வவுனியாவில் புலம்பெயர் உறவுகள் நலம் வேண்டி விசேட வழிபாடு!!

சர்வதேச புலம்பெயர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் உறவுகளுக்கான விசேட பூசையும், நெய்தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வும் இடம்பெற்றது.


இந்நிகழ்வு இன்று (புதன்கிழமை) குட்செட் வீதி ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் தமிழ் விருட்சம் அமைப்பினர் மற்றும் ஆலய பரிபாலன சபை ஏற்பாட்டில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நா.பிரபாகரகுருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது புலம்பெயர்ந்து வாழ்ந்து மறைந்த உறவுகளுக்கும், ஆபத்தான கடற்பயணங்களில் மரணித்த உறவுகளுக்கும், புலம்பெயரும் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் மரணித்த உறவுகளுக்கும் ஆத்மாசாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றது.

அத்துடன், இன்னும் அகதி வாழ்க்கை வாழும் உறவுகள் வாழ்வில் விடிவு கிடைக்க வேண்டி விசேட பூசை வழிபாடும் இடம்பெற்றதுடன் அவர்கள் நினைவாக ,நெய் தீபம் ஏற்றி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், நகரசபை உறுப்பினர் சுமந்திரன், ஆலய பரிபாலன சபையினர், சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், பக்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விசேட பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து சிவஸ்ரீ பிரபாகரகுருக்கள் உரையாற்றுகையில், “பலவிதமான வடுக்கள், துன்பங்கள் எதிர்பார்க்காத அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இந்த நாட்டிலே இருந்து புறப்பட்டு அயல் நாடுகளிலே இன்றும் ஏதோ ஒரு விதத்திலே தங்களுடைய வாழ்க்கையை கொண்டு செல்கிறவர்கள், இன்றைய தினமும் அகதிகளாக இருகின்றவர்கள், அயல் நாடுகளில் சென்று தங்களுடைய உயிரை விட்டவர்கள், அயல் நாடு செல்கின்ற போது எதிர்பாராத விதமாக எங்களைவிட்டு பிரிந்தவர்கள் இவ்வாறு எதோ ஒரு வகையிலே எங்களைவிட்டு பிரிந்தவர்கள், புலம்பெயர் தேசத்தில் வாழுகின்றவர்கள் மனதிலே உள்ள கவலைகள் கடந்து மண்ணில் நல்ல வண்ணம் வாழ வேண்டும்.

அவர்களுடைய எண்ணங்கள், சிந்தனைகள், உதவிகள் எல்லாம் இந்த நாட்டிலே வாழுகின்ற உறவுகளின் மறுவாழ்விற்காக தொடர்ந்து என்றும் இருக்க வேண்டும். அந்நிய நாடுகளுக்கு சென்று எங்களை விட்டு பிரிந்த உறவுகளின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், “எங்களுடைய உறவுகள் இந்த நாடிலே ஏற்பட்டிருக்கக் கூடிய யுத்த சூழ்நிலை காரணமாக கிட்டத்தட்ட பதினைந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஐரோப்பிய நாடுகளிலும் அயல் நாடான இந்தியாவிலும் இருகின்றார்கள்.

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளுக்கு சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆபத்தான முறையில் கடலாக செல்லும் போது கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக ஆத்மா சாந்தி பூசையும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற உறவுகளுக்காகவும் இவ்வாறு நடைபெறுகின்ற பூசை வழிபாடும் மிகவும் அவசியமானது.

புலம்பெயர்ந்து இருக்கக்கூடிய மக்களினுடைய நிதிப் பங்களிப்பு, உதவிகள், ஒத்தாசைகள் இல்லையென்றால் ஒரு வருட காலத்திலேயே எங்களுடைய மக்கள் பட்டினியில் தான் செத்திருப்பார்கள். அவ்வாறான நேரத்தில் புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்களின் உதவிகள் தான் பல்வேறு உயிர்களைக் காப்பாற்றியிருகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.