திமுகவினரின் கேள்விகளைத் தடுப்பது யார்?
திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நவம்பர் 16 ஆம் தேதி தர்மபுரியில் நடந்தது. அப்போது பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்த எடுப்பிலேயே ஊடகங்களைக் கடுமையாகத் தாக்கினார்.
நாட்டுப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்காமல் தனிப்பட்ட ஸ்டாலின் பற்றியும், குடும்பம் பற்றியும் ஏன் விவாதிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பிய ஸ்டாலின்... ஊடகங்கள் விரிவாக விவாதிக்காத பிரச்சினைகள் என்று ஒரு பெரிய பட்டியலை வாசித்தார். இந்தப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் விவாதிக்கத் தயாரா என்று கேள்வியும் எழுப்பினார். ஊடகங்களிடம் கோபப்பட்ட பின்னர்தான் ஸ்டாலின் ஆளுங்கட்சியினரையே விமர்சிக்க ஆரம்பித்தார்.
அதேபோல மறுநாள் 17 ஆம் தேதி சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோதும், “இன்று சர்ச்சைக்குரிய ஒரு பொருள் மிசா. மிசாவில் ஸ்டாலின் இருந்தானா என்ற ஒரு சர்ச்சையை சில நாட்களாகவே தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதை விவாதிப்பது என்ற விவஸ்தையே இந்த நாட்டிலே இப்போது இல்லை” என்று ஊடகங்கள் மீது கோபப்பட்டார்.
இதையடுத்து வாட்ஸ் அப்பில் திமுகவினர் ஒரு பட்டியல் தயாரித்து ஸ்டாலின் பச்சரிசி சாப்பிட்டாரா. புழுங்கரிசி சாப்பிட்டாரா, ஸ்டாலின் கட்டுவது ராம்ராஜ் வேட்டியா? ஸ்டாலின் டீயை புறக்கணித்து காபி குடிக்கிறாரா?’ என்றெல்லாம் குறிப்பிட்டு ஊடகங்களை சாடுகின்றனர்.
இப்படி ஒட்டுமொத்த திமுகவினரும் ஊடகங்களை சாடிக் கொண்டிருக்க,. திமுகவின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் மனம் திறந்து தங்கள் பத்திரிகை நண்பர்களிடத்தில் சில கருத்துகளை முன் வைக்கிறார்கள்.
“ஊடகங்களை எங்கள் தலைவர் சாடுவது ஒருவகையில் சரிதான். ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் தலைவர் கவனிக்க வேண்டும். சட்டமன்றம் கூடும்போதெல்லாம் அரசை ஆட்டி வைக்கிற, அரசை நிலைகுலைய வைக்கிற கேள்விகளைத் தொடுக்க வேண்டும் என்று உழைத்து தகவல் திரட்டி புள்ளி விவரங்களோடு கேள்விகளை தயாரிக்கிறோம். அதை கட்சி கொறடாவிடம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும்.
அதற்காக எடப்பாடி அரசைக் குறிவைத்து ஏவுகணைக் கேள்விகளை நாங்கள் எழுதிக் கொடுக்கும்போதெல்லாம் கொறடா சக்கரபாணி அதை அனுமதிப்பதே இல்லையே? எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்டால்தானே ஊடகங்கள் அதை வெளியிடும். மாறாக ஆளுங்கட்சிக்கு சங்கடம் ஏற்படுத்தும் கேள்விகளை எதிர்க்கட்சி கொறடாவே வடிகட்டுகிறார் என்றால் என்ன அர்த்தம்? அதனால்தான், ‘எங்கள் ஊரில் தெருவிளக்கு எரியுமா? எங்கள் ஊர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடக்குமா?’ என்ற ரீதியில் திமுக உறுப்பினர்கள் கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.
தலைவர் ஊடகங்கள் மீது பாய்ச்சல் நடத்தும் முன்பு கொஞ்சம் உள்ளேயும் பாய்ச்சல் நடத்தவேண்டும்” என்கிறார்கள் அவர்கள்.
கருத்துகள் இல்லை