‘தலைமகனே கலங்காதே’ : ரொனால்டோவுக்கு ரசிகர்கள்!!
போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் போது, தனக்கு பதிலாக சப்ஸ்டிட்யூட் கொண்டுவந்தால் ரொனால்டோ எவ்வளவு கோபப்படுவார் என்பது கால்பந்தாட்ட ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், மிலன் அணிக்கு எதிராக ஜுவெண்டஸ் அணி விளையாடிய லீக் போட்டியின் இரண்டாவது பாதியில் ரொனால்டோவுக்கு பதில் சப்ஸ்டிட்யூட்டாக டிபாலா உள்ளே கொண்டுவரப்பட்டபோது ரொனால்டோ எவ்வித ரியாக்ஷனும் காட்டவில்லை.
50 நிமிடங்களிலேயே ரொனால்டோ வெளியேறியதால், போட்டி முடிவதற்கு மீதமிருந்த 40 நிமிடங்கள், ‘ரொனால்டோ வெளியேறியதற்கான காரணம் என்ன?’ என்று தெரியாமல் ரசிகர்கள் பதட்டத்திலேயே இருந்தனர். ரொனால்டோ வெளியேறிய காரணத்தைப் பார்ப்பதற்கு முன்பு, சிலவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
அக்டோபர் மாதத்தில் தனது தேசிய அணியான போர்ச்சுகல் அணிக்கும், லீக் அணியான ஜுவெண்டஸுக்கும் பல ஆட்டங்களில் விளையாடினார் ரொனால்டோ. லீக் போட்டியில் ஜெனோவா அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டம் மிக முக்கியமானது.
ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் ஜுவெண்டஸ் ஒரு கோல் அடிக்க, ஜெனோவா அணி 40ஆவது நிமிடத்தில் பதில் கோல் அடித்தது. அதன் பிறகு, எவ்வளவு முயன்றும் கடைசி வரையிலும் ஜுவெண்டஸ் அணியினால் கோல் அடிக்க முடியவில்லை. 90 நிமிட ஆட்டம் முடிந்தபிறகு, ரிசர்வ்டு டைமாக 6 நிமிடங்கள் கூடுதலாக ஆட்டத்துடன் சேர்க்கப்பட்டன. அப்போது, ஜெனோவா அணியினரின் கோல் போஸ்டுக்குள், ஜுவெண்டஸ் அணியினர் பந்தை கொண்டு சென்றபோது, ஜெனோவா அணியினர் கீழே தள்ளிவிட்டதால் ஆட்டம் பெனால்ட்டிக்கு மாறியது.
அந்த பெனால்ட்டியை அடிக்கத் தயாராக நின்றவர் ரொனால்டோ. ஆட்டம் டிராவில் முடிந்தால், புள்ளிப் பட்டியலில் தங்களைவிட ஒரு புள்ளி குறைவாக இருக்கும் இண்டர் மிலன் அணி முன்னே சென்றுவிடும். அடுத்தடுத்த ஆட்டங்களில் அழுத்தம் அதிகரிக்கும். அதனைத் தடுக்கவேண்டும் என்றால் இந்த கோல் வெற்றிகரமாக அடிக்கப்படவேண்டும் என்ற அழுத்தம் ரொனால்டோ மீது இருந்தது. அதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, ரொனால்டோ அடித்த பந்து கோல் போஸ்டுக்குள் சென்று ஜுவெண்டஸுக்கு வெற்றியத் தேடித்தந்தது.
லீக் அணிக்காக விளையாடியபோது இப்படிப்பட்ட அழுத்தம் என்றால், தேசிய அணியான போர்ச்சுகலுக்கு விளையாடியபோது ரொனால்டோ ருத்ரதாண்டவமே ஆடினார். லிதுவானியா நாட்டுடன் போர்ச்சுகல் மோதிய ஆட்டத்தின் முதல் பாதியில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். 28ஆவது நிமிடத்தில் பதில் கோல் அடித்தது லிதுவானியா. அப்படியே முதல் பாதி முடிந்துவிட, இரண்டாவது பாதி மேலும் அழுத்தமான சூழலுக்குச் சென்றது. இதனையெல்லாம் உடைக்கும் விதத்தில், 60 நிமிடத்துக்கு மேல் ஆக்ரோஷமாக விளையாடிய ரொனால்டோ 61, 65, 76 ஆகிய நிமிடங்களில் அடுத்தடுத்து 4 கோல்களை அடித்தார். இப்படியெல்லாம் தனது அணிகளுக்காக விளையாடிய ரொனால்டோ ஏன் ஐம்பதாவது நிமிடத்தில் ஆட்டத்திலிருந்து வெளியேறினார்?
