எமக்கான வாழ்வைத் தந்தோரின் வாழ்வு? – சமூகநேயன்!

உள்ளத்தில் உயர்வலு கொண்டு எமது சுதந்திரமான வாழ்வுக்காகவும் மண் விடுதலைக்காகவும் உறுதியோடு போராடியவர்கள்,  இன்று மாற்றுத் திறனாளிகளாக எம் மண்ணில் வாழ்ந்து வருகின்றார்கள்.


முள்ளிவாய்க்கால் வரையும் எமது தேசியத் தலைமை இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தம்மால் முடிந்தவரை எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து உயர் உளவலுவோடு அவர்களை பராமரித்து வந்தது. வெற்றுப் பேச்சோடு நின்று விடாது உண்மையான மாற்றுத் திறனாளிகளாக அவர்களால் முடிந்த வழியில் தேச விடுதலைப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

முள்ளிவாய்க்காலின் பின்னர் மாற்றுத் திறனாளிகளின் நிலை பலத்த கேள்விக் குறிக்குள்ளானது. சாதாரணமானவர்களின் வாழ்வியல் தேவைகளும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியல் தேவைகளும் மிகவும் வித்தியாசமானவை.

சாதாரணமானவர்களால் அதனை விளங்கிக் கொள்வதும் இன்னொருவரின் வலிகளை புரிந்து கொள்வதும் மிகவும் கடினமானது. அதுவும் எமக்கான கடின உழைப்பில் கழுத்துக்கு கீழும் இடுப்புக்கு கீழும் உணர்வின்றி இயக்கமின்றி வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கையையும் வலிகளையும் புரிந்து கொள்வதென்பது இலகுவான காரியமல்ல. அதற்கு எங்களை இன்னொருவரது இடத்தில் வைத்துப் பார்க்கின்ற தன்மையும் பண்பும் மிகமிக அவசியமானது. இந்த உலகத்தில் நடக்கின்ற அத்தனை பிரச்சனைகளுக்கும் அச்சாரமானதும் இந்தப் பார்வையின் குறைபாடே.

படுக்கையில் கிடந்தபடி தமது எஞ்சிய காலத்தை விரக்தியோடு வாழ்வதென்பது வலி மிகுந்தது. மிகுந்த உளவியல் தாக்கத்தை தர வல்லது. இப்படியானவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த போராட்டத்தால் இலட்சக் கணக்கில் புலம் பெயர்ந்து ஏதிலிகளாக இவர்கள் தந்த வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். அந்த வகையில் இந்த வாழ்வைத் தந்தவர்களில் நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்க்கையை பத்தாண்டுகளின் பின்பும் நாங்கள் முழுமையாக கவனிக்காமல் இருப்பதென்பது எந்த விதத்திலும் மனித நேயமற்றதும் கடும் சாபத்திற்குரியதும் ஆகும். அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் நாளான டிசம்பர் 3 இல் இதனை நாம் சரிவர உள்வாங்கிக் கொள்வோம்.

இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் பெரு வியாபாரிகளும் சிறு வியாபாரிகளும் உதவுகின்ற பாணியில் தமது வியாபாரத் தந்திரமான மலின விளம்பரங்களை அரங்கேற்றி வருகின்றனர். வாழ்வாதாரத்திற்காக ஏங்கும் உயரிய கொடையாளிகளின் நாளாந்தத் தேவையை பலவீனமாகப் பார்க்கின்றார்கள். செயல்களோடு மட்டும் நின்றுவிட வேண்டிய பணியை நிழற்படங்களாக்கி உலகப் பரப்பெங்கும் பரவ விடுகின்றார்கள். துரதிஸ்ட வசமாக இந்த இடைவெளியை ஏற்படுத்திக் கொடுத்தவர்களாக இன்று உணர்வாளர்களாகிய நாங்களே இருக்கின்றோம்.

உலகப் பரப்பெங்கும் பரவி வாழும் தமிழீழ உணர்வாளர்களாகிய நாங்கள் ஒன்றுபடாதபடி பார்த்துக் கொள்வதில் இலங்கை அரசு நாசூக்காக பல செயற் திட்டங்களை பல கோடி நிதி ஒதுக்கீட்டோடு மேற்கொண்டு வருகின்றதென்பதை நாம் முழுமையாக விளங்கிக் கொண்டாக வேண்டும். அவர்களின் பிரச்சாரத் தந்திரங்களில் எடுபட்டு செய்ய வேண்டிய வேலைகளை நாம் செய்யாதிருக்க வேண்டுமென்பதே அவர்களது நரித் தந்திரம். இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு நாம் செய்ய வேண்டிய பணிகளை சரியான வழியில் ஒருங்கிணைத்து சரியான திட்டமிடலோடு நாம் முன்னெடுக்க வேண்டும். அதற்கு முதற் கட்டமாக எமக்கான வாழ்வைத் தந்தவர்களின் வாழ்வை நாம் வளமாக்க வேண்டும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.