ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கே - உத்தியோகபூர்வ அறிவிப்பு!

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


இதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில், இலங்கைக்கு ஜனநாயக ரீதியாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்தற்கான தேர்தல் 2019 நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது அதிகூடிய எண்ணிக்கையிலான ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டைக் குறிப்பிட விரும்புகிறது.

இத்தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோருடன் மற்றும் பலரும் போட்டியிடுகின்றனர். தற்போதுள்ளவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர்களில் முதல் இருவருக்கிடையிலேயே போட்டி பிரதானமாக நிலவுவதாகத் தோன்றுகிறது.

புதிதாகத் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி உண்மையாகவே ஜனநாயகத்தில் பற்றுறுதி கொண்டவராகவும், சர்வாதிகாரப் போக்கில் அதிகாரத்துவவாதம் மற்றும் எதேச்சாதிகாரம் ஆகியவற்றிற்கு  எதிரானவராகவும் இருக்க வேண்டும்.

அத்துடன் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை, சேவைத்துறை, குறிப்பாக அரசாங்க சேவை, பொலிஸ் சேவை மற்றும் ஆயுதப்படை சேவை ஆகியவற்றின் மீதும் சொல்லப்பட்ட சேவைகளைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் பல்வேறு நிறுவனங்களின் மீதும் உண்மையாகவே பற்றுறுதி பூண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

அதேபோல், அடிப்படை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்ட ஒருவராகவும் நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது உண்மையாகவே பற்றுறுதி கொண்டவராகவும், அனைத்துப் பிரசைகளினதும் விசேட தனித்துவத்தைப் போற்றிப் பாதுகாக்கவும் வேண்டும்.

அதேவேளை, தாம் சமத்துவமானவர்கள் என்றும் நாடு தம் அனைவருக்கும் உரியது என்று உணர்வதைப் போலவே தாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் உணரும் ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்று, சகல பிரசைகளும் தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஆட்சியில் உண்மையாகவே பங்குபற்ற அவர்களது இனத்துவம் அல்லது மதத்தைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு உதவுவதற்கு பற்றுறுதி பூண்டவராகவும் இருக்கவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவ்விரு வேட்பாளர்களினதும் முன்னைய செயற்பாடுகளுடன் சேர்த்துப் பார்க்கப்படும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பற்றிய ஒரு பரிசீலனையானது, புதிய ஜனநாயக முன்னணியின் சஜித் பிரேமதாசவின் வேட்பிலும் நிகழ்ச்சித் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பதுதான் சரியான செயலாக அமையும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

பொருளாதார விடயங்கள் தொடர்பாக, இரு வேட்பாளர்களும் மிகவும் விரிவான வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். எந்த அளவிற்கு அவை நிறைவேற்றப்படும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும்.

ஊழல் என்பது இரு வேட்பாளர்களது அரசாங்கங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டாகும். இலங்கை இருப்புக்கொள்ள வேண்டுமாயின், ஊழல் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

இவ்வனைத்துக் காரணிகளையும் கவனத்திற்கொண்டு, குறிப்பாக முக்கிய முனைகளில் அவர்களது முன்னைய செயற்பாடுகளையும் அவரவர் தேர்தல் விஞ்ஞாபனங்களின் அடிப்படையிலான எதிர்காலச் செயற்பாடுகளையும் கவனத்தில் கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி அனைத்து மக்களையும், குறிப்பாக தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களை அன்னம் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.