இதே கேள்வியைத்தான் ஆட்டம் முடிந்ததும் ரொனால்டோவிடம் கேட்டனர் பத்திரிகையாளர்கள். அவர் கூறிய பதில் பின்வருமாறு...
“உங்கள் கேள்விக்கு பதில் சொல்வதென்றால், கடந்த மூன்று வாரங்களாக நான் சரியாக விளையாடவில்லை என்பது உண்மை தான். இதனால் சர்ச்சை எதுவும் உருவாகவில்லை. உங்களைப் போன்ற பத்திரிகைகள் தான் சர்ச்சைகளை உருவாக்குகிறீர்கள். எனக்கு சப்ஸ்டிட்யூட் செய்யப்படுவது பிடிக்காது தான். ஆனால், நான் கொஞ்சம் சரியாக விளையாடவில்லை. காயத்துடன் விளையாடியாவது ஜுவெண்டஸுக்கு உதவவேண்டும் என நான் நினைத்தேன். ஆனால், நான் போட்டிக்கு முழு உடல் தகுதியுடன் இல்லை என்பதை உணர்ந்ததால், சப்ஸ்டிட்யூட்டுக்கு சம்மதித்தேன்.
என் தேசிய அணிக்காக விளையாடிய கடைசி இரு போட்டிகளிலும் கூட நான் முழு உடல் தகுதியுடன் இல்லை. என் கிளப் அணிக்காகவும், என் தேசிய அணிக்காகவும் தியாகம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால், அதனை பெருமையுடன் செய்வேன். இண்டர் மிலன் அணி, ஜுவெண்டஸ் மீது சுமத்தியுள்ள அழுத்தம் பற்றி உங்களுக்கே தெரியும். நாங்கள் டிரா செய்தாலும், தோற்றாலும் அவர்களை எங்களை பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள். எனவே, என்னால் முடிந்ததை அணிக்காக செய்ய நினைத்தேன். ஒரு கட்டத்தில் நானே அணிக்கு சுமையாக இருப்பது தெரிந்ததும் வெளியேறிவிட்டேன்.
தேசிய அணியிலும் அப்படித்தான். கடைசி இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தால் நாங்கள் தானாகவே உலகக்கோப்பை தகுதிச் சுற்றிலிருந்து வெளியேறியிருப்போம். அது நடைபெற்றுவிடக்கூடாது என்று காயத்துடன் நான் விளையாடினேன். என்னுடைய கால்பந்தாட்ட வாழ்க்கையில் பெரிய காயங்கள் ஏற்பட்டதில்லை. ஒவ்வொரு வருடமும் 50 முதல் 60 போட்டிகளில் விளையாடி விடுவேன். இது ஏதோ எதிர்பாராமல் நடந்ததில்லை. எனக்கு காயங்கள் ஏற்படுவது அரிதானது. ஆனால், அது சமயங்களில் நடந்தே தீரும். இது சாதாரண காயம் தான். என்னுடைய 100 சதவீதத்தைத் தரமுடியாமல் தடுக்கும் சிறிய வலி. என்னுடைய லீக் மற்றும் தேசிய அணிக்கு எப்போதும் என் பங்கைக் கொடுக்க விரும்புகிறேன்” எனக் கூறினார்.
ரொனால்டோ நவம்பர் மாதத்தில் விளையாடிய ஆட்டங்கள் அனைத்தும் மிக முக்கியமானவை. யூரோ கோப்பைக்கான போட்டியில் உக்ரைன், செர்பியா, லுக்செம்பர்க், லிதுவானியா அணிகளுடன் குரூப் B பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல், 8 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றிபெற்று 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கடைசியாக, லுக்செம்பர்க் அணியுடன் போர்ச்சுகல் மோதிய ஆட்டத்தில் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே கோல் அடிக்க முயன்றாலும், ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் தான் ரொனால்டோவால் கோல் அடிக்க முடிந்தது. அதுவும்கூட, ரொனால்டோவால் உருவான கோல் இல்லை. அந்தப் பந்தினை அவர் அடிக்காமல் விட்டிருந்தாலும் அது கோலாக மாறியிருக்கும். அப்படிப்பட்ட நிலையிலும், தனது அணிக்காக விளையாடவேண்டும் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் ரொனால்டோ செயல்பட்டது ரசிகர்களிடையே அவருக்கு பாராட்டினைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
லுக்செம்பர்க் ஆட்டத்தில் அடித்த கோலுடன் சேர்த்து 99 சர்வதேச கோல்களை ரொனால்டோ அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காயத்தினால் சில நாட்கள் ஓய்வில் இருக்கப்போவது பற்றி கவலைப்பட வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் ரொனால்டோவுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர் ரசிகர்கள்.
கருத்துகள் இல்லை