புலத்தின் ஒளி கேணல் பரிதி!!
தளராத மனதோடு சாவுடன் கைகோர்த்துத் திரிந்தவர்
தமிழீழ மண்ணிலே களமாடி வென்றவர் - தக்க
தருணத்தில் புலத்தின் ஒளியாக நின்றவர்
08.11.2012 அன்று காதில் விழுந்த அந்தக் கொடிய செய்தி பொய்யாகிப் போகாதோ கண்ணால் பார்த்தது எல்லாம் கனவாகிப் போகாதோ! இன்று நினைத்தாலும் மனம் எண்ண மறக்கிறது, எங்கள் கேணல் பரிதி எங்களுடன் இல்லை என்பதை. எவ்வளவற்றை நாங்கள் இழந்தாலும் உங்கள் நகர்வுகள் எங்கள் இழப்புகளை மறக்கடித்துவிட்டது. ஒவ்வொரு நகர்வுகளிலும் ஓராயிரம் அர்த்தங்கள். எப்படி முடிந்தது இப்படித் திட்டமிட. மற்றவர்கள் மனதை நோகடிப்பது என்பது உங்கள் வாழ்க்கையில் மறந்தும் வராதே. உங்கள் இழப்பால் நாங்கள் இடிந்து போனது எவ்வளவு உண்மையோ அவ்வாறே நாங்கள் வீறுகொண்டெழுந்ததும் உண்மை.
பண்பாட்டு எழில் மிக்க தீவகத்திலே உள்ள கரம்பொன் மண் பெற்றெடுத்த மாவீரன் ம§ந்திரன். களத்திலே ரீகன் புலத்திலே பரிதி. நடராசா-கமலாம்பிகை தம்பதிகளின் இரண்டாவது மகனாகப் பிறந்த இவர் பெற்றோரின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். பெற்றோர் மனதில் இடம் பிடிக்கும் பிள்ளை மற்றோர் மனதிலும் இடம் பிடிக்கும். என்பதற்கு கேணல்பரிதி ஓர் எடுத்துக்காட்டு.
புலம் பெயர் நாட்டுக்கு வந்த போராளிக் குடும்பங்களைத் தேடிப்போய்த் தன்னால் இயன்ற அளவு உதவிகளைச் செய்வார். தன் மக்கள் எந்தத் துன்பமும் படக்கூடாது என்பதில் மிகமிகக் கவனமாக இருந்தார். தாயாக, அண்ணனாக, நண்பனாக, இளையோருக்கு இனிய தாய் மாமனாக அன்புகாட்டி அரவணைத்தவர் பரிதி மாமா.
01 - 04 - 2007 அன்று சிறிலங்கா மற்றும் ஏனைய பல நாடுகளின் சதித்திட்டத்தினால் பிரான்சு அரசு இவரைக் கைது செய்தது. அவரைச் சிறையில் அடைக்க முடிந்ததே தவிர அவரது உணர்வுகளைச் சிறைப்பிடிக்க முடியவில்லை அவர்களால். கேணல் பரிதி வெளியில் இருந்து சாதித்ததை விடச் சிறையில் இருந்து சாதித்தது ஏராளம். 2009 -மே தமிழர் உள்ளங்கள் எல்லாம் சோர்ந்து போய்த் துவண்டிருந்த வேளை தீர்க்கதரிசியான எங்கள் தலைவன் வளர்த்த கேணல்பரிதி சோர்ந்து போகவில்லை. மாறாக எங்கள் தமிழீழத் தேசிய சின்னங்களை அஞ்சல்த் தலைமூலம் வெளியிட்டு அனைத்துத் தமிழ் உள்ளங்களையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். மீண்டும் தன் மக்கள் மனதில் நம்பிக்கை ஒளி ஏற்றியது இப் புலத்தின் ஒளி. எதிரியே இவரது நிலைகண்டு கதி கலங்கிப்போனான்.
