பீப்பாய்கள் வந்த காரணம் வெளியானது!!

யாழ்ப்பாணத்தை சீரழிக்க இரகசிய திட்டம் என அனேகமாக எல்லா இணையத்தளங்களும் அது பற்றி செய்தி வெளியிட்டு விட்டன. ஆனால், அந்த பச்சை பீப்பாய்கள் எப்படி சீரழிக்கப் போகிறது என்பது பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. பச்சைச் சட்டை போட்டால் அடிப்போம் பாணியில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.



அந்த பீப்பாய் வடிவ உருளைகள் யாழ்ப்பாணம் மறவன்புலோ பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த பகுதியில் எல்.எம்.எல் என்ற தனியார் நிறுவனம் காற்றாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றபோதும், அதை கணக்கிலெடுக்காமல் காற்றாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று (11) நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அந்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமையை பார்வையிட்டிருந்தார். சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் வாமதேவனும் அங்கு சென்றிருந்தார். திட்டம் குறித்து, அதன் சாதக பாதகங்கள் குறித்தும் நிறுவன பொறியியலாளர்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். தமது திட்டம் குறித்து நிறுவனத்தினர் அவருக்கு விளக்கமளித்திருந்தனர்.

அந்த சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், 24 பீப்பாய்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த உருளை வடிவ பீப்பாய்களை நிறுவி, அதன் மேலேயே காற்றாடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பீப்பாயும் 80 அடி நீளமானது. ஒன்றின் மேல் ஒன்றாக 3 பீப்பாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மேலேயே காற்றாடி அமைக்கப்படவுள்ளது.

3 பீப்பாய்களை நிறுவும்போது, 240 அடி உயரமாகி விடும். அதன் மேல் 10 அடியில் கம்பமொன்று பொருத்தி- 250 அடி உயரத்திலேயே காற்றாடிகள் பொருத்தப்படும். காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக இருக்கும். தரையிலிருந்து 400 அடிக்கு சற்று மேல் வரை காற்றாடி விசிறிகள் சுழலும்.

8 காற்றாடிகளின் மூலமாக 20 மெகா வோட்ஸ் மின்சாரத்தை அந்த நிறுவனம் உற்பத்தி செய்து, தேசிய மின் கட்டமைப்பிற்கு விற்பனை செய்யவுள்ளது. ஒவ்வொரு யுனிட்டும் 12.75 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். அதை அரசு 23 ரூபாவிற்கு பொதுமக்களிற்கு விற்பனை செய்யும்.

ஏற்கனவே பளையில் 16 காற்றாடிகள் அமைக்கப்பட்டு இன்னொரு தனியார் நிறுவனம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. அதிலிருந்து 19 மெகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

காற்றாலை மின் உற்பத்தியால் பாதிப்புக்கள் உள்ளதா இல்லையா என்ற சர்ச்சைகள், பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியில் இந்த திட்டம் நடந்து வருகிறது.

அங்கு பார்வையிட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது, “இந்த திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், இந்த திட்டம் குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது. அதை இதுவரை நிறுவனமோ, அரசாங்கமோ நிவர்த்தி செய்யப்படவில்லை. மக்களின் அச்சம் நீக்கப்பட வேண்டும்.

அனைத்து அனுமதிகளும் கொழும்பில் பெறப்பட்டுள்ளது. இப்படியான திட்டங்கள் மேற்கொள்ளும்போது, வருமானத்தின் 15 வீதம் அந்த பகுதி உள்ளூராட்சிமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் பளை காற்றாலை நிறுவனத்தினால் 2 வீதமான வருமானமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம், இந்த பகுதி மக்களிற்கு என்ன செய்யப் போகிறது என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. குறைந்த விலையான காணிகள் அதிக விலைக்கு நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது. பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. காற்றாலையால் ஏதாவது பக்க விளைவுகள் உள்ளதா போன்ற சந்தேகங்கள் மக்களிடம் உள்ளது. இவைதான் மக்களை அச்சப்படுத்தியுள்ளது. இவை தொடர்பில் நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும்“ என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.