இன்பங்கள் இனிமையாய் பூப்பதில்லை!

இன்பமும் துன்பமும் வாழ்வின் இரு சக்கரங்கள். அவை ஒன்றுக்கொன்று சமனானனவை. வாழ்வியல் இயக்கத்திற்கு பெரும் பங்காற்றுபவை. இன்பங்களை சுகிப்பதும் துன்பங்களை வெறுப்பதும் மனித இயல்பு.
ஆனால் நாம் ஒரு விடயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இன்பங்கள் மனதிற்கு எவ்வளவு மகிழ்வு தருகின்றதோ அதே போன்று துன்பங்களும் அனுபவம் என்னும் பாடத்தை தருகின்றது. அனுபவம் என்ற பாடமே வாழ்க்கையை வெற்றிகொள்ள உதவுகின்றது. துன்பங்களில் வரும் அனுபவத்தைக்கொண்டு சிந்தனைகளைச் செம்மைப்படுத்தவும் சரியான முறையில் திட்டமிடவும் முடியும். சட்டெனக் கிடைக்கும் இன்பம் நின்று நிலைப்பதில்லை. போராடி அடையும் வெற்றியில் தான் முழுமை கிடைக்கின்றது. 


செல்வச் சீமாட்டியாய் வாழ்ந்தவர் புளோறன்ஸ் நைற்றிங்கேல். அவர் இன்பங்களைத் தேடியது பணத்திலோ பொருளிலோ அல்ல. மற்றவர் மீது காட்டும் அன்பில், தான் காட்டும் இரக்கத்தில். விளக்கேந்திய பெருமாட்டி என்ற மாறாத நாமத்துடன் நாம் பார்க்கும் அவர், தன் வாழ்வில் தாண்டிய துன்பங்கள் ஏராளம். ஒரு சீமாட்டியாய் வாழ்ந்தவர் களமுனையில் வீரர்களின் துன்பங்களுடன் போராடி தன்னையும் வதைத்துக்கொண்டார். அந்த துயரத்தில்தான் அவர் இன்பத்தைக் கண்டார். அதனாயே தாதியச் சேவையின் தாயாய் போற்றப்படுகின்றார்.

 அரிச்சந்திரன் கதையை அறிவோமல்லவா.  நாடு நகரிழந்து மனைவி பிள்ளைகளை இழந்து சுடலைக் காப்போனாய் தன் சுயத்தை இழந்து நின்றபோதும் தனது உண்மைத் தன்மையைக் காப்பதற்காய் போராடி சொல்லொணாத துன்பங்களை அனுபவித்து ஆண்டுகள் பல கடந்தே அரசுரிமையையும் மனைவி மக்களையும் மீட்டுக்கொள்கின்றார். அவ்வாறு துன்பங்களைத் தாங்கியதால்  தான் அவரை உலகம் இன்னும் நினைத்துக்கொள்கிறது.

உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறலாம். மிகுந்த வறுமையில் உழன்ற ஒரு குடும்பம், அன்றாட உணவிற்கே அல்லல்பட்டவர்கள், மாற்றி அணியும் ஆடைக்கு கூட வழியற்று நின்றவர்கள், இன்று கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் என்றால் அது சாதாரண விடயமா? அந்த வீட்டின் மூத்தமகன் மிகுந்த வறுமையிலும் பாடுபட்டு படித்தான். வீட்டுக்கூரை வானத்தின் அத்தனை விம்பங்களையும் காட்டும் அளவிற்கு எக்கச்சக்கமாய் ஓட்டைகளைக் கொண்டிருந்தது. கடுங்குளிரிலும் அதனைப் பொருட்படுத்தாது கல்வியில் நாட்டம் கொண்டிருந்தான். தனக்கு உடல் குளிர்வதையே அவன் விரும்பினான். அப்போதுதான் நித்திரை வராது, அவ்வேளையையும் படிப்பிற்கு செலவழிக்கலாம் என எண்ணினான். சுகங்களோ சந்தோசங்களோ இல்லாமல் கல்விகற்ற அவன் பிற்காலத்தில் முகாமைத்துவ அதிகாரியாகி ஒரு மிகப்பெரிய கம்பனியின் முதலாளியானான். இன்று ஐநூறுக்கு மேற்பட்ட பணியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கும் அவனது இளமைக்காலம் எத்தகைய துன்பம் நிறைந்தது என்று பார்த்தீர்களா?
இன்பங்கள் ஒருபோதும் இனிமையாய் பூப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்தால் துன்பங்களால் துவண்டுபோகாமல் வாழ்க்கையை போராடி வெல்லமுடியும். 

கோபிகை!!
தமிழருள் இணையத்தளம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.