அது மட்டுமா? நீதி கேட்டு ஜெனீவாவிற்குப் பயணங்கள் தொடர்ந்த போதெல்லாம் எம்மக்கள் துன்பப் படக்கூடாது என்பதற்காகப் பிரான்சுக் கட்டுப்பாட்டில் இயங்கும் அதிவேகத் தொடருந்தில்; நீதிக்கான பயணத்தைத் தொடர வழி செய்து கொடுத்தார். இவற்றைக் கண்ட எதிரி இடிந்து போனான். கிள்ளக் கிள்ள வளரும் தேயிலைச் செடி போல் கொள்கைகளை அடக்க அடக்கப் பரிதி மாமாவின் உணர்வும் வளர்ந்து கொண்டே போனது. பரிதி என்றாலே எதிரி துடித்துப் போவான். நேர் நின்று மோத முடியாத கோழைகள் 30 - 10 - 2011 அன்று முகமூடி அணிந்து வந்து பேய்கள் தினத்தில் பேயாட்டம் ஆடியது. வாளால் வெட்டியது கேணல்பரிதியை. தன் வீரத்தினால் அவர் உயிர் தப்பினார். எதிரி தனக்குக் குறி வைத்திருக்கின்றான் எனத் தெரிந்தும் அஞ்சாது கடைசி மூச்சுவரையும் தன் பணியைத் தொடர்ந்தார். கோழைக்குத்தான் பல நாள் சாவு. ஆனால் வீரனுக்கு ஒரு நாள்தான் சாவு என்பதை கேணல்பரிதி நன்கு உணர்ந்திருந்திருந்தார். சாவினைக் கழுத்தில் சுமந்தவரல்லவா அவர்.
புலத்தின் போராட்ட மூச்சை நிறுத்த நினைத்த சிங்கள இனவாதம் 08 - 11 - 2012 அன்று எங்கள் பரிதி மாமாவின் மூச்சைக் கூலிப்படையை வைத்து நிறுத்தியது. தனது கோர முகத்தை மீண்டும் ஒரு முறை உலகிற்குக் காட்டியது. கேணல்பரிதியின் உயிரை எடுத்ததன் மூலம் அவரை உலகெங்கும் காட்டியது.
இறந்தும் வாழ்பவர் எங்கள் வீரர்கள் என்பதை சிங்களம் ஏனோ எண்ண மறந்தது. பரிதி என்ற காற்று என்றுமே ஓயாது. அது ஒவ்வொரு இனமானத் தமிழன் மூச்சோடும் கலந்திருக்கின்றது என்பது எதிரிக்கு எப்படித் தெரியும். கூலிப்படைகளை அனுப்பி எங்கள் பரிதி மாமாவைக் கொல்ல முடிந்த சிங்களத்திற்கு எங்கள் உணர்வுகளுக்கு வேலி போடமுடிந்ததா?
நாங்கள் பாயும் போதும் பாடும் போதும் ஓடும்போதும் ஆடும்போதும் உங்கள் அன்பு முகம் தானே தெரிகிறது மாமா. பால் நினைந்தூட்டும் தாய் போல் நாங்கள் கேட்காமலே எங்கள் தேவைகள் எல்லாம் அறிந்து ஒவ்வொரு அமைப்புகள் மூலமும் அனைத்தையும் நிறைவேற்றிய தாயுமானவன் மாமா நீங்கள். எங்களால் எப்படி மாமா உங்களை மறக்க முடியும். பரிதிமாமாவின் இறுதி நிகழ்வு எதிரியையே மலைக்க வைத்த நிகழ்வாக அமைந்திருந்தது. ஏன்தான் சுட்டோம் என்று எதிரியே நினைத்திருப்பான். அன்றய நாள் ஒரு இறப்பு நாளாகத் தெரியவில்லை. ஓர் எழுச்சி நாளாக அமைந்திருந்தது. அன்பான மாமா! இறப்பு நாளைக்கூட எழுச்சி நாளாக்க என்றும் உங்களால்தான் முடியும்.
இந்த மேடையில் நின்று நான்; கூறுகின்றேன் பரிதி மாமா! காலங்கள் மாறலாம், கோலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். ஆனால் உங்கள் மானமும் வீரமும் நீங்கள் புரிந்த சாதனைகளும் என்றென்றும் அழியாது நிலைத்து நிற்கும். உங்கள் மக்கள் மனதில் நீங்கள் என்றும் மாவீரன். எந்நிலையிலும் எப்போதும் இது மாறாது. மாறவே மாறாது! எங்கள் மனங்களில் எரிந்து கொண்டிருக்கும் விடுதலைத் தீ நீங்கள்! இளையோர் ஆகிய நாம் என்றும் உங்கள் வழி நின்று உங்கள் பணி தொடர்வோம். இது உறுதி. உங்கள் கல்லறை மீது சத்தியம் செய்கின்றோம். உங்கள் கனவுகள் நனவாகும். உன்னத தமிழீழம் உருவாகும்.
புலத்தின் ஒளியே எங்கள் உளத்தின் நினைவே
களத்தில் புயலே நிலைகலங்காத் துணிவே
எழுத்தில் வடிக்க இயலா இலக்கணமே - எங்கள்
குலத்தின் விளக்கே எதற்கும் குன்றா மலையே!!!
கருத்துகள் இல்லை