எனது மகள் தற்கொலை செய்திருக்கமாட்டாள்: பாத்திமா தந்தை!

சென்னை ஐஐடியில் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி பாத்திமா லத்தீப் என்ற மாணவி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்குக் காரணம், ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட இருவரது பெயரை குறிப்பிட்டிருந்தார். மாணவி இறந்து 5 நாட்கள் கடந்து விட்ட நிலையில் இதுகுறித்து நிர்வாகம் சார்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப், ஐஐடி நிர்வாகம் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். ஐஐடி வேண்டுகோள் இந்நிலையில் ஐஐடி நிர்வாகம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மாணவி பாத்திமா மரணத்துக்கு ஐஐடி மாணவர்கள், பேராசிரியர்கள் சார்பில் வருத்தம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மாணவியின் மரணம் பற்றிய தகவல் நிர்வாக கவனத்துக்கு வந்ததும் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் விசாரணைக்கு உரிய மற்றும் முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. வழக்கின் விசாரணை முடிவுக்கு வருவதற்கு முன்னதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம். சமூக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளால், நாட்டின் உயரிய கல்வி நிறுவனத்துக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. ஐஐடி சென்னையில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் மனநலன் மற்றும் முழு உடல் நலனைப் பேண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூக்குக் கயிறு எங்கிருந்து வந்தது தனது மகளின் மரணம் குறித்து அப்துல் லத்தீப் இன்று மதியம் டிஜிபி திரிபாதியைச் சந்தித்து புகார் அளித்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று டிஜிபியிடம் வலியுறுத்தினேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். என் மகள் தினமும் என்னிடம் பேசுவாள். ஆனால் அன்றைய தினம் மட்டும் பேசவில்லை. எது செய்தாலும் குறிப்பு எழுதி வைத்துவிட்டு தான் செய்வாள். அவள் மனதில் இருந்ததை என்னிடம் சொல்ல முன்வரவில்லை. நடந்ததை வைத்துப் பார்க்கும் போது இது தற்கொலையாகத் தெரியவில்லை. பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மோசமானவர் என்று என்னிடம் கூறுவார். பேராசிரியரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும். எனது மகள் தற்கொலை செய்து கொண்டது சந்தேகமாக உள்ளது. அவளுக்குத் தற்கொலை செய்துகொள்ள அறைக்குள் எப்படி கயிறு வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. மகள் சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அது தற்போது வரை கிடைக்கவில்லை. பாத்திமாவின் செல்போனில் மேலும் நிறைய ஆதாரங்கள் இருக்கும். அதனைச் சீல் செய்து வைத்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். எங்கள் முன்னிலையில் அந்த போன் ஆன் செய்யப்பட வேண்டும். இனி ஒரு பாத்திமா இப்படி இறக்க கூடாது” என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து கீரின்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை அவர் சந்தித்துப் பேசினார். அவருடன் டிஜிபி திரிபாதியும் உடன் இருந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அப்துல் லத்தீப், குற்றவாளியை நிச்சயம் கைது செய்வோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்ததாகவும், இதையடுத்து ஆளுநரைச் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.