நதியின் கோடுகளால் ஏங்கிய உலகம்!

நதியின் கோடுகளைப் பற்றி எதுவும் வரையலாம்
நதி தன் கோடுகளை தன்னுடன் வைத்திருப்பதில்லை
கோடுகளை எறிந்து காடுகளைக் கடந்து மலைகளைக் குளித்து பள்ளத்துள் உறங்கும் சில நேரம் கடலையும் கடக்கும்

நதிக்கும் மனிதர்க்கும் எல்லாம் பொருந்தும்
பொருந்தாமலும் இருக்கும்
அக்காளைக் கண்டவுடன்
அண்ணனைக் கண்டவுடன்
அம்மாளைக் கண்டவுடன்
அவளைக் கண்டவுடன் என மன நதி தன் கோடுகளின் குணநிறத்தை மாற்றி மாற்றி பாயும்

சிக்மன் பிரைட்டும் ஒரு மனிதன் தான்
மனிதனை மனிதன் அளவிட அவரால் கொஞ்சமாகத்தான் முடியும்

மனங்களின் நீள அகலம் அறுந்து சிதறும் ஆறுகளைப்போல்
காவேரிக்கும் கன்னியாகுமரிக்கும் தொடர்பில்லையா
இரணைமடுவுக்கும் யாழ்நீரேரிக்கும் தொடர்பில்லையை
உண்டு
எல்லாம் நீர்க்கோடுகளால் பின்னப்பட்டது

வானம் துப்பிய எச்சிலை பிரித்து எடுப்பதில்
எவ்வளவு சண்டை
அணையை மூடுவது
குளத்தை திறப்பது என மனநதியைக் கறுப்பாக்கினான் நவீனமாந்தன்

காதலி குளித்த நீரைப் பன்னீரெனப் பருகும் காதலன் போல்
காதலியின் எச்சிலை அமுதரசமெனச் சுவைக்கும் ஆணைப்போல்
நதியின் கோடுகளையும் அழகாக்கினான் அரசர்கால மனிதன்
நதியை ஒரு பெண்ணாக்கி அதன் வளைவை ஆடை இடையாக்கி பாடினான் பழைய பாவலன்

இன்று நதியை நிலமாக்கி
மனதை இயந்திரம் பூசி
வான எச்சிலை விரகமாக்கினர்

நதியின் கோடு வீரியமாகி அவுக்கென விழுங்கியது நம்மை
நாளை அந்த வீரியங்குறைய நதியின் கோடுகளுக்கு வழிவிடுவோம்
நம் மனதின் பாலை பசுமையாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.