சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் – சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை!!


கேகாலை – யட்டியந்தோட்டை கனேபொல தோட்டம் பகுதியில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அதற்கமைய அவர்கள் இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கும் இடையில் பொலிஸாரின் தலையீட்டுடன் சமரச பேச்சுகள் நடைபெற்றுள்ளன. இதன்படி சேதமாக்கப்பட்ட பொருட்களை புதிதாக கொள்வனவு செய்து கொடுக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக சம்பந்தபட்ட அரச அதிகாரிகள், பொலிஸார், தேர்தல் கண்கானிப்பு பெப்ரல் அமைப்பு, மனித உரிமை அமைப்புக்கள் என்பன சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்ற எந்த அரசியல்வாதிகளும் இதுவரைக்கும் தங்களின் இந்த நிலைமை குறித்து ஆராயவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இனவாதிகள் அல்ல. அவர்கள் வாக்களித்ததும் ஒரு சிங்கள பௌத்த ஜனாதிபதி வேட்பாளருக்கே. அவர்கள் இனவாதிகளாக இருந்திருந்தால் நிச்சயமாக தமிழர்கள் சிவாஜிலிங்கத்திற்கும் முஸ்லிம்கள் ஹிஸ்புல்லாவிற்கும் வாக்களித்திருக்க வேண்டும் என்றும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.