ஊதிய உயர்விற்காக மருத்துவர்கள் போராடுகிறார்களா..?

தமிழகத்தில் இருக்கும் அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அரசு மருத்துவ பிரதிநிதிகளுடன் அமைச்சர் விஜய பாஸ்கர் பேச்சுவார்த்தை விடுத்த நிலையில் அதில்
உடன்பாடு ஏற்படாமல் இருந்தது. இதனிடையே மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையெனில் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் என்று அரசு எச்சரித்திருந்தது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.


இதுகுறித்து கூறிய மருத்துவர்கள்,  " கடந்த ஏழு நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவசர சிகிச்சைகள் தடைப்படாமல் நடந்தது. நாங்கள் சம்பள உயர்வுக்காகப் போராட்டம் நடத்தவில்லை. அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஊதியத் திருத்தத்தை கொடுக்கும்படி கேட்டே  போராடினோம். போராட்டத்தை வாபஸ் பெற்றால் எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறியிருப்பதால் அரசின் மீது நம்பிக்கை வைத்துப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். மேலும் தாமதப்படுத்தினால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்" என்று கூறியுள்ளனர்.


இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்விற்காக போராடுவதாக சிலர் கார சாரமாக விவாதித்து வருகின்றனர். உண்மையில் மருத்துவர்கள் ஊதிய உயர்விற்கு தான் போராடுகிறார்களா, அவர்களின் நான்கு அம்ச கோரிக்கைகள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
கோரிக்கை 1 : மருத்துவ உயர்கல்வி படிப்புகளில் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் இந்த 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள் தங்களை தரம் உயர்த்திக் கொள்வதில் சிக்கல்கள் உண்டாகின்றன. ஆகவே மீண்டும் பழைய முறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

கோரிக்கை 2 : தனியார் மருத்துவ கல்லூரிகளில் குறைந்தபட்ச தகுதியாவது இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் குறைந்தபட்ச தகுதிகளை நிர்ணயித்து இருக்கிறது. ஆனால் இதை அடிப்படையாக வைத்து தமிழக அரசும் பல பணியிடங்களை ரத்து செய்து கொண்டிருப்பதாக அரசு மருத்துவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இவ்வாறு ஒளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் நோயாளிகள் எந்த அளவிற்கு அதிகமாக வருகிறார்களோ அதே அளவிற்கு படுக்கைகளையும் மருத்துவர்களையும் அதிகரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை 3 : தற்போது 20 ஆண்டுகள் பணியை முடித்த பிறகு தான் அரசு மருத்துவர்கள் நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்வு பெற்று 1.3 லட்சம் ரூபாய் சம்பளத்தை எட்டமுடியும். இளநிலை, முதுநிலை மற்றும்  சிறப்பு படிப்புகளை முடித்து அரசு பணியில் சேரவே மருத்துவர்களுக்கு 30 முதல் 32 வயதிற்கு மேல் ஆகிறது. இதனால் இந்த ஊதியத்தை எட்டுவதற்கு 50 வயது ஆகின்றது என்று மருத்துவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மத்திய அரசு பணிகளில் இருப்பதை போன்று 13 ஆண்டுகளிலேயே பணி உயர்த்தப்பட வேண்டும் என்றும் மற்ற மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தை தமிழ்நாட்டிலும் நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

கோரிக்கை 4 : அரசு பணியில் இருப்பதாக உறுதி அளித்து முதுநிலைப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் அந்த படிப்பை முடித்த பிறகு சரியான பணியிடங்களில் நியமனம் செய்யப்படாமல் இருப்பதாகவும் தனியார் கல்லூரிகளில் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவற்றையும் கவனத்தில் எடுக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.