சண்டே ஸ்பெஷல் - வீட்டிலேயே செய்யலாம் கேக்!

புத்தாண்டு பிறக்கும் இந்த நேரத்தில் பலருக்கும் வீட்டிலேயே கேக் செய்யும் ஆசை இருக்கும். ஆனால், ஏதோ ஒரு சின்ன தவற்றால் அந்த கேக் வீட்டிலுள்ளவர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகிவிடும். இதை எளிதாகத் தவிர்த்து, சுவையான கேக் தயாரிக்கலாம்.


எப்படி?

* கேக்கின் ஓரங்களில் பிரவுன் நிறம் வேண்டாதவர்கள் கேக் டிரேயில் மைதா மாவு தூவுவதற்குப் பதிலாக பட்டர் ஷீட் பயன்படுத்தலாம்.

* மைதா மாவு, பேக்கிங் பவுடர் போன்ற உலர்ந்த பொருள்களுடன் எண்ணெய், வெண்ணெய் போன்ற ஈரப்பசை உள்ள பொருள்களைச் சேர்த்துக் கலந்த உடனேயே `பேக்’ செய்யவும். ஏனெனில், கலந்த உடனே அதன் வேதிவினை செயல்பட தொடங்கிவிடும். நீண்ட நேரம் வெளியே வைக்கக் கூடாது. அதேபோல உலர்ந்த பொருள்களுடன் ஈரப்பசை உள்ள பொருள்களைச் சேர்த்து கலக்கும்போது மிருதுவாகக் கலக்கவும். கலவையை நீண்ட நேரம் அடிக்கக் கூடாது.

* செயற்கை கலர்களை கேக் கலவையுடன் இறுதியாகச் சேர்க்கவும்.

* கேக் கலவையை கேக் டிரேயில் ஊற்றிய பிறகு அதை மீண்டும் கிளறவோ, கலக்கவோ கூடாது.

* கேக் டிரேயில் முக்கால் பாகம் வரை மட்டுமே கேக் கலவையை நிரப்ப வேண்டும். அப்போது தான் கேக் கலவை நன்கு எழும்பி, மிருதுவாக வரும்.

* சாக்லேட் கேக் செய்யும்போது நாம் கேக் செய்யப் பயன்படுத்தும் மாவில் 15 சதவிகிதம் மாவுக்குப் பதிலாக கோகோ பவுடரைச் சேர்க்கலாம் (இது பொதுவான அளவு. விருப்பத்துக் கேற்ப கூட்டாவோ, குறைக்கவோ செய்யலாம்).

* பேக் செய்த கேக்குகளை ஆறிய பிறகு பயன்படுத்தவும்.

* கேக் செய்வதற்கு முட்டைக் கலவையை அதிக நேரம் அடித்தால் கேக் ரப்பர் / எலாஸ்டிக் தன்மையுடன் இருக்கும்.

* கேக் மற்றும் மஃப்பின்கள் ஆறிய பிறகு உலர்தன்மை அடையக்கூடியவை என்பதால், அவற்றை தேவைக்கு அதிகமான நேரத்துக்கு `பேக்’ செய்யக் கூடாது.

* கேக் கலவையை பிரீஹீட் செய்த அவனுள் வைத்த பிறகு பேக் செய்யக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு முன்னால் திறக்கக் கூடாது.

* டூத்பிக்கால் கேக்கைக் குத்திப் பார்த்து வெந்துவிட்டதா என்று உறுதி செய்யவும். கேக் கலவை டூத் பிக்கில் ஒட்டினால் மீண்டும் சிறிது நேரம் வேகவிட்டு எடுக்கவும்.

* `பேக்’ ஆன பிறகு நீண்ட நேரம் அவனுள் கேக்கை வைக்கக் கூடாது. நீண்ட நேரம் உள்ளேயே இருந்தால் கேக் தன் மிருதுவான தன்மையை இழந்து வறண்டுவிடும்.

* அவனில் அதிகப்படியான டிரேக்களைத் திணிக்கக் கூடாது.

* கேக் கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு பால் அல்லது நீர்விட்டுக் கலந்து சரியான பதத்துக்குக் கொண்டுவரலாம்.

* கேக் தயாரிக்கும்போது சுவைகூட்ட ஃப்ரூட் சிரப் அல்லது நசுக்கிய பழத்தைச் சேர்க்கலாம் அல்லது கேக் கலவையின் ஒவ்வொரு லேயரிலும் பழத்துண்டுகள் சேர்த்து இறுதியாகப் பழக்கூழை மேலே ஊற்றி அலங்கரிக்க... `ரிச்’சாகத் தெரியும்.

சிறப்பு

பெரும்பாலான கேக்குகளை குக்கரில் செய்து விடலாம். குக்கரின் அடியில் மணல் அல்லது உப்பு சேர்த்து கேக்குகளை பேக் செய்வது சிறந்தது.

 அலுமினிய குக்கர்களையே பயன்படுத்தவும். கேஸ்கெட், விசில் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.

 குக்கரை 10 நிமிடங்கள் பிரீஹீட் செய்த பிறகே பயன்படுத்தவும். பேக் செய்ய 20 நிமிடங்கள் முதல் அரைமணி நேரம் வரை ஆகும்.

 அது தேர்ந்தெடுக்கும் ரெசிப்பி, தீயின் அளவு, எந்த குக்கர் என்பதைப் பொறுத்து மாறுபடும். குக்கரின் மூடியைத் திறக்கும்போது மெதுவாகக் கவனமாகத் திறக்கவும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.