காலம் மாறிப்போச்சு - சிந்தனைக்கு!!

மாலதியும் நயனாவும் சந்தைக்குப் புறப்பட்டனர். அவ்வேளை அதே குடியிருப்பில் வசிக்கும் ராதிகா தானும் வருவதாக கூறி இணைந்துகொண்டாள். அவர்கள் மூவருக்குமான உரையாடல் இதோ -----


மாலதி : நயனா, நேற்று காலையிலயே உன்னை வீட்டில காணேல்ல, எங்க போனாய்?

ராதிகா : காலம வெள்ளனவே ஆட்டோவில போனதைக் கண்டனான், அண்ணனோட, தூரப்போனியளோ?

நயனா ; தூரவுமில்ல, கிட்டவுமில்ல, உங்க ஆஸ்பத்திரிக்குத்தான் போனனான்.

மாலதி : ஏன், என்ன வருத்தம்?

ராதிகா  ; ஆருக்கேனும் வருத்தம் பாக்கப்போனியளோ?

நயனா ; வேற ஒருத்தருக்குமில்ல, அவருக்குத்தான், சுகறாம், நேற்று கிளினிக் எண்டு வரச்சொன்னது, அதுதான் போனது,

மாலதி ; அவருக்கு சுகறெண்டா, நீ ஏன்?

நயனா : போடி அக்கா, உனக்கு நக்கல் தான், பாவம் மனுசன், உந்த ஆஸ்பத்திரி விளப்பம் ஒண்டும் தெரியாது, அங்க இஞ்ச தடுமாறும் எண்டு நானும் கூடப்போனனான். சுகர் எண்டவுடனே மனுசன் ஆடிப்போயிட்டுது, பாக்க பாவமா கிடக்கு.

ராதிகா  : அந்தக்காலத்தில உந்த சுகரும் இல்லை, பிறசறும் இல்ல, சனம் கம்புக்கட்டை மாதிரி இருந்ததுகள், இப்ப என்னண்டா, மூண்டு வயசிலயே பிறசர் எண்டுதுகள், கொலஸ்ரோல் எண்டுதுகள்.

மாலதி : அந்தக் காலத்தில கம்பு, தினை, குரக்கன், ஒடியல் எண்டு இயற்கை உணவுகளைச் சாப்பிட்டுதுகள், உடம்பு ஆரோக்கியமா இருந்துது. இப்ப அப்பிடியே?

நயனா : அது சரி, பாழாப்போன பீட்சாவும் பர்கரும் ரூ மினிற்ஸ் நூடுல்ஸ்சும்  கொத்தும் பரோட்டாவும் எண்டு நாங்கள் படுறபாடு கொஞ்சமே. அது உடம்புக்கு வினையா வந்துமுடியுது.

ராதிகா : நீ சொல்லுறது சரிதான், நாங்களும் இந்த திடீர் உணவுகளுக்கு அடிமையாகிக்கொண்டுதானே வாறம்.

மாலதி : அது சரி, கொத்துறொட்டி எண்டா காணும், சின்னன் தொடங்கி பெரிசு வரைக்கும் ஒரே கொண்டாட்டம்தான்.

நயனா : எங்கட காலத்தில றொட்டி சாப்பிடுறது எண்டாலே அபூர்வம் தானே, அமெரிக்கன் மாவின்ர விலை அப்பிடி.

ராதிகா : ஓமடி, அரிசி மாவில புட்டு அவிச்சு, கருவாட்டுக் குழம்பும் வைச்சு அம்மா தந்தால் ஒரு பிடி பிடிச்சுப்போடுவம்.

மாலதி : எப்பவாவது தானே கோதுமை மா வாங்கிறது.  இப்ப கோதுமை மாவிலதான் வேணுமெண்டு பிள்ளையள் அடம்பிடிக்குதுகள்.

ராதிகா : உண்மைதான், ஆனா நாங்கள்தான் பிள்ளையளுக்கு எல்லாத்தையும் சொல்லிக்குடுத்து பழக்கவேணும், இப்ப அதிகமா வாற உடனடி உணவுகளில இருக்கிற குறை என்ன எண்டு சொல்லிக்குடுக்கவேணும்.

மாலதி : நாங்களும் சுகத்துக்காக பாக்காம நல்லதை செய்து குடுக்கவேணுமடி.

நயனா : உழுத்தம்மா, குரக்கன் மா, ஒடியல் மாவை அதிகமா சேர்த்து சாப்பாடுகளைச் செய்து குடுத்தா சாப்பிடத்தானே வேணும். பொரியலோட குடுத்தா சாப்பிட்டிடுங்கள்.

ராதிகா : அதோட பயறு, கடலை எண்டு தானியங்களை நிறையக் குடுக்கவேணும், உந்த புறொயிலர் கோழியும் அதிகமா குடுக்ககூடாது.

நயனா : அதைச்சொல்லு. இப்ப எல்லாத்திலையும் கலப்படம்தான், எல்லாத்திலையும் கெமிக்கல்தான், பின்ன உந்த வருத்தங்கள் வராமல் என்ன செய்யும்.

மாலதி : நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு கனவு மாதிரி, ரியூசன், ரியூசன் என்ற தொல்லை இல்லை, யாரா வரவேணும் என்ற கேள்வி இல்ல, இப்பிடித்தான் வரவேணும் என்ற கட்டாயம் இல்ல,
காலஓட்டத்தோட எங்கட வாழ்க்கையும் ஓடிச்சிது, மகிழ்ச்சி மட்டும் தான் வாழ்க்கையில இருந்தது, இப்ப அப்பிடியே?

நயனா : வண்ணத்துபூச்சி பிடிச்சு விளையாடினதும், சடுகுடு ஆடினதும் இப்ப நினைச்சாலும் மனசுக்குள்ள சிலிர்க்கிது, எங்கட பிள்ளையளுக்கு உந்த சந்தோசம் ஒண்டும் இல்லைத்தானே.

மாலதி : சனி, ஞாயிறு கூட விட்டுவைக்கிறதில்லை, பிறகு தேவையற்ற பிரச்சனைகள், மனஅழுத்தம் எண்டு திரியிறம், காலத்தின்ர கோலத்தை யாருக்குச்சொல்ல?

ராதிகா : சரி சரி சந்தை கிட்ட வந்திட்டுது, வாங்கோ போவம், மிச்சத்தை வரேக்க கதைப்பம்.

கோபிகை

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.