சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு முக்கிய தகவல்!!

சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் வழங்கிய தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகளை தெளிவுப்படுத்துவதற்கான சந்திப்பொன்று நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்ஹ, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போதே அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து தூதரகம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் தொடர்பில் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், சம்பவத்தின் தொடர் நிகழ்வுகள் காலம் மற்றும் அவர் அந்த திகதியில் மேற்கொண்ட நடமாட்டங்கள் என்பன முரண்பட்டு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயங்கள் அங்கிருந்த சி.சி.ரி.வி காட்சிகள், தொலைபேசி பதிவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் உறுதியாவதாக சுவிட்சர்லாந்து தூதுவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அதிகாரிக்கு இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுவதால் அது குறித்து அவர் இலங்கை சட்ட மருத்துவ அதிகாரி ஒருவரின் மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

அதேநேரம் குறித்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதரகத்திடம் வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

கடந்த வாரம் திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை அதிகாரி ஒருவர் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இவ்வாறு கடத்தப்பட்ட அவரிடம் பல்வேறு விடயங்கள் குறித்து கடத்தல்காரர்கள் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

சில தினங்களுக்கு முன்னர் சுவிஸில் தஞ்சம் கோரிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறித்தே தூதரக அதிகாரியிடம் இவ்வாறு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.