சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற “கீழடி” சிறப்புக் கருத்தரங்கம்!

சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்திய “கீழடியில் கிளைவிட்ட வேர்” – சிறப்புக் கருத்தரங்கம், அரங்கு நிரம்பிய பார்வையாளர்களுடன் மாநாட்டைப் போல் எழுச்சியாக நடைபெற்றது.


தமிழர் தொன்மை நாகரிகத்தை பறைசாற்றும் கீழடி அகழாய்வு குறித்து, இன்று ஞாயிறு 2019 திசம்பர் 8 மாலை, சென்னையில் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை “கீழடியில் கிளைவிட்ட வேர்” என்ற தலைப்பில் “சிறப்புக் கருத்தரங்கம்” நடத்தியது.

சென்னை பெரியமேடு “தி சால்வேசன் ஆர்மி” அரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன் தலைமை தாங்கினார். கீழடியின் வரலாறு மறைக்கப்படுவது குறித்து தனது தலைமையுரையில் முழுநிலவன் எடுத்துரைத்தார்.

த.க.இ.பே. தலைவர் பாவலர் கவிபாஸ்கர் கீழடி அகழாய்வு எப்படி தொடங்கியது என்பது குறித்து திரைக்கதைப் போல உரையாற்றி, எழுச்சிமிகு கவிதையும் வழங்கி வரவேற்புரையாற்றினார்.

முன்னதாக, நிகழ்வின் தொடக்கமாக இசைக்கலைஞர் திரு. த. இரவீந்திரன் அவர்களின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. திரு. இரவீந்திரன் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் நினைவுப் பரிசு வழங்கினார்.

“கீழடித் தொன்மை” என்ற தலைப்பிலான, ஒளிப்படக் கண்காட்சியை திரைக்கலைஞர் திரு. பொன்வண்ணன் அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார். இக்கண்காட்சியில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றன. பார்வையாளர்கள் பலரும் அதனை புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

“மாண்டவர்களின் மறபிறப்பு” என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் கருத்துரையாற்றினார். கீழடி தமிழர் நாகரிகம், பாரத நாகரிகமாகவும், திராவிட நாகரிகமாகவும் திரிக்கப்படுவதை தனது பேச்சில் தோழர் பெ. மணியரசன் சுட்டிக்காட்டினார். கீழடிக்கும் ஆதிச்சநல்லூருக்கும் இன்னும் உள்ள தொல்லியல் ஆய்விடங்களுக்கு இன்று பெரும் எண்ணிக்கையில் செல்லும் இளையோர், நமது தமிழர் தொன்மை நாகரிகத்தை புரிந்து கொண்டு பரப்புவதோடு, உரிமை பெற்ற தமிழர்களாக எதிர்கால மக்கள் வாழ்வதற்குப் பணியாற்ற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிறைவாக, “மண்மூடிய தமிழர் வாழ்வு” என்ற தலைப்பில், கீழடியை அகழாய்வு செய்து வெளிப்படுத்திய இந்தியத் தொல்லியல் துறை ஆய்வறிஞர் திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள் காட்சிப் படங்களுடன் கருத்துரையாற்றினார். கீழடிக்கு முன்னதாக வைகை ஆற்றங்கரையில் பல்வேறு இடங்களுக்கு ஆய்வுக்காகச் சென்றபோது, அங்கு தமது வீட்டில் கிடைத்த கருப்பு சிவப்பு வகை சிறிய வகைத் தாழியைக் கொண்டு வந்து அளித்த ஒரு முதியவரின் படத்தை முதல் முறையாக வெளியிட்டு, இவர்களைப் போன்றோர்தாம் இந்த ஆய்வுக்கு முகாமையான உதவிகளைச் செய்தனர் என்று தெரிவித்தார். இதில் கிடைத்த தொல்லியல் சின்னங்களின் படங்களை மக்கள் மயமாக்கியது குறித்தும், இத்தொல்லியல் பணியை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றும் எடுத்துரைத்தார். நிகழ்வை, தோழர் நா. வைகறை ஒருங்கிணைத்தார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் பி. யோகீசுரன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலவன், அண்ணல் தங்கோ பெயரன் திரு. செ. அருள்செல்வன், ம.பொ.சி. பெயரன் திரு. திருஞானம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் நிகழ்வில் பார்வையாளராகப் பங்கேற்றனர்.

அரங்கு முழுவதும் நிரம்பி வழிந்த பார்வையாளர்கள் பலர் நின்று கொண்டே சிறப்பு விருந்தினர்களின் உரையைக் கேட்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.