‘ஹேராம்’ படத்தை 40 முறை பார்த்திருப்பேன்: ரஜினி!

கமல்ஹாசனின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், கமல் நடிப்பில் தனக்கு பிடித்த திரைப்படம், அபூர்வ சகோதரர்கள் பார்த்து நள்ளிரவில் கமலை எழுப்பியது, பாலசந்தருக்கும் கமலுக்குமான நெருக்கம் என இதுவரை பகிராத பல்வேறு முக்கியமான தருணங்களைப் பகிர்ந்துள்ளார்.



இன்று(நவம்பர் 8) சென்னையில் உள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் கமல்ஹாசனின் குருவும் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான இயக்குநா் கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. கே.பாலசந்தரின் ஆஸ்தான சீடர்களாக திரையுலகில் வலம் வரும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து சிலையை பாலசந்தரின் மார்பளவு சிலையை திறந்துவைத்தனர்.


அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், கமல்ஹாசனை தனது கலையுலகின் அண்ணன் எனக் கூறினார். அதன் பின்னர் தனது பேச்சைத் துவக்கிய ரஜினிகாந்த், “நேற்று, இன்று கமலுக்கு அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். நேற்று(நவம்பர் 8) பரமக்குடியில் அவருடைய தகப்பனார் சிலையைத் திறந்து வைத்துள்ளார். இன்று அவரது முதல் குழந்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்தைத் திறந்து வைத்துள்ளார். பிறகு, அவருடைய கலையுலகத் தகப்பனார், அவருக்கு மட்டுமல்ல என்னைப் போல பல பல கலைஞர்களுக்கும் தந்தை, கலையுலகின் பிதாமகன், துரோணாச்சாரியார், என்னுடைய குரு கே.பி.சார் சிலையைத் திறந்து வைத்துள்ளார்.


ராஜ்கமலின் புது அலுவலகத்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கமல் அரசியலுக்கு வந்துவிட்டாலும், அவருடைய தாய் வீடான சினிமாவை விடமாட்டார், மறக்கமாட்டார். அவர் நடிக்கவில்லை என்றாலும் கூட, ராஜ்கமல் நிறுவனம் மூலம் பிரம்மாண்டமான படங்களை எடுத்து புதுப்புது நடிகர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துவார். அவருக்குக் கலை என்பது உயிர். எங்கு போனாலும் அதை மட்டும் மறக்கவே மாட்டார். அவருடைய கடைசி நாட்கள் படம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் திரையுலகில் வேறு வேறு துறையில் பணிபுரிந்து நேரத்தைச் சந்தோஷமாகக் கழிப்பார்.


ராஜ்கமல் நிறுவனத்தில் முதலில் எடுக்கப்பட்ட படம் 'ராஜபார்வை'. அப்படம் முழுக்க பார்வையற்றவராக கமல் நடித்திருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது சிவாஜி சாரைச் சந்தித்தேன். 'என்னடா உன் நண்பன் ஒரு படம் எடுத்துட்டு இருக்கானேமே..ஹீரோவுக்கு கண்ணே இல்லையாமே.. 'ராஜபார்வை' என்று பெயர் வைச்சிருக்கானாம். உங்களுக்கு எல்லாம் சொல்றவங்க யாருமே கிடையாதா. அவன்கிட்ட சொல்லுடா. இதெல்லாம் சரிப்பட்டு வராது. அபசகுனம் மாறிடா' என்றார். நான் எப்படிங்க அவர்கிட்ட சொல்றது, நீங்க சொல்லுங்கள் கேட்பார் என்றேன். நான் சொல்லமாட்டேன் என்று சிவாஜி சார் தெரிவித்தார்.


பிறகு 5, 6 வருடங்கள் இடைவெளி விட்டு, ராஜ்கமல் நிறுவனத்தில் நிறைய படங்கள் எடுத்தார்கள். அதில் எனக்கு 'அபூர்வ சகோதரர்கள்' ரொம்பப் பிடிக்கும். அந்தப் படம் வெளியானபோது, படப்பிடிப்பில் இருந்தேன். சில நாட்கள் கழித்துத் திரும்பியவுடன், ஒரு ஷோவில் பார்த்தேன். அந்தப் படம் முடியும் போது இரவு 2 மணி இருக்கும். இப்பவே கமலைப் பார்க்க வேண்டும் என்றேன். தூங்கிக் கொண்டிருப்பார் என்றார்கள். இல்லை.. இப்போ பார்த்துத்தான் ஆகணும் என்று போய் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி கை கொடுத்துப் பேசினேன். 'என்னை விட நீங்கள் சிறியவர். 

இல்லையென்றால் உங்கள் காலிலேயே விழுந்துவிடுவேன்' என்றேன். அந்த அளவுக்கு அழிக்க முடியாத ஒரு படம். கிராபிக்ஸ் எல்லாம் பெரிதாக இல்லாத காலத்திலேயே குள்ளமாக நடித்திருப்பார் கமல். இன்றைக்கு இருப்பது போல அவ்வளவு தொழில்நுட்பங்கள் இல்லாத காலம் அது. அதற்காக எடுத்த சிரமங்கள் சாதாரண விஷயமல்ல.



