வடகொரியாவுடன் சமரசம் செய்ய விரும்பும் அமெரிக்கா!

அமெரிக்காவின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியாவுடன் சமரசம் செய்ய அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.


அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீபன் பீகன் வெளியிட்டுள்ள கருத்து, இதனை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அணுஆயுதங்களை முற்றிலுமாக கைவிடுவது தொடர்பாக அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்த போவதில்லை என்று வடகொரியா அண்மையில் அறிவித்திருந்த நிலையில், சிங்கப்பூரில் நடந்த வரலாற்று உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் செய்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலக்கு தங்களிடம் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

தென்கொரியாவுக்கு சென்றுள்ள, அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீபன் பீகன், கொரிய தீபகற்ப அமைதி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான தென்கொரிய சிறப்பு தூதர் லீ டோ ஹூனை சந்தித்து பேசியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், ‘நாம் நமது கடமைகளை செய்வதற்கான நேரம் இது. நாங்கள் பேச்சுவார்த்தைக்காக இங்கே இருக்கிறோம். அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்கு தெரியும்.

ஒன்றை மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன். அணு ஆயுத பேச்சுவார்த்தை அமெரிக்கா காலக்கெடு விதிக்கவில்லை. சிங்கப்பூரில் நடந்த வரலாற்று உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களும் செய்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலக்கு எங்களிடம் உள்ளது’ கூறினார்.

அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வந்த வடகொரியாவை, அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம், முதல் முறையாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிட்டு சொல்லும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.இதனால் ட்ரம்பும், கிம் ஜோங் அன்னும் இரண்டாவது முறையாக கடந்த பெப்ரவரி மாதம் வியட்நாமில் சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை எதிர்பாராத விதமாக தோல்வியில் முடிந்ததால் இருநாடுகளுக்கு இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தை முடங்கி போனது.

இந்த சூழலில் யாரும் எதிர்பாரத வகையில் ட்ரம்ப், கடந்த ஜூன் மாதம் வடகொரியாவுக்கு நேரில் சென்று கிம் ஜோங் அன்னை சந்தித்தார்.
அப்போது முடங்கிப்போன அணுஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது என இருநாட்டு தலைவர்களும் உறுதிபூண்டனர்.இதற்கிடையில் வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன.

இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளால் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா கூறி வந்தது.

ஆனால் வடகொரியாவோ, அமெரிக்கா தனது விரோதப்போக்கை மாற்றிக்கொள்ளும் வரை அணுஆயுத பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது என கூறியது. மேலும் குறிப்பிடத்தக்க பொருளாதார தடைகளை நீக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் கொண்டுவர அமெரிக்காவுக்கு வடகொரியா காலக்கெடு நிர்ணயித்தது.

அமெரிக்கா அப்படி செய்யாவிட்டால் வடகொரியா புதிய பாதையை கடைபிடிக்கும் என அந்த நாடு பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதுபற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் அமெரிக்கா இதுவரை மௌனம் காத்துவருகின்றது.

இருநாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை கைவிடுவதாக அறிவித்தன. அதுமட்டும் இன்றி இந்த அறிவிப்பை வெளியிட்ட ஒரு வாரத்துக்குள் அடுத்தடுத்து 2 முறை முக்கிய சோதனைகளை நடத்தி வடகொரியா அதிரவைத்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.