உள்நோக்கத்துடன் ரஜினிக்கு விருதா?


உள்நோக்கத்துடன் விருதுகள் வழங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இது கோவா திரைப்பட விழாவின் 50ஆவது ஆண்டாகும். இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த்துக்குத் திரைப்படத் துறையில் சாதனை புரிந்ததற்காக ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிலி’ (ICON OF GOLDEN JUBILEE) விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என அக்கட்சியின் தலைவர்கள் ஊடகங்கள் வாயிலாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக வாழ்த்துத் தெரிவித்தார். அதுபோலவே அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, அமமுக பொதுச் செயலாளர் தினகரன் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். விருதுக்காக ரஜினிக்கு ஒரு பக்கம் வாழ்த்துகள் குவிய, மறுபக்கம் கமலுக்கு ஏன் விருது அளிக்கவில்லை என்றும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
நேற்று (நவம்பர் 3) செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அண்மைக்காலமாக தகுதியும் திறமையும் அறிந்து விருதுகள் கொடுக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரஜினிக்குத் தகுதியில்லை என்று நான் சொல்ல வரவில்லை. அவருக்கு அந்தச் சிறப்புகள் உள்ளன. இன்னும் பல சிறப்பானவர்களும் இருக்கிறார்கள். உள்நோக்கத்துடன் யாருக்கும் விருதுகள் வழங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்” என்று பதிலளித்தார்.
விசிக பொதுச் செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான ரவிக்குமார், “நடனக்கலைஞர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், கலைத்துறையில் 60 ஆண்டுகள் பணியாற்றியவர் கமல்ஹாசன். அவரைவிட திரைத் துறையில் சாதனை புரிந்தவர்கள் வேறு யார்?” என்று ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டது குறித்து மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபோலவே எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான பட்டுக்கோட்டை பிரபாகர், கமல்ஹாசனுக்கு விருது இல்லையா என்ற கேள்வியைத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக சர்ச்சை எழவே தனது பதிவை நீக்கிவிட்டு அதற்கு உரிய விளக்கம் அளித்துள்ளார். அதில், “மத்திய அரசுக்கு இணக்கமாகவே ரஜினி கருத்துகளை வெளியிட்டு வருவதும், தமிழக பாரதிய ஜனதாவின் முகமாக ரஜினியைக் கட்டமைக்க அந்தக் கட்சித் தலைவர்களின் விருப்பமும் அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதில் கண்டிப்பாக நோக்கம் இருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.