'தேவர் மகன்' ஒரு காவியம். அந்தப் படம் சொன்ன விஷயம், கருத்து. ரொம்பவே ஆழ்ந்து பார்த்தோம் என்றால் ரொம்ப உண்மையான விஷயத்தைச் சொல்லியிருப்பார். நிறைய படங்கள் நான் பார்ப்பேன். பார்ப்பதற்குப் படங்களே இல்லை என்றால், நான் அடிக்கடி பார்க்கும் படங்கள் 'காட்ஃபாதர்', 'திருவிளையாடல்' மற்றும் 'ஹேராம்'. 30 - 40 முறை ஹேராம் படத்தைப் பார்த்திருப்பேன்.ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதமுமே அந்தப் படம் தெரியும். அந்தப் படம் ஒரு தபசு தான். அவர் ஒரு உண்மையான கலைஞானி.
கே.பி. சார் சிலை திறந்தவுடனே, என்னுடைய உணர்வுகளை வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை. புஷ்பா கந்தசாமியிடம் சொன்னது போல, எனக்கு சந்தோஷப்படுவதா, சோகப்படுவதா என்று தெரியவில்லை. அவ்வளவு பெரிய மகான் இப்போது நம்மிடையே இல்லை. சிலை வடிவத்தில் பார்க்கும்போது, அவருடன் பழகிய நாட்கள் கண் முன்னால் நிற்கிறது.


 கொஞ்சம் படங்கள் நடித்தவுடன், உட்கார் என்று சொன்னார் கே.பி.சார். அவர் சொன்ன வார்த்தை நீ தமிழ் மட்டும் கற்றுக் கொள். நான் உன்னை எங்கே கொண்டு போய் உட்கார வைக்கிறேன் பார் என்றார். நான் என்று அவர் சொன்னது, பாலசந்தரை அல்ல, தமிழ் மக்களை. தமிழ் மக்களுடைய ரசனை, அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை என்னுடைய ஆக்‌ஷனில் தெரிந்து கொண்டார். அந்த மாதிரி ஒரு பெரிய மகான்.
அவருக்கும் மிகவும் பிடித்த குழந்தை கமல்ஹாசன். கமல் மீது அவருக்கு அபாரப் பிரியம். ஷூட்டிங்கில் கமல் உட்கார்ந்திருப்பார். கே.பி.சாரோ கமலைப் பார்த்துக் கொண்டே இருப்பார். தூங்குவது, பேசுவது என கமலை ரசித்துக் கொண்டே இருப்பார். இன்று அனந்து பிறந்த நாள். 


அவர் இன்னொரு பாலசந்தர். கமலுக்கு அவர் இன்னொரு தகப்பன். கே.பி.சாரை விட அனந்து சாரிடம் தான் அன்யோன்யம் அதிகம். அதற்குக் காரணம், நாம் நினைத்தது எல்லாம் கே.பி.சாரிடம் சொல்ல முடியாது. ஏனென்றால் பயம். அனந்து சாரிடம் நண்பர்கள் மாதிரி பேசிப் பழகலாம். கமல் சார் என்ன விஷயமாக இருந்தாலும் அனந்து சாரிடம் தான் பேசுவார்.


உலகப் படங்கள் பார்ப்பது, என்ன புத்தகங்கள் படிப்பது எனத் தொடங்கி புதுமையாக என்ன பண்ணலாம் என்று கமலுக்குச் சொன்னது அனந்து சார் தான். அவருடைய பிறந்த நாளன்று இந்த அலுவலகத்தைத் திறந்து, கே.பி. சிலையைத் திறந்து வைத்துள்ளார். கே.பி.சாருக்கு எத்தனைப் பேர் சிலை வைத்தாலும், நெருங்கிய மாணவர், சிஷ்யன் கமல் சிலையைத் திறந்து வைத்தது பொருத்தமாக இருக்கிறது. 


இன்னும் ராஜ்கமல் நிறுவனங்களில் நிறைய படங்கள் எடுத்து இந்திய மக்களுக்கு கொடுக்க வேண்டும். இன்னும் கமல் பற்றி நிறைய பேசனும். வரும் 17ஆம் தேதி இன்னுமொரு பிரம்மாண்டமான விழா இருக்கிறது. அங்கே இன்னும் கமலைப் பற்றி நிறைய பேசுகிறேன். வாழ்த்துக்கள் கமல்’’ என ரஜினிகாந்த் கூறினார்.

இன்று மாலை 3.30 மணிக்கு சத்யம் சினிமாஸில் கமல்ஹாசன் இயக்கி, நடித்த ‘ஹேராம்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரையிடலுக்குப் பின், ஹேராம் படம் குறித்த உரையாடல்கள் நடைபெறவுள்ளது. இதில் கமல் கலந்து கொண்டு பார்வையாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கவுள்ளார். கமல்ஹாசனின் திரையுலக பயணத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட படமாக கருதப்படும் ஹேராம் படத்தின் மறுதிரையிடல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.