ஜனநாயக ஆதரவு இயக்கம் ஹொங்கொங் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி!!

ஹொங்கொங்கில் அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம் அதிக இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.


சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்படும் ஹொங்கொங்கில் ஜனநாயக உரிமை கோரி கடந்த 6 மாதங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த போராட்டத்தில் அரங்கேற்றப்பட்ட வன்முறை சம்பவங்களால் ஹொங்கொங்கில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் போராட்டத்துக்கு மத்தியில் ஹொங்கொங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூராட்சி மன்ற தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. 18 மாவட்டங்களில் உள்ள 452 மாவட்ட மன்றங்கள் சார்பாக 1,090 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பேருந்து வழித்தடங்கள் மற்றும் கழிவுப் பொருள் சேகரிப்பு போன்ற உள்ளூர் பிரச்சினைகளை கண்காணித்து தீர்வு காணும் அதிகாரம் மாத்திரமே மாவட்ட ஆணையர்களுக்கு இருப்பதால் இந்த தேர்தல் பொதுவாக பெரிய அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால், கடந்த 6 மாதங்களாக ஹொங்கொங்கில் நிலவிவரும் அமைதியற்ற சூழ்நிலை மற்றும் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை அரசாங்கம் கையாண்ட விதத்துக்கு மக்கள் சான்றிதழ் அளிக்கும் வாய்ப்பாகவே இந்த தேர்தல் நோக்கப்பட்டது.

இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் இந்த தேர்தலில் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளனர். இதன் விளைவாக வரலாறு காணாத வகையில் 71 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஒட்டுமொத்தமாக 47 சதவீத வாக்குகள் மாத்திரமே பதிவாகின.

இந்தமுறை வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த மறுகணமே உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் அரசுக்கு எதிராக போராடி வரும் ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

இதன் மூலம் மொத்தமாக உள்ள 18 மாவட்டங்களில் 17 மாவட்டங்களின் மன்றங்கள் ஜனநாயக ஆதரவு ஆணையர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. இந்த தேர்தல் பெறுபேறுகள் நிர்வாக தலைவர் கேரி லாமுக்கான கடும் கண்டனமாகவும், போராட்டத்துக்கான ஆதரவாகவும் நோக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.