கார்த்தி-ஜோதிகா இணையும் ‘தம்பி’!
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள தம்பி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் தியேட்டர்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடிப்பில் உருவாகி வந்த புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. எளிமையான கதையை வலுவான திரைக்கதை முடிச்சுக்களால் கொடுக்கும் ஜீத்து ஜோசப் ‘பாபநாசம்’ படத்திற்குப் பின் தமிழில் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஜோதிகா கார்த்தி அக்கா-தம்பி ஆகவும், சத்யராஜ் இவர்கள் தந்தையாகவும் நடிக்கிறார். கார்த்தியுடன் முதல் முறையாக ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் இது. கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.
கோவா, கொடைக்கானல், ஊட்டி ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படத்துக்குப் பெயரிடப்படாமலேயே இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தையும் முடித்த படக்குழு, தற்போது 'தம்பி' என்ற டைட்டிலுடன், படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. சீமான் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் உருவான படம் 'தம்பி'. இக்கதைக்கும் இத்தலைப்பு சரியாக பொருந்தியுள்ள நிலையில், அந்தப் படக்குழுவினருடன் தலைப்பு உரிமையை வாங்கி, கார்த்தி படத்துக்கு சூட்டியுள்ளனர்.
வயாகாம்18 ஸ்டூடியோஸ், பாரலல் மைண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் டிசம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
கருத்துகள் இல்லை